தேனி : தேனியில் பி.ஓ.எஸ்., மிஷின் மூலம் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் 59 பேரிடம் ரூ.10,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு 18 எம்.பரிவாகன்' செயலி பதிவேற்றம் செய்த பி.ஓ.எஸ்.,' மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., கனி, - மதுரை ரோட்டில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். இதில் இருவர் 'ஹெல்மெட்' இல்லாமல் பயணம் செய்து சிக்கினர். அவர்களிடம் இருந்த வங்கி டெபிட் கார்டு மூலம் அபராதத் தொகையை, இ-ரசீது பெறும், பி.ஓ.எஸ்., மிஷின் மூலம் பெற்றனர்.இன்ஸ்பெக்டர் கூறுகையில், 'இ-ரசீது வழங்கும் மிஷினில் வட்டார போக்குவரத்து அலுவலக எம்.பரிவாகன்' செயலி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அதில் சென்று விதிமீறிய வாகனத்தின் பதிவு எண்ணை அடித்தால், வாகன உரிமையாளரின் விபரங்கள் தெரிந்துவிடும். பின் அதில் அபராதத் தொகையை கணக்கிட்டு பதிவேற்றம் செய்து, வாகன ஓட்டிகளுக்கு ரசீது தந்து விடுவோம். தேனியில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற 26 பேர், அலைபேசி பேசிக்கொண்டு சென்ற ஒருவர், அதிக எடை ஏற்றிச் சென்றது 4, அதிக உயரம் எடை ஏற்றியது 1, பதிவு சான்றிதழ் இல்லாமல் சென்றவர்கள் 2, அதிக ஒளி எழுப்பிச் சென்ற ஒருவர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்ற நால்வர் உள்ளிட்ட மொத்தம் 59 பேருக்கு ரூ.10,700 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது, என்றார்.