பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 'புத்துயிர்' பெறும் பாலிதீன்

Added : ஆக 28, 2019
Advertisement
மதுரை, புத்துயிர், பாலிதீன்,Madurai,

மதுரை: இயற்கைக்கும், உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டு 8 மாதங்களை தொட்ட நிலையில் மதுரையில் தாராளமாக கிடைக்கின்றன. இதன் பிடியில் இருந்து மதுரையை முழுமையாக மீட்க வியாபாரிகள், மக்களிடம் மனமாற்றம் தேவை.


புத்துயிர் பெற்ற பாலிதீன்

தடிமன் வேறுபாடின்றி 14 வகை பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை தயாரிக்க, விற்க தமிழக அரசு தடை விதித்தது. இத்தடை ஜன.,1 முதல் அமலுக்கு வந்தது. மதுரை நகரில் மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பால் படிப்படியாக பயன்பாடு குறைந்தது. மக்களும் உணவு மற்றும் இதர பொருட்கள் வாங்க பாத்திரம், துணிப்பைகளை உபயோகிக்க துவங்கினர்.ஆனால் அரசின் கவனம் குறைந்ததால், சில மாதங்களிலேயே பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் புத்துயிர் பெற்றுவிட்டன. உணவு பொட்டலங்கள், தேநீர், மளிகை பொருட்களை இப்போதும் தடை செய்யப்பட்ட பொருட்களிலேயே கொடுக்கின்றனர். பூ மார்க்கெட்டில் பாலிதீன் பைகளில் தான் பூக்களை கொண்டு வந்து, வாங்கி செல்கின்றனர். அதிகாரிகளின் அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஒளித்து வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் ஓட்டல்களுக்கு பாத்திரங்களை எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டனர்.ஆய்வில் அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அடுத்த முறை அதே பகுதிக்கு ஆய்வுக்கு வர மேலும் சில வாரங்கள் ஆகின்றன. இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த துவங்கிவிடுகின்றனர். இதை தடுப்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு குதிரை கொம்பாக விளங்குகிறது.


மாற்றுப்பொருட்களுக்கு மாற வேண்டும்


மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை மட்டும் வைத்து மதுரையில் பாலிதீன், பிளாஸ்டிக்கை ஒழிப்பது கடினம். வியாபாரிகளும், மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை அறிய வேண்டும். குப்பை தொட்டியை சேரும் பாலிதீன் மக்க பல ஆண்டுகளாகி, விளை பொருட்கள் தரும் நம் மண்னை மலடாக்குமே என்பதை உணர வேண்டும்.நமக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஒழிக்க தாமாக முன்வருவது தானே சரி. அல்லது, அதற்கான அரசின் நடவடிக்கைக்காவது ஒத்துழைக்க வேண்டாமா. மதுரையில் பாலிதீன் அரக்கனை ஒழிக்க வியாபாரிகளும், மக்களும் மாற்றுப் பொருட்களுக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.


அதிகாரிகளின் புலம்பல்


14 வகை பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை தயாரிப்பது குற்றம். ஆனால் திருட்டுத்தனமாக சில தொழிற்சாலைகள் உற்பத்தி செய்கின்றன. எங்களின் அபராத நடவடிக்கை, பறிமுதல் நடவடிக்கை ஓரளவுக்கு தான் கைகொடுக்கும். உற்பத்தியை தடுப்பதே சிறந்த நடவடிக்கை. அந்நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அனுமதியை மாசுகட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்ய வேண்டும். சீரான இடைவெளியில் அந்த துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் தடை பொருட்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே நிரந்தர தீர்வாக இருக்கும், என மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


இளநீர் குடிக்க பேப்பர் ஸ்ட்ரா

பாலிதீன் பைகளை போல ஜூஸ், இளநீர் குடிக்க பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கும் தடை உள்ளது. மாற்று ஸ்ட்ரா இல்லாததால் சில மாதங்கள் ஸ்ட்ரா இல்லாமல் வியாபாரம் செய்தேன். ஸ்ட்ரா இல்லாமல் பெரியவர்கள் எளிதாக குடித்தாலும் குழந்தைகளுக்கு சிரமமாக இருந்தது. அதற்கு பிறகு தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்றுப் பொருட்கள் பிரபலமாக துவங்கின. அன்று முதல் கனமான பேப்பர் ஸ்ட்ரா தான் பயன்படுத்தி வருகிறேன். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 50 பிளாஸ்டிக் ஸ்ட்ரா கொண்ட ஒரு பாக்கெட் 6 ரூபாய் தான். ஆனால், 50 ஸ்ட்ரா கொண்ட பேப்பர் ஸட்ரா 50 ரூபாய். பிளாஸ்டிக் ஸ்ட்ராவை ஒப்பிடும் போது பேப்பர் ஸ்ட்ரா விலை அதிகம் தான். தரமான பொருட்களை தரமான முறையில் பரிமாற வேண்டும் என்ற நோக்கத்தில் விலையை பற்றி கவலைப்படாமல் பேப்பர் ஸ்ட்ரா தருகிறேன்.- கே.ராமகிருஷ்ணன்இளநீர் வியாபாரி, பைபாஸ் ரோடு.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X