விரைவில்! வருமான வரி அதிரடி குறைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விரைவில்! வருமான வரி அதிரடி குறைப்பு

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (37)
  விரைவில்! ,வருமான வரி, அதிரடி, குறைப்பு

புதுடில்லி:'நாட்டில், 58 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள வருமான வரி விதிப்பு சட்டங்களில், மாற்றம் செய்ய வேண்டும்; வருமான வரி விதிப்பு சதவீதத்தை குறைப்பதுடன், வரி விகித வரம்பை, நான்கிலிருந்து, ஐந்தாக உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு, நேரடி வரிகள் குறித்த ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, 2014ம் ஆண்டு பதவியேற்றதிலிருந்தே, வருமான வரி வசூலில், அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


புதிய வரிவிதிப்பு'இப்போதுள்ள வருமான வரி விதிப்பு முறைகளை, மறு ஆய்வு செய்ய வேண்டும்; நாட்டின் பொருளாதார தேவைக்கு ஏற்ப, புதிய வரிவிதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்' என, பலதரப்பிலும் இருந்து, கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து, நேரடி வரி விதிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஆய்வுக்குழு ஒன்றை, 2017ம் ஆண்டு, மத்திய நிதி
அமைச்சகம் நியமித்தது.

இந்த ஆய்வுக்குழு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி, தங்கள் அறிக்கையை, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனிடம், ஆகஸ்ட், 19ல், சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை, இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆய்வு குழு பரிந்துரைத்துள்ள முக்கிய அம்சங்கள் பற்றி, மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டில், 58 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள வருமான வரி விதிப்பு சட்டங்களில், மாற்றம் செய்ய வேண்டும்; வருமான வரி விதிப்பு வரம்புகளை, நான்கிலிருந்து, ஐந்தாக உயர்த்த வேண்டும்.இப்போது, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை, வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இதில், எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை.


நீட்டிக்க வேண்டும்தற்போது, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரம்பை, 10 லட்சம் ரூபாய் வரை நீட்டிக்க வேண்டும்; வருமான வரி விகிதத்தை, 10 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.எனினும், 10 சதவீத வரி நிர்ணயித்தாலும், 5 லட்சம் ரூபாய் வரை, ஏற்கனவே உள்ள வரிக் கழிவுகளை முழுமையாக அளிக்க வேண்டும். அதனால், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், இனி, வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இப்போது, 5 லட்சத்திலிருந்து, 10 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை, 10 சதவீதமாக குறைத்தால், ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய் மிச்சமாகும்.மேலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை, இரண்டு வரம்பாக பிரிக்க
வேண்டும்.

ஆண்டுக்கு, 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு, வரி விதிப்பை, 30 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால், இவர்களுக்கு, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை மிச்சமாக வாய்ப்பு உள்ளது.இதற்கடுத்தபடியாக, 20 லட்சம் முதல், 2 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 30 சதவீதமும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 35 சதவீதமும் வரி விதிக்க வேண்டும்.


கட்டாயம் இல்லைஇதனால், 2 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 8.5 லட்சம் ரூபாய் மிச்சமாகும்இவ்வாறு ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக, மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என, கட்டாயம் இல்லை. வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை, அரசு ஆய்வு செய்து வருகிறது. அதனால், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்பது சந்தேகமே' என்றார்.


உற்பத்தி அதிகரிக்கும்!இந்த பரிந்துரைகள் பற்றி, பிரபல ஆடிட்டர், ஜிதேந்திர சாப்ரா கூறியதாவது:இந்த பரிந்துரைகள் அனைத்தும், மேல் வரி விதிப்பை கணக்கில் எடுக்காமல் அளிக்கப்பட்டுள்ளன. இப்போது ஆண்டுக்கு, 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு, மேல் வரிகளையும் சேர்த்து, 42.7 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், அப்போது, மேல் வரிகள் விதிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பதை பொறுத்து தான், வரி விகிதத்தின் அளவை கணக்கிட முடியும்.
வரி விதிப்பை, சிறிய அளவில் குறைத்தாலும், அந்த பணம் தனிநபர் கையில் மீதமாகி, செலவிடப்படும்போது, பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும். இது, உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஆய்வுக்குழுவின் பரிந்துரை2.5 லட்சம் ரூபாய் வரை - விலக்கு

2.5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை - 10 சதவீதம்

10 லட்சம் - 20 லட்சம் ரூபாய் வரை - 20 சதவீதம்

20 லட்சம் - 2 கோடி ரூபாய் வரை - 30 சதவீதம்

2 கோடி ரூபாய்க்கு மேல் - 35 சதவீதம்


தற்போதைய வருமான வரி விகிதம்2.5 லட்சம் ரூபாய் வரை - விலக்கு

2.5 லட்சம் - 5 லட்சம் ரூபாய் வரை - 5 சதவீதம்

5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை - 20 சதவீதம் மற்றும் கூடுதல் வரி

10 லட்சம் ரூபாய்க்கு மேல் - 30 சதவீதம் மற்றும் கூடுதல் வரி

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X