புதுடில்லி : கேரளா குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவை, தனது அரசியல் தாக்குதலுக்கு காங்.,எம்.பி.,ராகுல் பயன்படுத்தி உள்ளது பலரிடமும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

கொச்சியில் நடந்த கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையின் விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசினார். இது பற்றிய டுவிட்டரில் மோடி குறிப்பிடுகையில், தனிப்பட்ட முறையில் கேரளா எனக்கு எப்போதும் ஸ்பெஷல். பல சமயங்களில் நான் கேரளா சென்றுள்ளேன். அதற்கு முதல் காரணம் மக்கள் என்னை மிகப் பெரிய ஆர்வத்துடன் வரவேற்பது. அதற்கு அடுத்தது, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வது என பதிவிட்டிருந்தார்.

இதை விமர்சித்துள்ள ராகுல் , மோடி அவர்களே...நீங்கள் கேரளா வந்து சென்ற பிகு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். நீங்கள் அந்த சமயத்தில் கேரளாவிற்கு சென்றிருந்தால் அது பாராட்டப்பட்டிருக்கும். கடும் இன்னலை சந்தித்து வரும் கேரளா, மற்ற மாநிலங்களைப் போல் நிவாரணத்திற்காக தற்போது வரை காத்திருக்கிறது. இது நியாயமற்றது என டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கேரளா வெள்ள பாதிப்புக்களை பார்வையிட சென்ற ராகுல், கடந்த 3 நாட்களாக தனது சொந்த தொகுதியான வயநாட்டில் இருந்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவ வேண்டும் என ஏற்கனவே மோடிக்கு, ராகுல் கடிதம் எழுதி இருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த வாரம் துவங்கி மத்திய அரசு நிவாரணங்களை வழங்கி வரும் நிலையில், மோடி பற்றிய ராகுலின் இந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE