ஆண்கள் தான், மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி, குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது, பொதுவான கருத்து. ஆனால், தமிழகத்தில் சமீபத்திய நிகழ்வுகள், பெண்கள் மீதான, என் உயர்ந்த கருத்தை, மாற்றிக் கொள்ளும்படிஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
ஆம்... 'ஆணோடு பெண், சரி நிகர் சமானமாக வாழ்வோம், இந்த பூமியில்' என, பெண் விடுதலைக்காக ஓங்கி குரல் கொடுத்தார், மஹாகவி பாரதி. அதை மெய்ப்பிப்பது போல, பெண்களுக்கு சவாலான, அரசியல், விளையாட்டுத் துறை மட்டுமின்றி, விண்வெளித் துறையையும் விட்டு வைக்காமல், மகத்தான சாதனை புரிகிறோம் நாம்.அதே சமயம், வழிப்பறி, கொள்ளை, கள்ள உறவு, கொலை போன்ற குற்றங்களிலும், ஆண்களுடன் போட்டி போட்டு, பெண்கள் முன்னேறி வருவது வருத்தமான, வெட்கப்பட வேண்டிய விஷயம். அதுவும், 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையையே, தவறான உறவுக்காக, கொலை செய்யும் அளவுக்கு, துணிந்து நிற்கின்றனர், சில பெண்கள்.
இது, கலிகாலம் என்று சொல்லி, சாதாரணமாக கடந்து விட முடியாது. சட்டங்கள் இன்னும் கடுமையாகவும், வழக்குகள் விரைவாகவும் முடிக்கப்பட்டால் மட்டுமே, நல்ல தீர்வு கிடைக்கும்.கணவன் - மனைவி உறவில் ஆழமான அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வேண்டும். மனைவி, குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், பிற ஊர்களுக்கும் வேலைக்குச் செல்லும் கணவனை, மனைவி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.தங்களது நல்ல வாழ்க்கைக்காகவே, அவன் அங்கு, நல்ல உணவு, வசதி இன்றி, தனிமையில் தன்னை வருத்திக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு, மனைவிக்கு வேண்டும். தவறான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினால், வீடு சுடுகாடாய் மாறிப் போகும்.தகாத உறவைக் கண்டித்த கணவனைக் கொன்று, குழந்தைகளையும் கொன்று, கடைசியில் சிறைவாசத்தில், சில பெண்களின் வாழ்க்கை முடிந்து, சின்னாபின்னமாகி விட்டதை, சமீபத்தில் ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. கூட இருப்பவர்களைக் குழியில் புதைத்து விட்டு, அப்படி என்ன சுகம் தேடுகிறாய் பெண்ணே?கள்ள உறவைக் காட்டிலும், முறையற்ற தகாத உறவு, இன்னும் அபத்தம். அண்ணனும், தங்கையும் முறையற்ற உறவு கொண்டதை, கண்டித்த தம்பி கொலை; சித்திக்கும், மகன் உறவு சிறுவனுக்கும் கள்ளக் காதல்... அதனால் கொலை என, இன்னும் சிலவற்றை எழுத, என் பேனா மறுக்கிறது.வயது முதிர்ந்த சில கிழங்கள் கூட, பச்சிளம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து படுத்தும் பாடு, வேதனையின் உச்சம். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை காக்கும், அத்தகைய குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், 'போக்சோ' சட்டம் வந்த பிறகும், குற்றங்கள் குறையவில்லையே... ஏன்?இதற்கெல்லாம் என்ன காரணம் அல்லது யார் காரணம்? போதிய படிப்பறிவு இல்லாததா, அதிகம் படித்த திமிரா, சமூகத்தின் மீதான பயம் குறைந்து விட்டதா, எதற்கும் அச்சப்படாத, கூச்சமில்லாத மன விகாரத்தின் வெளிப்பாடா, கடுமையான சட்டங்கள் இல்லாததா... எது தான், இந்த பிரச்னைக்கு காரணம்?சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு இல்லாதது தான், பிரச்னைகளுக்கு முக்கியமான காரணமாகத் தெரிகிறது.
இல்லாவிட்டால், எவனோ ஒருவன், நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளர் வேலைக்காக, நிர்வாண போட்டோ கேட்டான் என்றால், புத்தி இன்றி, எந்த பெண்ணாவது அனுப்புவாளா... அப்படி அனுப்பிய பெண்ணின் அபயக்குரல், சமீபத்தில் கேட்டது. இதில், குற்றம் யாருடையது?நயவஞ்சக வலை வீசியவன் மீதா அல்லது விரித்த மாய வலையில், தெரிந்தே சிக்கிய பெண்கள் மீதா! கொத்துக் கொத்தாய் மீன்கள் சிக்குவது போல, 600 பெண்கள் வரை, ஒரு கயவன் வீசிய வலையில், சிக்கி இருக்கின்றனர்!அவ்வளவு அறிவிழந்து போய் விட்டனரா நம் பெண்கள்... பணத் தேவையா அல்லது ஆடம்பர மோகமா... எது உங்களை, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள துாண்டியது? சாதாரணமாகவே, புகைப்படமோ அல்லது நம்மை பற்றிய விபரங்களையோ, சமூக ஊடகங்களில் பதிவிடக் கூடாது என்று, பாமர மக்களுக்கு கூட தெரியுமே... அப்படி இருக்க, எப்படித் துணிந்தீர்கள் பெண்களே?அற்ப உடல் சுகத்துக்காக, பெற்ற குழந்தைகளையே கொல்லும் பெண்களைத் தான், சகிக்கவும், மன்னிக்கவும் முடியவில்லை. அவர்களை, 'இந்த பூமியின் பாரம்' என்கிறேன்.உண்மையில், ஒரு தாய்க்கு அதிகபட்ச சந்தோஷம், சுகம் எது தெரியுமா... குழந்தை தன் பிஞ்சு விரல்களால், மார்பை பற்றியபடி, தன் குட்டி சொப்பு வாயால், அமிர்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்; ஊனும், உயிரும் அப்போது உருகிப் போகும். அந்த உன்னதமான சந்தோஷத்துக்கு, ஈடு, இணை ஏதும் இல்லை!
எனவே, கேவலமான, அபத்தமான, 'டிவி' தொடர்களையும், ஊடக காணொளிகளையும் பார்த்து, மனதையும், உடம்பையும், குடும்பத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர். அதற்குப் பதில், ஒரு அரை மணி நேரம், 'டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபிக்' போன்ற சேனல்களை பாருங்கள். விலங்குகளும், பறவைகளும், தான் ஈன்ற குட்டிகளிடம் பாச மழை பொழிவதையும், அவற்றுக்கு ஒரு ஆபத்து என்றால், காப்பாற்ற, துடிதுடித்து போராடுவதையும் பார்த்தாவது, கற்றுக் கொள்ளுங்கள்!ஐந்தறிவு விலங்குகளுக்கு இருக்கும், பாச உணர்வு கூட, நம்மிடம் குறைந்து வருவது, வேதனையாக உள்ளது.
அதிலும், தகாத உடல் சுகத்துக்காக, பெற்றவளே குழந்தைகளை கொல்லத் துணிவது, மன்னிக்க முடியாத குற்றம்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான், இயற்கை நியதி. ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில், தவறான துாண்டுதலில், அந்த நியதியை மீறினால், வாழ்க்கையே, 'சுனாமி'யாக மாறி விடும்!எதற்கும் அடங்க மறுத்து, எல்லை மீறினால், வாழ்க்கையே போர்க்களமாகி, குடும்பம் நிர்மூலமாகி விடும்.பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், பயந்து கொண்டிருப்பது போல, தற்போது ஆண்களுக்கும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஒரு பக்கம், ஆண்கள் இழைக்கும் பாலியல் வன்முறை, ஒரு தலை காதல் படுகொலைகள் என்றால், மறுபக்கம் கள்ள உறவு, சொத்துப் பிரச்னை என்று பெண்களும், கையில் கத்தி துாக்குவது, சமுதாயத்துக்கு பெரிய சீர்கேடு.மனிதர்கள் ஏன் இப்படி மாறிப் போயினர்; சமுதாயம் எதனால் சீரழிந்து கிடக்கிறது என்று, நம் எல்லாருக்குமே கவலையும், பயமும் இருக்கிறது.
ஆனால், சமுதாயம் என்பது, குற்றச் செயல்கள் செய்யும் சிலரை மட்டும் கொண்டதல்ல... நிறைய நல்லவர்களையும் உள்ளடக்கியதே என்பதை நினைவில் கொள்வோம்.பொதுவெளிக்கு செல்லும் நம் பிள்ளைகளை, அதிகம் பயமுறுத்தாமல், அதே நேரம், நாட்டு நடப்பை புரிய வைத்து, வயதானவர்களாக இருந்தாலும், எல்லாரிடமும் எச்சரிக்கையாகப் பழக, அறிவுறுத்தி அனுப்புவோம்.பொள்ளாச்சியில், சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த, பாலியல் பலாத்கார கொடூரங்கள் போன்ற, பல தீய நிகழ்வுகள் மட்டுமே, பொதுவாக வெளிச்சத்துக்கு வந்து, நம்மை பயமுறுத்துகின்றன. நல்ல விஷயங்களை, நல்ல மனிதர்களை, நாம் எப்போதுமே சாதாரணமாக கடந்து விடுவோம். அப்படியின்றி, ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டுவதன் மூலம், மக்களுக்கு நம்பிக்கை தர விரும்புகிறேன்.
திண்டுக்கல்லில் உள்ள, சின்னகுட்டியாம்பட்டி என்ற கிராமத்தில், பழமையான முறையில், பூட்டுகள் செய்யும், கருப்பையா, 75, என்ற பெரியவரிடம், என் மகள் உள்ளிட்ட, ஆறு மாணவியர், இரண்டு வார பயிற்சிக்காக சென்றனர். பூட்டு செய்முறையை அருகிலிருந்து தெரிந்து, அறிக்கை தயார் செய்து, கல்லுாரிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்காக, வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாக, அந்த கிராமத்துக்கு சென்றனர், இந்த, சென்னை நகரத்துப் பெண்கள்.என்னைப் போலவே, என் மகளுடன் படிக்கும் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கும், தங்கள் குழந்தைகளை, திண்டுக்கல் அருகே உள்ள, அந்த கிராமத்திற்கு அனுப்புவதற்கு பயமும், தயக்கமும் நிறைய இருந்தது.ஆனால், எளிமையான அந்த மனிதர் கருப்பையா, கள்ளம், கபடம் அற்ற அன்பால், எங்கள் குழந்தைகளை வசியப்படுத்தி விட்டார். இரண்டு வாரங்களும், ஒரு தந்தைக்கே உரிய பாசத்துடனும், பரிவுடனும், அவர்களை வழிநடத்தி, மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் வந்து, அவர்களை தன் குடிசைக்கு அழைத்துச் செல்வது முதல், மாலையில் மீண்டும் பேருந்து ஏற்றி, திண்டுக்கல்லுக்கு அனுப்புவது வரை, பாதுகாப்பாக நடந்து கொண்டார். இரும்பு பூட்டு பற்றி மட்டுமல்ல... நிறைய விஷயங்களுடன், வாழ்க்கையையும் கொஞ்சம் கற்றுக் கொடுத்து அனுப்பினார் என்பது தான் உண்மை. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், கல்லுாரி மாணவியர் பணம் கொடுத்த போது, வாங்க மறுத்த பண்பாளர் கருப்பையா. அவருக்கு தொலைபேசியில் நான் நன்றி தெரிவித்த போது, 'என்னை நம்பித் தானம்மா பிள்ளைகளை இவ்வளவு தொலைவு அனுப்புனீங்க... பத்திரமாக பார்த்து அனுப்ப வேண்டியது என் கடமை அல்லவா...' என்று வெகு இயல்பாக சொன்னார், அந்த வெள்ளந்தி மனிதர்.அவரின் அந்த வார்த்தை தான், இந்த சமுதாயத்திற்கான செய்தி. ஒருவரை ஒருவர், நம்பித் தானே வாழ்கிறோம். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல், நல்ல மனிதர்களாக நடந்து கொள்வோம். பரஸ்பர அன்பும், நம்பிக்கையுமே வாழ்க்கை என்பதை நினைவில் கொள்வோம்.தொடர்புக்குikshu1000@yahoo.co.in
-அபிராமி, சமூக ஆர்வலர்