ஸ்ரீநகர்:காஷ்மீரில் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமையன்று, கூட்டுப் பிரார்த்தனைகளை நடத்த முயன்றதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் நேற்று விலக்கி கொள்ளப்பட்டன. ஆனாலும், காஷ்மீரில், இயல்பு நிலை மந்தமாகவே இருந்தது.
பிரார்த்தனை
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இப்போது, நான்கு வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக, ஒவ்வொரு பகுதியாக, நீக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், ஜம்மு - காஷ்மீர், முழு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இப்போது, அந்த கட்டுப்பாடுகள், காஷ்மீரின் பல இடங்களில், நேற்று விலக்கி கொள்ளப்பட்டன. சாலை தடுப்புகள் நீக்கப்பட்டன.
பயங்கரவாதி
இதனால், தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கில், பொது போக்குவரத்து தொடர்ந்து முடங்கி உள்ளது.தொலைபேசிகள் செயல்பட்டாலும், மொபைல் போன், இன்டர்நெட் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.'கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், கடைகளை திறக்கக் கூடாது' என, உள்ளூர் மக்களை, பயங்கரவாதிகள் மிரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூடாது என்றும், பயங்கரவாதிகள் மிரட்டுவதாக தெரிகிறது.இது தொடர்பாக, காஷ்மீரின் பல இடங்களில், ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புகள் சுவரொட்டிகளை ஒட்டிஉள்ளன. இது குறித்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணுவத்தில் இளைஞர்கள்
நம் ராணுவத்தின், ஜம்மு - காஷ்மீர் பட்டாலியன் பிரிவில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 575 இளைஞர்கள் இணைந்துள்ளனர். நேற்று நடந்த, இந்தப் பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில், இவர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, ராணுவத்தில் இவர்கள் விரைவில் இணைய உள்ளனர்.
280 சம்பவங்கள்
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஆக., 5 முதல், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில், 280 சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக, போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஸ்ரீநகரில், அதிகபட்சமாக, 160 சம்பவங்கள் நடந்துள்ளன.'இவ்வாறு வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், அதில் அதிகபட்சம், 15 பேர் மட்டுமே இருந்ததால், பாதிப்பு அதிக அளவில் இல்லை' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE