புதுடில்லி: பாகிஸ்தானில், சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நன்கானா சாஹிப் பகுதியை சேர்ந்தவர் பகவான் சிங். அங்கு உள்ள குருத்வாராவின் தலைவராக உள்ளார். இவரது, 19 வயது மகளை, கடந்த சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில், மிரட்டி, கட்டாயப்படுத்தி, இஸ்லாத்துக்கு மதம்மாற்றியதாக கூறப்படுகிறது. ஆயிஷா என பெயர் மாற்றப்பட்ட அந்தப் பெண், முகமது இசான் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட காட்சி, பாக்., ஊடகங்களில் வைரலாகியது. இது சீக்கியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை, எந்த பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பாகிஸ்தானில், சீக்கிய மதப்பெண்கள் கடத்தி செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டு, மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE