சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று(செப்.,1) நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடி போதையில் 'பைக்' உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிறுவர்கள் கார் ஓட்டினால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிடப்படாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாகன பெருக்கம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக நாடு முழுவதும் சாலை விபத்துக்களும் அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 'ஹெல்மெட்' அணியாமல் பைக் ஓட்டியவர்கள் பின்னால் அமர்ந்து சென்றோர் அதிகம் உயிர் இழந்து உள்ளனர். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராத தொகை குறைவாக இருந்ததால் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு குற்ற உணர்வும் ஏற்படுவது இல்லை. எனவே விபத்துக்களை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க முடியாத சூழல் நிலவியது.
இதை அறிந்த மத்திய அரசு விதி மீறல்களுக்கான அபராத தொகையை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தது. இந்த புதிய சட்ட திருத்தம் நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. விதிகளை மீறுவோருக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் புதிய சட்ட திருத்தத்தை செயல்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்படவில்லை. போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து முறையான அறிவிப்பு வராததால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று பழைய அபராத தொகையையே வசூலித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் முறையாக அரசாணை வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE