புதுடில்லி: ''இந்திய பொருளாதாரம், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மத்திய ஆட்சியாளர்கள், இனியாவது, பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்,'' என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் திடீர் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் பலரும், தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவரும், பொருளாதார நிபுணருமான, மன்மோகன் சிங், 'வீடியோ' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து துறைகளிலும் தவறான நிர்வாகத்தை பின்பற்றியதன் விளைவாக, இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு:
நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதமாக குறைந்து விட்டது. இதன்மூலம், நம் பொருளாதாரம், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது நிலவும் சூழ்நிலையில், நம் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் தவறான நிர்வாக திறனால், தேக்க நிலையில் நாடு இருக்கிறது.
விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டின் பொருளாதாரம், இதே நிலையில் நீடிப்பது நல்லதல்ல. மத்திய அரசு, பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தி துறையின் வளர்ச்சி விகிதமும், 0.6 சதவீதமாக இருப்பது, கவலை அளிக்கிறது.
வீழ்ச்சி:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி அமல் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து, நாட்டின் பொருளாதாரம், இன்னும் மீளவில்லை என்பது, தெளிவாக தெரிகிறது. ரிசர்வ் வங்கியிலிருந்து, அரசு, 1.76 லட்சம் கோடி ரூபாயை எடுத்துள்ளதும், தேக்க நிலைக்கான முக்கிய காரணமாக உள்ளது. உள்நாட்டு தேவை கடுமையாக குறைந்துள்ளது.
நுகர்வு தேவையும், கடந்த, 18 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மத்திய அரசின் தவறான நடவடிக்கையால், வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் மட்டும், 3.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE