கருணாநிதியின் கொள்ளுப் பேத்தி திருமண நிச்சயதார்த்த விழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும், திடீர் ஆலோசனை நடத்தினர்.

'பிகில் திரைப்படத்திற்கு பின், எம்.ஜி.ஆர்., - ரஜினி வரிசையில், அடுத்த, 'சூப்பர் ஸ்டார்' ஆக, விஜயை கொண்டாட, உலகமே காத்திருக்கிறது' என, அவரது தாயார், ஷோபா கூறியிருந்தார்.
சூப்பர் ஸ்டார்:
'ரஜினிக்கும், விஜய்க்கும் தான் போட்டி; ரஜினியை அடுத்து, சூப்பர் ஸ்டார் விஜய் தான்' என, நாம் தமிழர் கட்சியின், ஒருங்கிணைப்பாளர், சீமானும் கொம்பு சீவி விட்டார். விஜயின் தந்தை சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில், 'தமிழகத்தை, தமிழன் ஆள வேண்டும்' என, நடிகர் ரஜினியை மறைமுகமாக தாக்கினார். அதற்கு, ரஜினி ரசிகர்கள், 'அப்படியென்றால், இ.பி.எஸ்., தமிழன் இல்லையா...' என, பதிலடி கொடுத்தனர்.

ரஜினி கட்சி துவங்கியதும், விஜயும் கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ரஜினி, தேர்தல் களத்தில் இறங்கும் போது, விஜயை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இந்நிலையில், மறைந்த கருணாநிதியின், மூத்த மகள் செல்வி மகள், டாக்டர் எழிலரசி - டாக்டர் ஜோதிமணி தம்பதியின் மகள் ஓவியாவுக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மதுசூதனனின் உறவினர், ஜெயப்பிரகாஷ் - பவானி ஆகியோரின் மகன் அக்னீஷ்வருக்கும் நிச்சயதார்த்தம், சென்னையில், நேற்று முன்தினம் இரவு நடந்தது.

நீண்ட ஆலோசனை:
சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் நடந்த நிச்சயதார்த்த விழாவில், நடிகர் விஜய் பங்கேற்றார். தி.மு.க., தலைவரும், செல்வியின் சகோதரருமான ஸ்டாலின் தலைமையில், இவ்விழா நடந்தது.விழா முடிந்ததும், ஸ்டாலின், விஜய், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் ஆகிய மூவர் மட்டும், தனி அறையில், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். ரஜினிக்கு எதிராக, விஜயை களமிறக்குவது பற்றி, இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE