
சில நாட்களுக்கு முன்பாக நமது தினமலர் இதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
சென்னை செங்குன்றம் நிருபர் திரு.ஜமால் மொகைதீன் அந்த செய்தியை கொடுத்திருந்தார்,செய்தி இதுதான்.

சென்னை செங்குன்றம் அருகே விளாங்காடு பாக்கம் ஊராட்சி, தர்காஸ் பகுதியில் புழல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர் பள்ளிகளில் மரங்கள் நடுவதிலும் பராமரிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர்,சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முதலிடம் கொடுக்கின்றனர்,பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது இல்லை,பொரிகடலை சுண்டைக்கடலை போன்றவைகளைத்தான் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்கின்றனர்,கொட்டாங்குச்சி போன்ற வீணான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட நேர்த்தியான பொம்மைகளை கண்காட்சியாக வைத்துள்ளனர்,படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குகின்றனர் இதெற்கெல்லாம் காரணம் இங்கு படிக்கும் பிள்ளைகளை தனது பி்ள்ளையாக நினைக்கும் பள்ளி தலைமையாசிரியை கோமளீஸ்வரிதான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தியை ஆன்லைன் பதிப்பில் படித்த குவைத் வாசகர் சுந்தரம்,
பள்ளி தலைமை ஆசிரியை, கோமளீஸ்வரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர். வரும் செப்டம்பர் ஐந்து அன்று இவருக்காக தினமலர் முருகராஜ் சிறப்புக்கட்டுரை வெளியிடலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த மின்னஞ்சலை எனக்கு பார்வர்ட் செய்த செய்தி பிரிவின் ஆலோசகர் திரு.இளங்கோ, வாசகரின் நம்பிக்கையை செயலுக்கு கொண்டுவாருங்கள் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.
மிகுந்த தேடுதலுக்கு பிறகு கோமளீஸ்வரியிடம் பேசமுடிந்தது.
நான் எதுவுமே செய்யவில்லை என் கடமையைத்தானே செய்தேன் கப்பலோட்டிய தமிழரும்,பாட்டுக்கொரு புலவரும்,தேசிய ராணுவம் அமைத்த தீரரும் இன்னும் எண்ணற்ற பலரும் செய்த சேவைக்கு முன்னால் நான் எல்லாம் துாசி
என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம்தான் கோயில் இங்கு படிக்கும் பிள்ளைகள்தான் தெய்வம்.நல்லது கெட்டதை கடைசி வரை படித்து அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் குழந்தைகள் மனதை சரி செய்துவிட்டால் போதும் வருங்கால சமூகத்தையே சரி செய்வதற்கு சமமானதாகும் அது.
இயற்கையை வாசி, இயற்கையையே சுவாசி என்று சொன்ன நம்மாழ்வாரை அன்றாடம் வணங்கி வாழ்க்கையை துவங்குபவள் நான் ஆகவே தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறேன்.
எனது பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை உபயோகிக்கதாதற்கும்,மரங்கள் வளர்ப்பில் பிரியமாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் ஒட்டிய வயிறுடன் கறுத்து சிறுத்துப் போன உடம்புதான் நான் பார்த்த பல விவசாயியின் உடம்பாக இருந்தது.பலர் காலை வேளை சாப்பாட்டைக்கூட துறந்து கொளுத்தும் வெயிலில் உணவை விளைவிப்பது நமக்காகத்தான் என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ நான் உணர்ந்திருக்கிறேன் அதனால் உணவை வீணாக்குவதை நானும் சரி என் பள்ளிப் பிள்ளைகளும் சரி ஒரு போதும் செய்யமாட்டோம்.
காலை பிரார்த்தனையில் கருணை தெய்வமாம் மதர் தெரசா,எளிமையின் சின்னமாம் ஐயா அப்துல்கலாம்,நம்மாழ்வார்,வேதத்ரி மகிரிஷி போன்றவர்களைப் பற்றி சொல்லிவி்ட்டுதான் பள்ளியை ஆரம்பிப்போம்.
வர்தா புயலால் நாங்கள் நட்டிருந்த மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டது ஒரு சில நாள்தான் கவலைப்பட்டோம் பிறகு முன்னிலும் வேகமாக மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் ஆக நடந்தை எண்ணி கவலைப்படுவதை விட இனி நடப்பதை எண்ணுவதுதான் விவேகம்.
நானும் சரி என் சக ஆசிரியைகளான ஜெயா,உமா மகேஸ்வரி,வேண்டாமணி ஆகியோர் பள்ளிப்பிள்ளைகளுக்கு பராம்பரியமான கடலைப்பருப்பு,பொட்டுக்கடலையால் செய்த சிற்றுண்டிகளையம் பழங்களையும் நாங்களே கொடு்க்கிறோம் இதற்காக நாங்கள் எங்கள் காசைத்தான் செலவு செய்கிறோம் ஆனால் சந்தோஷமாக செலவு செய்கிறோம் இதை செலவு என்று எண்ணாமல் நல்லதொரு சமூகத்திற்கு நம்மாலான சேவையாக எண்ணி செய்கிறோம் கணக்கு பார்ப்பது இல்லை.
கல்வி,ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்தி்ல் சிறந்து விளங்கும் எங்கள் பள்ளி பிள்ளைகளை பார்த்துவிட்டு அக்கம் பக்கம் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர்.எழுபது பேர் படித்த பள்ளியில் இப்போது 150 பேர் படிக்கின்றனர்.
எங்கள் துறை அதிகாரிகள் எங்களது செயல்களைப் பாராட்டி எங்கள் பள்ளிக்கு நல்ல கட்டிடம் வழங்கி எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துவருகி்ன்றனர் இதே போல இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பலரும் எங்களுக்கு நல்ல ஆதரவு வழங்கிவருகி்ன்றனர்.
சென்னையில் எங்கும் உள்ள தண்ணீர் பிரச்னை எங்கள் பள்ளியிலும் உள்ளது , தண்ணீரை சேகரித்து வைக்க ஒரு தண்ணீர் தொட்டி கட்டவேண்டிய உள்ளது அதற்கான உதவியை தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி முடித்த கோமளீஸ்வரியை ஆசிரியர் தினமான இன்று மனதார வாழ்த்துவோம்.அவருடன் பேசுவதற்கான எண்:9677170371.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE