பெங்களூரு: 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவை நெருங்கியுள்ளதை அடுத்து, எந்தவித பிரச்னையும் இன்றி, பாதுகாப்பாக தரையிறங்க பிரார்த்தனை செய்யும்படி, 'இஸ்ரோ' அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், ஜூலை, 22ல், சந்திரயான் - 2 விண்கலத்தை விண்ணில் ஏவினர். இந்த விண்கலம், புவி சுற்றுப் பாதையை கடந்து, நிலவின் சுற்றுப் பாதையை அடைந்தது. பின், நிலவில் தரையிறங்குவதற்காக, அதன் சுற்றுப் பாதை, படிப்படியாக குறைக்கப்பட்டது.
நிலவை சுற்றும், 'ஆர்பிட்டர்' சாதனத்திலிருந்து, நிலவில் தரையிறங்கும், 'லேண்டர்' சாதனம், வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது, லேண்டர் சாதனம், நிலவை மிகவும் நெருங்கியுள்ளது. நாளை அதிகாலையில், லேண்டர் சாதனம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கவுள்ளது. இதற்கான முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில்,'லேண்டர் வாகனம், நிலவில் எந்தவித பிரச்னையும் இன்றி, பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக, பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கிடையே, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா'வைச் சேர்ந்த, முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்மி எம் லினேங்கர், தற்போது மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு வந்துள்ளார்.
அவர் கூறியதாவது: சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் தென் பகுதியில் தரையிறங்குவது, சரித்திர சாதனை. இந்த நிகழ்வு, இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமை சேர்க்கக் கூடியது. இந்தியாவின் இந்த சாதனை, மற்ற நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE