புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் வழக்கில் கடந்த 15 நாட்களாக சி.பி.ஐ. காவலில் இருந்த காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்(73) இனி இருக்கப் போவது திஹார் சிறைதான். அவரை 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு காங். தலையிலான ஆட்சியில் 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து சிதம்பரத்தை கைது செய்து சி.பி.ஐ. விசாரித்து வந்தது. டில்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஐந்து தவணைகளில் அளித்த 15 நாள் காவல் நேற்று முடிவுக்கு வந்தது. அதையடுத்து நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது 'சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்' என சி.பி.ஐ. சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இதற்கு சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்தார்.
துஷார் மேத்தா வாதிட்டதாவது: ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழலில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. பண மோசடி வழக்கில் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துள்ளது. இது போன்ற பொருளாதார குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். மேலும் சிதம்பரம் அதிக அதிகாரம் உள்ளவர்.
இந்த வழக்கில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கலைத்து விடும் அபாயம் உள்ளது. அவருக்கு வெளிநாட்டு வங்கிகளிலும் கணக்கு உள்ளது. இது தொடர்பான தகவல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கான பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில் அவரை வெளியில் விட்டால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டதாவது: அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிதம்பரத்தை ஏன் சிறையில் அடைக்க வேண்டும். அமலாக்கத் துறையின் விசாரணைக்காக சரணடைவதற்கு தயாராக உள்ளார். இந்த வழக்கில் எந்த ஒரு சாட்சியமும் ஆதாரமும் இல்லை. இல்லாத சாட்சியத்தை எப்படி கலைக்க முடியும். அவரை சிறையில் அடைக்கக் கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் தீர்ப்பை ஒத்தி வைத்தார். பின்னர் மாலையில் அளித்த தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் சிதம்பரத்தை செப்.,19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்படுகிறது. டில்லியில் உள்ள திஹார் சிறையில் கழிப்பிட வசதி உள்ள தனி அறை ஒதுக்க வேண்டும். தன்னுடன் மருந்துகள் எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதிக்கப்படுகிறது. 'இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளவர் என்பதால் சிறையில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவருக்கு கட்டில் போன்ற வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்ஜாமினை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததால் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன் சரணடையத் தயாராக உள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளது குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
7ம் எண் சிறையில் அடைப்பு:
திஹார் சிறை அதிகாரிகள் கூறியதாவது: பொருளாதார குற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திஹார் சிறையின் 7ம் எண் சிறை வளாகத்தில் அடைக்கப்படுவர். அதன்படி சிதம்பரம் அந்த சிறை வளாகத்தில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு போதிய வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மனு வாபஸ்:
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் மற்றும் முன்ஜாமின் மனுவை ரத்து செய்யும் டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த மனுக்களை திரும்பப் பெறுவதாக சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். அதை நீதிபதிகள் ஆர். பானுமதி ஏ.எஸ். போபண்ணா அமர்வு ஏற்றுக் கொண்டது.
முன் ஜாமின் மறுப்பு:
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஆர். பானுமதி ஏ.எஸ். போபண்ணா அமர்வு 'பொருளாதார குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியவை. அதனால் இந்த வழக்கை வித்தியாசமான முறையில் கையாள வேண்டும். முன்ஜாமின் வழங்குவதற்கு இது உகந்த வழக்கல்ல' என கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE