சியோல்: ''இந்தியா, இதுவரை எந்த நாட்டுடனும், வம்பு சண்டைக்கு போனதாக வரலாறு இல்லை. அதே நேரத்தில், எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசினார்.
ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், அரசு முறைப் பயணமாக, கிழக்காசிய நாடான, தென் கொரியாவுக்கு வந்துள்ளார். தலைநகர் சியோலில், 'சியோல் பாதுகாப்பு பேச்சு' என்ற, மாநாட்டில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: அண்டை நாடுகளுடன், எப்போதும், சுமுகமான உறவை வைத்துக் கொள்ளவே, இந்தியா விரும்புகிறது. பிரதமர் மோடியின் கொள்கையும் இது தான்.
கடல் வழி பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், இந்தியாவும், தென் கொரியாவும், எப்போதுமே ஒருங்கிணைந்து செயல்படும், குறிப்பாக, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், இரு நாடுகளின் செயல்பாடும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பரஸ்பர மரியாதை, பேச்சு, ஒருங்கிணைப்பு, அமைதி, வளர்ச்சி ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து செயல்பட்டால், எப்போதுமே எந்த பிரச்னையும் வராது.
இந்தியா, எப்போதுமே மற்ற நாடுகளுடன், வம்பு சண்டைக்கு போனதாக வரலாறு இல்லை. எந்த நாட்டையும், நாங்களாக வலியச் சென்று தாக்க மாட்டோம். அதற்காக, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.
இந்தியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, பழமையான கலாசார தொடர்புகள் உள்ளன. புத்த மதம், இந்தியாவிலிருந்து தான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. சர்வதேச அளவில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பேச, எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக, தென் கொரிய அரசுக்கு நன்றி. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE