பொது செய்தி

தமிழ்நாடு

120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Updated : செப் 09, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
மேட்டூர் அணை, 120 அடி, கொள்ளளவு, மகிழ்ச்சி, சேலம்

மேட்டூர் : கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்ததால் மேட்டூர் அணை முழுமையாக 120 அடிக்கு நேற்று நிரம்பியது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சரியான முறையில் நீரை பங்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 1934ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் மொத்த உயரம் 120 அடி; கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால் ஜூலை 23ல் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாகவும்; நீர் இருப்பு 11.64 டி.எம்.சி.யாகவும் சரிந்தது. பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பின. அவற்றிலிருந்து உபரி நீர் தொடர்ச்சியாக காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் டெல்டா நீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதில் 23 ஆயிரம் கன அடி நீர் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாகவும் 2000 கன அடி நீர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உபரி நீர் வெளியேற்றும் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு 118.11 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று பகல் 12:55 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் 16 கண் மதகு வழியாக முதல்கட்டமாக 7500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின் நீர்வரத்துக்கேற்ப உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் ராமன் அணையில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை 1934ல் கட்டி முடித்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அணை கட்டி 86 ஆண்டு நிறைவடைந்த நிலையில் 43வது முறையாக அணை முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்தாண்டு கர்நாடகா அணைகளின் உபரிநீர் வரத்தால் 37 நாளில் நிரம்பிய மேட்டூர் அணை நடப்பாண்டு 46 நாளில் நிரம்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2005, 2006, 2007 என தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் அணை நிரம்பியது. அடுத்து 2010 - 2013ல் நிரம்பியது. பின் 2018 - 2019 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அணை நிரம்பியுள்ளது. தற்போது மேட்டூர் அணை நிரம்பியிருப்பது டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரியான முறையில் நீர் பங்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கடலுக்கு இறைத்த நீர்

!
கடந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பிய போது 119 டி.எம்.சி. நீர் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது. இதையடுத்து தமிழக அரசு மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தில் வறண்ட பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்துக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நடப்பாண்டு 565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் அத்திட்டம் ஆய்வு நிலையிலேயே மந்த கதியில் நடக்கிறது. இதனால் தற்போதும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் மீண்டும் கடலுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு விழித்து அத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
10-செப்-201907:07:22 IST Report Abuse
Nagarajan Duraisamy இப்போ யாரும் பேச மாட்டார்கள் நதி இணைப்பை பற்றி...தேர்தல் வரும் பொது மட்டும் அறிக்கை வரும்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-செப்-201914:17:54 IST Report Abuse
Lion Drsekar சேமித்து வைக்க ஏதாவது ஏற்படுகள் அணைகள்,, இருக்கவே இருக்கிறது மிகப் பெரிய கடல், தண்ணீர் வற்றியவுடன் ஒரு மன்னருக்கும் மற்றொரு மன்னருக்கும் சண்டை, மொழியை வைத்து நம்மவர்களை அவர்கள் அடிப்பதும், பேருந்துகளை கொளுத்துவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருபப்தை ஒட்டு மொத்தமாக நிறுத்த வந்த நீரை சேமித்து வைத்து நாட்டை வளமாக்க யாராவது ஒருவராவது சிந்தித்தால் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-செப்-201908:32:31 IST Report Abuse
Loganathan Kuttuva தமிழகத்தில் ஆந்திராவை போன்று ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X