காவல் நிலையங்கள், கட்டப் பஞ்சாயத்து களங்களாக மாறி விட்டதாக, பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த துறையில் உள்ள சிலரின் தவறான அணுகுமுறை, ஒட்டுமொத்த துறைக்கும், கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.எனவே, போலீசாரின் கடமைகள் என்ன; அவர்களின் பொறுப்புகள் என்ன என்பதை, போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
போலீசாரின் பணி, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது; குற்றங்கள் நடக்காமல் தடுப்பது; நடந்த குற்றங்களை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜர்படுத்துவது மட்டும் தான்.தனி ஒருவரின் ஒழுங்கற்ற நடவடிக்கை, அராஜகமான போக்கு, மற்றவரை பாதித்தால், பாதிக்கப்பட்ட நபர், உடனடியாக அணுகும் இடம், காவல் நிலையம் தான். குற்றத்தின் தன்மையை பொறுத்து, குற்றம் சாட்டுபவரை கைது செய்ய வேண்டும். எல்லா புகார்களுக்கும், சாதாரண குற்றங்களுக்கும், கைது நடவடிக்கை அவசியம் இல்லை.இதை அறிந்து கொண்டாலே, போலீசார் நடவடிக்கை மீதான அச்சம், பொதுமக்களுக்கு நீங்கி விடும். வழக்கமாக, போலீசில் ஒருவர் புகார் கொடுக்கிறார் என்றால், அந்த புகாரில் அவர் குற்றம் சாட்டும் நபரை, போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.புகாரின்படி, முதலில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; சாட்சிகளை விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்; விசாரணை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, கைது அல்லது விடுதலை அமையும்.
அதற்காக, கைது செய்ய அதிகாரமில்லாத குற்றப் புகார்களை, காவல் துறை புறம் தள்ளி விட முடியாது. அது, காலப்போக்கில் பெரிதாக வளர்ந்து, பெரிய அளவிலான குற்றத்திற்கு, வழி வகுத்து விடும். எனவே, அத்தகைய புகார்களின் போது, உடனடியாக இரு தரப்பினரையும் விசாரித்து, புகார்களின் தன்மைக்கேற்ப, போலீஸ் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.நான், 22 வயது இளைஞனாக, முதன் முதலில், உதவி ஆய்வாளராக, 1975-ல், ஒரு கிராமத்தில் பொறுப்பேற்றேன். அப்போது, அந்தக் காவல் நிலைய சரகத்தில், இரண்டு ஊர்களைச் சேர்ந்த, இரண்டு மதத்தினர் இடையே விரோதம் நிலவியது. அதன் காரணமாக, பல கலவரங்கள் நிகழ்ந்து, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்தன.எஸ்.ஐ.,யாக நான் பொறுப்பேற்ற பிறகு கூட, முன் விரோதம் காரணமாக, இரு தரப்பினரும் அடிக்கடி புகார் கொடுக்க ஆரம்பித்தனர். அவற்றை ஆராய்ந்த நான், அந்த புகார்கள் சாதாரணமானவை; மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.எனினும், இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புகார் கூறி, சிறையில் தள்ளத் துடித்துக் கொண்டிருந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த நான், இரு தரப்பிலும் முக்கியமானோரை அழைத்து பேசினேன்; அவர்களின் விருப்பத்தைத் தனித்தனியே எழுதித் தரச் சொன்னேன்.இரண்டையும் வைத்து, இரு தரப்பினரும் ஒத்துப்போகும் விஷயங்களை தனியாகவும், எதிர்க்கும் விஷயங்களை தனியாகவும் எடுத்தேன். இரு தரப்பும் எதிர்க்கும் விஷயங்களை, அப்படியே விடாமல், பேசித் தீர்க்க முடிவு செய்தேன்.அப்போது, இரு தரப்பிலும் இருந்த, பெரிய மனிதர்கள் என, தங்களை தாங்களே கூறிக் கொண்டோர், சாதாரண பிரச்னையை பெரிதாக்கி, தங்களை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதை, என்னால் கண்டு கொள்ள முடிந்தது.நான் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு, அவர்கள் தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உள் நோக்கத்தையும் சுட்டிக்காட்டி, கடும் நடவடிக்கை பாயும் என, எச்சரித்தேன். அதை அறிந்த, இருதரப்பு பெரியவர்களும், அதிர்ச்சி அடைந்தனர்; மற்றவர்கள், எனக்கு ஆதரவாக பேச, ஒரு வழியாக, எல்லாரும் ஒத்துப் போயினர்.
ஒரு கட்டத்தில், அவர்கள் அனைவரும், சமரசமாக செல்ல விரும்பினர். அதற்கு நிபந்தனையாக, தங்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்றனர். அதை நான் செய்ய முடியாது என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, விபரத்தை சொன்னேன்; அவருக்கு நான் சொன்னதில், நம்பிக்கை ஏற்படவில்லை.அந்த கிராமங்களில், பல ஆண்டுகளாக நிலவி வந்த விரோதத்தை, நேற்று வந்த, 22 வயது இளைஞரான, எஸ்.ஐ., சமரசம் செய்து விட்டார் என்றால், யார் தான் நம்புவர்... இரு தரப்பிலும் முக்கியமான, ஐந்து பேரை, தன் முன் ஆஜர்படுத்தி, சமரசமாக அவர்கள் ஆகிவிட்டதை உறுதிபடுத்த, மாவட்ட கண்காணிப்பாளர் சொன்னார்; அப்படியே செய்தேன். அவருக்கு, மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.இரு தரப்பினர் மீதும் விசாரணையில் இருந்த மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள், திரும்பப் பெறப்பட்டன. அதன் பின், அந்த ஊர்களில், அந்த இரு மதங்களை சேர்ந்தவர்கள் இடையே, எந்த பிரச்னையும் எழவில்லை. இப்போது வரை அப்படியே இருப்பதாக, சமீபத்தில் கேள்விப்பட்டேன் .
நான் மேற்கொண்டது, கட்டப் பஞ்சாயத்து அல்ல. சட்ட விபரங்களை எடுத்துக் கூறி, சட்டத்தை மீறி செய்யப்பட்ட செயல்களை பட்டியலிட்டதால், சட்டத்தை மீறியவர்கள், தங்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தில், சமரசத்திற்கு வந்தனர். இப்படித் தான், உண்மையான போலீஸ் அதிகாரியின் செயல்பாடு இருக்க வேண்டும்.ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. சில போலீஸ் அதிகாரிகள், சட்டம் தெரிந்தவர்களை மட்டுமே மிரட்டுவதில்லை; லஞ்சம் பெறுவதற்காக, சாதாரண மக்களை மிரட்டி, அட்டூழியம் செய்யும், காவல் துறையின் கறுப்பு ஆடுகளாக விளங்குகின்றனர்.குற்றம் நிகழும் நேரத்தில், அதை தடுப்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் குறுக்கீடு செய்ய, குற்ற நடைமுறைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், அந்த குறுக்கீடுக்கு, வரைமுறை இருக்கிறது. எந்த அளவுக்கு குறுக்கிடலாம் என்பதற்கு, போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து முரண்பட, அவர்களுக்கு அனுமதி இல்லை. முரணாக செயல்பட்டால், துறை நடவடிக்கை அல்லது சட்டப்படியான நடவடிக்கை பாயும்!சொத்து மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னைகளில், நீதிமன்றம் மட்டுமே, முடிவெடுக்க முடியும். அவற்றில், போலீசார் தலையிட்டு, தீர்வை அறிவிக்க இயலாது; அறிவிக்கவும் கூடாது. சாதாரணமாக, திட்டுவது, ஆயுதம் ஏதுமின்றி, கையால் அடித்து, லேசாக காயம் ஏற்படுத்துவது, வேண்டுமென்றே அடுத்தவருக்கு சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற சாதாரண குற்றங்களை, ஒருவர் செய்கிறார் என, வைத்துக் கொள்வோம்.அத்தகைய நேரத்தில், பாதிக்கப்பட்டவர் கொடுக்கும் புகார்களை, போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஏற்று, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, அந்த குற்றம், மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களுக்கு இடையே உள்ள விரோதம் வளர்ந்து, கலவரம் மற்றும் கொலை நடக்கும் அளவுக்கு கூட போக வாய்ப்பிருக்கிறது.மேலும், இது போன்ற, சின்ன விஷயங்களைப் பெரிதாக்கி, தங்களுக்கு சாதகமாக அரசியல் செய்யவும், பணம் சம்பாதிக்கவும், சில சமூக விரோதிகள் காத்துக் கொண்டிருப்பர். அவர்களிடம் இந்த பிரச்னை சிக்கினால், ஊதி அதை பெரிதாக்கி, ஊர் கலவரமாக்கி விடுவர்!ஏனெனில், எல்லா மிகப் பெரிய கலவரங்களுக்கும், மிகச் சிறிய, சாதாரண நிகழ்வு தான் காரணமாக இருந்திருக்கிறது என்பது, என் அனுபவத்தில் கண்ட உண்மை.எனவே தான், எந்த சிறிய புகாரையும், உடனுக்குடன் விசாரித்தால், அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்; தாமதித்தால், மற்றவர்களின் தலையீட்டால், மிகைப்படுத்தப்படும். இருவர் அல்லது இரு தரப்பினருக்கு இடையே உள்ள பகைமை உணர்வை போக்க, போலீஸ் அதிகாரி, தன் திறமையைப் பயன்படுத்த வேண்டும்.இதில் தான், கட்டப் பஞ்சாயத்து என்ற பிரச்னை தலை துாக்குகிறது. இத்தகைய நேரத்தில், போலீஸ் அதிகாரியின் நோக்கம், தன் அதிகார எல்லையில் உள்ள பகுதியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்ற, அலுவல் சார்ந்த, சமூக பொறுப்புணர்வாக இருக்க வேண்டும்.தவிர, அதில் சுய லாபம் அடையும் நோக்கமாக இருக்கக் கூடாது என்பது தான் முக்கியம்.
சுய லாபம் இருந்தால், அது தான் கட்டப் பஞ்சாயத்து!அண்டை வீடுகளில், சில நேரங்களில், சாக்கடை பிரச்னை ஏற்படும். தன் வீட்டு பக்கம், அடுத்த வீட்டு சாக்கடை நீர் வருகிறது என, பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுப்பார். சாதாரண சாக்கடை பிரச்னை என்று கருதி, 'நீதிமன்றத்துக்கு போ' என்றால், அது, காவல் நிலையமும் இல்லை; அவ்வாறு சொல்பவர், போலீஸ் அதிகாரியும் அல்ல!மாறாக, ரோந்து காவலரை விசாரித்து வரச் செய்து, யார் மீது தவறு இருக்கிறதோ அவரை எச்சரித்து, பிரச்னையை, போலீஸ் அதிகாரி தீர்த்து வைக்கலாம். அவ்வாறு செய்வதால், அடிதடி வழக்கு அல்லது கொலை வழக்கு தவிர்க்கப்படலாம்.ஏனெனில், சில நேரங்களில், திடீரென ஏற்படும் கோபத்தின் காரணமாகவும், அற்பமான காரணங்களுக்காகவும் தான், கொலைகள் நிகழ்கின்றன.அதுபோல, சிவில் உரிமை குறித்த புகார்களில், பத்திர ஆவணங்களை பார்வையிட்டு, முடிவு செய்யும் அதிகாரம், காவல் துறைக்கு இல்லை. ஆனால், அப்போதைக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறுதி தீர்ப்புக்கு நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்த வேண்டும். இதற்கான அதிகாரம், போலீஸ் அதிகாரிகளுக்கு இருக்கிறது.போலீஸ் அதிகாரிகளும், காவல் துறையும், எவ்வளவு நியாயமாக இருந்தாலும், அவர்களை அசைத்து பார்க்கும் விதமாக, அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் உள்ளன. தங்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, போலீசாரை மிரட்டி பணிய வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது தான், காவல் நிலையங்களில் நடக்கும், கட்டப் பஞ்சாயத்துக்கு காரணமாகவும் உள்ளது.எனவே, போலீசாரின் கடமைகள், பொறுப்புகளை, பொதுமக்களும்; பொதுமக்களின் உணர்வுகளையும், தேவைகளையும், போலீஸ் அதிகாரிகளும், தெரிந்து, நேர்மையாக செயல்பட்டால், கட்டப் பஞ்சாயத்து என்பதே காணாமல் போய் விடும்!
தொடர்புக்கு:இ---மெயில்: spkaruna@gmail.comமா.கருணாநிதி காவல் கண்காணிப்பாளர், ஓய்வு