சோனியா தந்திரம், 'அவுட்?'

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019
Advertisement
டில்லி உஷ்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகிய பின், சில மாதங்கள் வரை, யாருமே அந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை. கடைசியில், தற்காலிக தலைவராக, சோனியாவே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.தோல்வியால் துவண்டு போயுள்ள கட்சிக்கு, சோனியாவின் வரவு புத்துணர்வை ஏற்படுத்தும் என, தொண்டர்களும், 'சீனியர்' தலைவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், சோனியா வந்த பின், ராகுலுக்கு நெருக்கமான மாநில தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஹரியானாவில், மாநில, காங்., தலைவராக இருந்த ராகுல் ஆதரவாளரான, அசோக் தன்வர் மாற்றப்பட்டு, குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டுஉள்ளார். இதனால், ஹரியானா காங்கிரசில், ஏற்கனவே உள்ள கோஷ்டி பூசல் இன்னும் அதிகமாகி விட்டது.ஹரியானாவில், அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 90 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள இந்த சட்டசபையில், காங்கிரசுக்கு இப்போது, 15 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கோஷ்டி பூசலுக்கு பிறகு, காங்கிரஸ், 10 தொகுதிகளில் கூட தேறாது என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.இன்னொரு பக்கம், மத்திய பிரதேசத்திலும் பிரச்னை. இங்கு, முதல்வர், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. காங்.,கின் இளம் தலைவரான, ஜோதிராதித்ய சிந்தியா, ம.பி., மாநில, காங்., தலைவராக விரும்புகிறார். ஆனால், கமல்நாத் அவரை எதிர்க்கிறார்.இது போதாதென்று, சீனியர் தலைவரான திக்விஜய் சிங், மாநில அமைச்சர்களிடம் அடிக்கடி, 'அதை செய், இதை செய்' என, உத்தரவிடுகிறார். இது, அமைச்சர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.மஹாராஷ்டிராவிலும், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, பா.ஜ., - --சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள பல, காங்., தலைவர்கள், பா.ஜ.,விலும், சிவசேனாவிலும் ஐக்கியமாகி விட்டனர். காங்கிரசுக்கு வழிகாட்ட, இங்கு எந்த தலைவரும் இல்லை.காங்கிரசின் நட்பு கட்சியான, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் என்ன செய்வது என, தள்ளாடிக் கொண்டிருக்கிறது.இப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும், காங்கிரசுக்கு பல பிரச்னைகள். 'சோனியா தலைவராக வந்தால் எல்லாம் சரியாகி விடும் என நினைத்தோம்; ஆனால், நிலைமை படு மோசமாகி விட்டது' என, நொந்து போயுள்ளனர் காங்கிரசார்.


தமிழக பா.ஜ., தலைவர் யார்?

தெலுங்கானா கவர்னராக, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்ட பின், அடுத்த தலைவராக யார் வருவார் என, பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.நயினார் நாகேந்திரன், ராகவன், வானதி சீனிவாசன் என பல பெயர்கள், தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன. ஆனால், பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவருக்குத் தான், தலைவர் பதவி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.இருந்தும், தமிழக, பா.ஜ., தலைவர்கள் சிலர், தங்களுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக டில்லியில் முகாமிட்டு, சீனியர், பா.ஜ., தலைவர்களை சந்தித்து, 'லாபி' செய்து வருகின்றனர். பா.ஜ., செயல் தலைவராக இருப்பவர், ஜகத் பிரகாஷ் நட்டா.ஆனால், உள்துறை, அமைச்சராகவும் இருக்கும், அமித் ஷா தான், கட்சி தொடர்பான விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கிறார். அமித் ஷாவிற்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால், அவர் ஓய்வெடுத்து வருகிறார்.எனவே, தமிழக தலைவர் நியமனம் குறித்து, உடனடியாக எந்த அறிவிப்பும் வராது என்கிறது டில்லி, பா.ஜ., வட்டாரம்.


எங்கு போனாலும் வேட்டி தான்!

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர், இ.பி.எஸ்., ஸ்டாலின் உட்பட பலரும் உள்ளூரில் வேட்டி, சட்டையில் வலம்வருகின்றனர்.ஆனால், வெளிநாடு சென்றுவிட்டால், 'கோட்-, சூட்'டிற்கு மாறி விடுகின்றனர். வட மாநிலங்களிலோ, சில தலைவர்கள், வெளிநாட்டிற்கு பறந்தாலும் வேட்டியை விடுவதில்லை. மத்திய அமைச்சராக இருந்தவரை, வெங்கையா நாயுடு எப்போதும் வேட்டியில் தான் இருந்தார்.வெளிநாடு போனாலும் வேட்டி தான் கட்டுவார். துணை ஜனாதிபதியான பின், வேட்டியை கடாசி விட்டு, 'நேரு கோட்' போடுவார் என, எதிர்பார்த்தனர். ஆனால், அதிகாரிகளின் அறிவுரைகளையும் மீறி, அவர் இப்போதும் வேட்டி தான் அணிகிறார்.மத்திய அமைச்சர்களில், எப்போதும் வேட்டியில் தென்படுவர் ஒருவர் மட்டுமே. அவர், பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங். வட மாநில பாணியில், பஞ்ச கச்சம் ஸ்டைலில், இவர் வேட்டியை கட்டுவார். வெளிநாடு போனாலும் கோட்டிற்கு மாறியதில்லை. இப்போது, ராணுவ அமைச்சர் என்பதால், அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் வேட்டி தான் கட்டுகிறார் ராஜ்நாத்.அதிக குளிர் இருந்தால், மேலே நேரு ஜாக்கெட் அணிந்து கொள்கிறார். தற்போது, தென் கொரியாவுக்கும் வேட்டி அணிந்து தான் சென்றுள்ளார். இப்படி இவர்கள், 'சிம்பிளாக' இருக்க, அதிக, 'கலர்புல்' ஆக இருப்பவர், நம்ம பிரதமர் மோடி தான். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு டிரஸ் என, கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X