புவனேஸ்வர்: போக்குவரத்து விதிகளை மீறிய டிரக் டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் அமலான பின், அதிக அபரதம் விதிக்கப்பட்ட நபர் இவர் ஆவார்.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானதை தொடர்ந்து, நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்., 3 அன்று, நாகாலாந்தை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான டிரக் ஒன்று, சத்தீஸ்கரின் தல்சார் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரக்கை, அசோக் ஜாதவ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிரக், ஒடிசாவின் சம்பல்பூர் வந்த போது போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அசோக் ஜாதவ் டிரக்கை ஓட்டாமல், வேறு நபர் டிரக்கை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து, தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க செய்ததற்காக 5 ஆயிரம் ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், அதிக பாரம் ஏற்றியதற்காக 56 ஆயிரம் ரூபாயும், பொருட்களை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி சென்றதற்காக 20 ஆயிரம் ரூபாயும், பொது விதிமீறலுக்காக ரூ.500 என அசோக் ஜாதவிற்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது.


இதனால், அதிர்ச்சியடைந்த அசோக் ஜாதவ், அதிகாரிகளுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக மன்றாடி அபராதத்தில் 70 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலான பின்னர், அதிக அபராத தொகை செலுத்திய நபர் என்ற பெயர் அசோக் ஜாதவிற்கு கிடைத்துள்ளது. அவர் அபராதம் கட்டியதற்கான ரசீது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE