ஐ.நா., கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம்; பாக்., சதியை முறியடிக்க திட்டம்| Dinamalar

ஐ.நா., கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம்; பாக்., சதியை முறியடிக்க திட்டம்

Updated : செப் 10, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (5+ 33)
ஐ.நா, பாக்., சதி, முறியடிக்க, காஷ்மீர் , ஆதரவு, அஜித் தோவல், கட்டுப்பாடுகள்

புதுடில்லி : ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப, பாகிஸ்தான் முயன்றால், அதை முறியடிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், இன்று துவங்கி, 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, பிரச்னை எழுப்ப, பாக்., திட்டமிட்டு உள்ளது. அதை முறியடிக்கும் வியூகத்தை, மத்திய அரசு வகுத்துள்ளது.

இது குறித்து, வெளியுறவு துறை உயரதிகாரிகள் கூறியதாவது: ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கும், ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தரப்பில், வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி பங்கேற்கிறார். இன்று முதல், 12ம் தேதி வரை, அவர் ஜெனிவாவில் தங்கியிருக்க உள்ளார்.


வாய்ப்புகள்


இந்தக் கூட்டத் தொடரில், ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்ப, பாக்., குக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தலாம்; மற்றொன்று, தீர்மானம் நிறைவேற்ற கோரலாம். இரண்டிலும் ஓட்டெடுப்பு நடத்தப்படும். தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமானால், வரும், 19ம் தேதிக்குள், கவுன்சில் தலைவருக்கு, பாக்., கடிதம் கொடுக்க வேண்டும். அதனால், இந்தப் பிரச்னையை, பாக்., எழுப்பினால், அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாக்., எழுப்பியது. ஆனால், பாக்., முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதைத் தவிர, பல்வேறு நாடுகளும், நம் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், வெளியுறவுத் துறையில் கிழக்கு பிராந்தியங்களுக்கான செயலர், விஜய் தாக்குர் சிங், பாகிஸ்தானுக்கான இந்தியத் துாதர் அஜய் பசாரியா உள்ளிட்ட அதிகாரிகள், இந்தியத் தரப்பில் பங்கேற்க உள்ளனர்.

ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் உள்ள, 47 நாடுகளுடனும், வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு வருகிறார். பல நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, நம் நிலையை கூறி வருகிறார். சில நாடுகளின் தலைவர்களுடன், தொலைபேசியில் பேசியுள்ளார்.


வன்முறை இல்லை


இவ்வாறு ஒரு பக்கம், மற்ற நாடுகளின் ஆதரவை பெற்று வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் கவனித்து வருகிறார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஒரு மாதமாகி உள்ள நிலையில், அங்கு வன்முறையால், ஒருவர் கூட பலியாகவில்லை. சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைதி நிலவுகிறது.

அரசியல் ரீதியில் அங்குள்ள பிரச்னைகளை, உள்துறை அமைச்சர், அமித் ஷா நேரடியாக கவனிக்கிறார். இவ்வாறு பல்வேறு முனைகளில், பாக்., சதி திட்டத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X