செப்., 27 : ஒரே நாளில் மோடி - இம்ரான் உரை| Dinamalar

செப்., 27 : ஒரே நாளில் மோடி - இம்ரான் உரை

Updated : செப் 11, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (2)
Share
மோடி, இம்ரான், செப்.,27 , ஐ.நா கூட்டம், காந்தி, அதிபர்கள்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும், ஐ.நா., பொது சபை கூட்டத்தில், 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அவருக்குப் பிறகே, அதே நாளில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச உள்ளார்.

ஐ.நா., சபையின், 74வது ஆண்டு பொது சபை கூட்டம், வரும், 24ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், 112 நாடுகளின் அதிபர்கள், 48 நாடுகளின் பிரதமர்கள், 30 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில், தலைவர்கள் உரையாற்றும் கால அட்டவணையை, ஐ.நா., இறுதி செய்துள்ளது. ஐ.நா.,வின் வழக்கத்தின்படி, முதல் நாளான, 24ம் தேதி, பிரேசில் முதலில் உரையை துவக்கி வைக்கும்.


விருது


அதன்பிறகு, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், 24ம் தேதி பேச உள்ளார். கடந்த, 2014ல், முதல் முறையாக, ஐ.நா., பொது சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தாண்டு, 27ம் தேதி பேச உள்ளார். அவருக்குப் பிறகே, பாக்., பிரதமர், இம்ரான் கான் பேச உள்ளார். ஒரு வாரம் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஐ.நா, பொது சபை கூட்டத்தின் இடையே, பல்வேறு உலகத் தலைவர்களையும் சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.

முதலில், ஹூஸ்டன் நகருக்குச் செல்லும் மோடி, 22ம் தேதி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 'ஹௌடி மோடி' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், ஆயிரக் கணக்கான இந்தியர்கள், அமெரிக்க பார்லிமென்ட், எம்.பி.,க்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு, நியூயார்க் செல்லும் மோடி, அங்கும் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார்.

உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, 'மைக்ரோசாப்ட்' தலைவர், பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிந்தா கேட்ஸ் நடத்தும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும், உயரிய விருது, மோடிக்கு வழங்கப்படுகிறது. துாய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, வரும், 22ல் சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.


கருத்தரங்கம்


மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, 24ம் தேதி, ஐ.நா., தலைமையகத்தில் நடக்கும் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கடுத்த நாள், புளூம்பர்க் உலக வர்த்தக அமைப்பின் சார்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த யணத்தின்போது, நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் பல்கலை வளாகத்தில், மஹாத்மா காந்தி அமைதி பூங்காவை, மோடி திறந்து வைக்கிறார். மஹாத்மா காந்தியின் நினைவாக அங்கு, 150 மரங்கள் நடக்கப்படுகின்றன. இதைத் தவிர, ஐ.நா.,வில் நடக்கும் பருவநிலை மாறுபாடு தொடர்பான கருத்தரங்கம் உட்பட, பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.


5 கோடியைத் தாண்டியது


'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை, ஐந்து கோடியைத் தாண்டியது. இதன் மூலம், டுவிட்டர் சமூக வலைதளத்தில் அதிகமானோர் பின்தொடரும், இந்தியர் என்ற பெருமையை அவர் தக்க வைத்து உள்ளார். கடந்த, 2009ல், குஜராத் முதல்வராக இருந்தபோது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் துவங்கிய மோடி, 2014ல் பிரதமரான பிறகு, அதிக பிரபலமானார். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை, 6.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதேநேரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவை, 10.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.


'பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்'


ஐக்கிய நாடுகளின், பாலைவனமாவதைத் தடுப்பதற்கான அமைப்பின், 14வது மாநாடு, உ.பி., மாநிலம், நொய்டாவில், நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளான, அக்., 2ல் இருந்து, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், உலகளாவிய பிரச்னையாகும்.

இதற்காக, பல வழிமுறைகளை நாம் வகுத்தாலும், அது, மக்களிடையே சென்றடைய வேண்டும். அதனால் தான், பிளாஸ்டிக் ஒழிப்பை, மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளோம். உலக நாடுகளும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

கடந்த, 2015ல் இருந்து, 2017க்குள் இந்தியாவில், வனப்பகுதியின் பரப்பளவு, 8 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. வரும், 2030க்குள், 2.1 கோடி ஹெக்டேர், புறம்போக்கு நிலத்தை பண்படுத்த திட்டமிட்டிருந்தோம். அதை தற்போது, 2.6 கோடி ஹெக்டேராக உயர்த்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X