லேண்டர் சாதனம் நொறுங்கவில்லை : விஞ்ஞானிகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'லேண்டர்' சாதனம் நொறுங்கவில்லை : விஞ்ஞானிகள்

Updated : செப் 11, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (8)
Share
பெங்களூரு : நிலவை ஆராய்வதற்கு அனுப்பப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்ட 'லேண்டர்' சாதனம் நொறுங்கவில்லை. அதனுடன் மீண்டும் தொடர்பு கிடைக்கும் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டிருந்த
சந்திரயான்-2, இஸ்ரோ, லேண்டர், விஞ்ஞானிகள், அணு சக்தி, ஆர்பிட்டர்

பெங்களூரு : நிலவை ஆராய்வதற்கு அனுப்பப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்ட 'லேண்டர்' சாதனம் நொறுங்கவில்லை. அதனுடன் மீண்டும் தொடர்பு கிடைக்கும் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டிருந்த 'ஆர்பிட்டர்' எனப்படும் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வு செய்யும் சாதனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடன் விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள 'லேண்டர்' எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம்; பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள. 'ரோவர்' எனப்படும் நிலவின் தரைப் பகுதியில் சுற்றி ஆய்வு செய்யும் வாகனம் ஆகியவையும் அனுப்பப்பட்டன. இந்த லேண்டர் சாதனம் மற்றும் அதனுள் அமைந்துள்ள ரோவர் வாகனம் ஆகியவை ஒரு நிலவு நாள் அதாவது பூமியை பொறுத்தவரை 14 நாட்கள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது பெங்களூரில் உள்ள 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கட்டுப்பாட்டு அறையுடன் லேண்டர் சாதனத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலவின் தரைப்பகுதியில் லேண்டர் சாதனம் இருப்பதை ஆர்பிட்டர் சாதனம் கண்டுபிடித்துள்ளது. அதையடுத்து லேண்டர் சாதனத்துடன் தொடர்பு மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: ஆர்பிட்டர் சாதனம் அனுப்பியுள்ள படங்களின்படி நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனம் உள்ளது. அது நொறுங்கவில்லை; முழுமையாக உள்ளது. ஆனால் சாய்ந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்த சாதனத்துடன் உள்ள பேட்டரி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அதில் சூரியத் தகடுகள் உள்ளதால் எரிபொருள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதில் உள்ள ஆன்டெனா நமது கட்டுப்பாட்டு அறையை நோக்கியோ அல்லது ஆர்பிட்டர் நோக்கியோ இல்லை. அவ்வாறு இருந்தால் மட்டுமே அதனுடன் தொடர்பு கிடைக்கும். லேண்டர் சாதனத்துடன் தொடர்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். இதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். இதற்கு முன் புவிவட்டப் பாதையில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்ட மற்றொரு விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கிடைத்துள்ளது.

அதுபோன்று அவ்வளவு சுலபம் இல்லை என்றாலும் லேண்டர் சாதனத்துடன் தொடர்பு மீண்டும் ஏற்படும் என முழுமையாக நம்புகிறோம். இந்த நிலையில் ஆர்பிட்டர் சாதனம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. முதலில் ஓராண்டுக்கு அது செயல்படும் என எதிர்பார்த்தோம். சந்திரயான் - 2 விண்கலத்தின் சிறப்பான செயல்பாடு மற்றும் அதை செலுத்தியதில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதற்கான எரிபொருள் அதிக அளவில் உள்ளது. அதனால் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஆர்பிட்டரின் ஆயுள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியான ஏ.சிவதாணுப் பிள்ளை கூறியுள்ளதாவது: விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்த நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இஸ்ரோவின் செயல்பாடு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் தொழிற்சாலையை இந்தியா அமைக்கும். அதன் மூலம் நிலவில் இருக்கும் 'ஹீலியம் - 3' என்ற எரிசக்தி பொருளை பிரித்து எடுத்து பூமிக்கு அனுப்பும். அணு சக்திக்கு தற்போது பயன்படுத்தும் யுரேனியத்தைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது ஹீலியம் - 3. இவ்வாறு கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X