குடிமராமத்து பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க கெடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க கெடு

Added : செப் 10, 2019
Share

சென்னை:நீர்நிலைகளை பராமரிக்கும், குடிமராமத்து திட்ட பணிகளை, ஒரு வாரத்திற்குள் முடிக்கும்படி, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு, கெடு விதித்துள்ளது.
சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மே மாதம் முதல், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீரும் கிடைக்காமல், மக்கள் திண்டாடினர். இந்நிலையில், நீர்நிலைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தன்னார்வலர்களே அதற்கு முன் வர வேண்டும் என்றும், நம் நாளிதழில், செய்திகள் வெளியிடப்பட்டன.இதையடுத்து, நீர்நிலைகளை சீரமைக்க, மக்களே களமிறங்கிய நிலையில், தமிழக அரசும் கவனம் செலுத்த துவங்கியது.நீர்நிலைகளை துார்வார தன்னார்வலர்களுக்கு அனுமதி அளித்ததோடு, ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு, 499 கோடி ரூபாயை ஒதுக்கி, பணிகளை உடனே துவக்க, பொதுப்பணித் துறைக்கு அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, ஜூன், 16ல் வெளியானது. குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,829 ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க, திட்டமிடப்பட்டது.பாசனதாரர்கள் சங்கங்கள் வாயிலாக, பல மாவட்டங்களில், ஜூன் இறுதியில் பணிகள் துவக்கப்பட்டன. பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், வரும், 16ம் தேதிக்குள் பணிகளை முடிக்கும்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, அரசு, கெடு விதித்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குடிமராமத்து திட்டப் பணிகள், பல மாவட்டங்களில், ஜூன் மூன்றாவது வாரத்தில் துவங்கின. பணிகள் துவங்கி, இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டன.ஒரு சில இடங்களை தவிர, மற்ற இடங்களில்,தொடர்ச்சி 2ம் பக்கம் குடிமராமத்து பணிகள்முதல் பக்க தொடர்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்பணிகளை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, அரசு, 'கெடு' விதித்துள்ளது.இதையடுத்து, பணிகளை துரிதப்படுத்தி, குறித்த நாட்களுக்குள் முடிக்கும்படி, பொறியாளர்களுக்கு, பொதுப்பணித் துறை செயலர், மணிவாசன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.வழக்கமாக வட கிழக்கு பருவமழை, அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும் என்பதால், செப்., 30க்குள் பணிகளை முடிக்க, ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்தது. பருவ மழை முன்கூட்டியே துவங்கினால், பணிகளை முடிக்க முடியாமல், பிரச்னை ஏற்படும்; மழை நீரை சேகரிக்க முடியாமல் போய்விடும் என்பதால், ஒரு வாரத்தில் பணிகளை முடிக்கும்படி அரசு, 'கெடு' விதித்துள்ளது. அதற்கேற்ப, பொதுப்பணித் துறை பொறியாளர்களும், தயாராகி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X