பங்குச் சந்தை மோசடியில் சிதம்பரத்தை விசாரிக்கணும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பங்குச் சந்தை மோசடியில் சிதம்பரத்தை விசாரிக்கணும்'

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (49)
Share
பங்குச்சந்தை, ஊழல், சிதம்பரம், தொழிலதிபர், கோ லொகேஷன், மோசடி, கைது

புதுடில்லி : 'என்.எஸ்.இ., எனப்படும் தேசியப் பங்குச் சந்தையில், 'கோ லொகேஷன்' எனப்படும், பங்குச் சந்தையின் கம்ப்யூட்டர் தகவல்களை சேமித்து வைக்கும், 'சர்வரை' பயன்படுத்த சிலருக்கு அனுமதி அளித்ததில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 'இதில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்' என, பிரபல தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷா வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவின் பங்குச் சந்தை மனிதர் என்றழைக்கப்படும், பிரபல தொழிலதிபர், ஜிக்னேஷ் ஷா, ஆறு கண்டங்களில், 14 பங்குச் சந்தைகளை நடத்தி வந்தார். எம்.சி.எக்ஸ்., எனப்படும், பொருட்களுக்கான பங்குச் சந்தையையும் இவர் தான் துவக்கினார். இவருடைய, எப்.டி., குழுமம், 5,600 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, தன் அனைத்து தொழில்களையும் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், இவருடைய, '63 மூன்ஸ்' என்ற நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


வாய்ப்பு


காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம் மற்றும் இரண்டு, வருமான வரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு, விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து தங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு இழப்பீடாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரியும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' ஊழல் வழக்கில், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், ஜிக்னேஷ் ஷா கூறியுள்ளதாவது: தேசிய பங்குச் சந்தையில், 2010ம் ஆண்டில், 'கோ லொகேஷன்' எனப்படும் புதிய வசதி வழங்கப்பட்டது. அதாவது, பங்குச் சந்தையின், சர்வருக்கு அருகில், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, புரோக்கர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதன் மூலம், பங்குச் சந்தையின் விபரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பதற்கு முன்பு, இவர்களுக்கு கிடைத்துவிடும். பங்குச் சந்தையில், ஒரு சில விநாடிகள் முந்திக் கொண்டாலே, பல கோடி ரூபாய் லாபம் பார்க்க முடியும். இந்த, 'கோ லொகேஷன்' வசதி அளிக்கப்பட்டது தொடர்பாக, பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும், 'செபி' அமைப்புக்கும் தகவல் அளிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக, முறையான அனுமதியில்லாமல், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் ஆதரவோடு இந்த வசதி கொண்டு வரப்பட்டது.


மோசடி


அதற்கு சாதகமாக, தனக்கு வேண்டிய அதிகாரிகளை, தேசிய பங்குச் சந்தை, செபி போன்ற வற்றில், சிதம்பரம் நியமித்திருந்தார். இந்திய பங்குச் சந்தையில், தேசியப் பங்குச் சந்தைக்கு போட்டியாக நாங்கள் இருந்ததால், எங்களை அழிக்கும் நோக்கத்தில், இவ்வாறு அவர் செய்தார். இதனால், எங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைவிட, பங்குச் சந்தையில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதில் சிதம்பரத்துக்கு கிடைத்த ஆதாயம் உள்ளிட்டவை குறித்து விசாரிக் கப்பட வேண்டும்.

உலகின் மிகப் பெரிய நிதி வர்த்தக மையமாக இந்தியா மாறியிருக்க வேண்டும். ஆனால், அது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அதற்கான முயற்சி எடுத்தாலும், அந்த நிலையைப் பெற முடியாத சூழ்நிலையே உள்ளது. ற்போது, மத்தியில் வலுவான அரசு உள்ளது. தவறு செய்தவர்களுக்கு எதிராக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாக உள்ளனர். அதனால், இதில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். ஆனால், இந்தப் புகார்களை, தேசியப் பங்குச் சந்தை மற்றும் செபி மறுத்துள்ளன.


'கைது செய்யாதீங்க'


ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சார்பில், அவர் குடும்பத் தார், சமூக வலைதளத்தில், செய்தி வெளியிட்டு உள்ளனர். அதில், சிதம்பரம் கூறியுள்ளதாவது:என் சார்பில், சமூக வலைதளத்தில் இந்த செய்தியை வெளியிடும்படி, என் குடும்பத்தாரை கேட்டுக் கொண்டுள்ளேன். 'ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில், பல அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்பிறகே, நீங்கள் அனுமதி அளித்தீர்கள்.

ஆனால், அதிகாரிகள் யாரும் ஏன் கைது செய்யப்படவில்லை? கடைசியாக கையெழுத்து போட்ட தால் தான் உங்களை கைது செய்துள்ளனரா?' என, என்னைச் சந்திப்பவர்கள் கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. எந்த அதிகாரியும் எந்தத் தப்பும் செய்யவில்லை. அவர்கள் யாரையும், கைது செய்ய வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X