Chinmayanand raped me for a year, I have proof: student | சின்மயானந்த் பலாத்காரம் செய்தார்: பெண் பகிரங்க புகார்| Dinamalar

சின்மயானந்த் பலாத்காரம் செய்தார்: பெண் பகிரங்க புகார்

Added : செப் 10, 2019 | கருத்துகள் (160)
சின்மயானந்த் பலாத்காரம் செய்தார்: பெண் பகிரங்க புகார்


ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், சுவாமி சின்மயானந்த், 72. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சராக இருந்தார். இவர், ஷாஜஹான்பூர் பகுதியில், ஆசிரமம் மற்றும் கல்லுாரிகள் நடத்தி வருகிறார்.
இவரது கல்லுாரியில் படித்த 27 வயதான சட்டக் கல்லுாரி மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகார் தெரிவித்தார். ஆனால், தன்னை மிரட்டுவதற்காக, மாணவி பொய் புகார் அளித்து உள்ளதாக, சின்மயானந்த் தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆக., 24ல், உ.பி.,யில் மாயமான மாணவி, ராஜஸ்தானில் மீட்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இவ்வழக்கை எஸ்.ஐ..டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.






இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சின்மயானந்த் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகும், என்னை ஓராண்டுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இது தொடர்பாக, டில்லி, லோதி சாலை போலீசில் புகார் அளித்தேன். டில்லி போலீசார், இந்த வழக்கு விசாரணையை, ஷாஜகான்பூர் போலீசாரின் விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், ஷாஜகான்பூர் போலீசார், இன்னும் வழக்கை பதிவு செய்யவில்லை.
சிறப்பு புலனாய்வுக்குழுவினர், நேற்று என்னை, 11 மணி நேரம் விசாரித்தனர். சின்மயானந்த், என்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தெரிவித்தேன். இருந்தும் கூட, சின்மாயனந்த் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை.
இங்குள்ள போலீஸ் நிலையத்தில், என் தந்தை புகார் கொடுத்த போது, அவரை ஷாஜகான்பூர் மாவட்ட கலெக்டர், இந்திரா விக்ரம் சிங் மிரட்டினார். பலாத்கார புகாருக்கு பதிலாக, காணவில்லை என புகார் தரும்படி கூறியுள்ளார்.நான் தங்கியிருந்த விடுதி அறை, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. என் அறையை, மீடியாக்கள் முன் திறக்க வேண்டும். தேவையான போது, என்னிடம் உள்ள, 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன்.
என்னைப் போலவே, பல பெண்களை, சின்மாயனந்த் சீரழித்துள்ளார். அவர்கள் எத்தனை பேர் என்பதும் எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்களில், சின்மயானந்துக்கு எதிராக, துணிந்து போராட முன்வந்திருப்பது நான் மட்டுமே.இவ்வாறு, அந்த மாணவி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X