தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல: நிர்மலா சீதாராமன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல: நிர்மலா சீதாராமன்

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (52+ 95)

சென்னை : ''தங்கம், இறக்குமதி பொருள் என்பதால், சர்வதேச சந்தைக்கு ஏற்ப, அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது; அதனால், தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல,'' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


மத்திய அரசின், 100 நாள் செயல்பாடுகள் மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், சென்னையில், நேற்று அளித்த பேட்டி: தேர்தல் வாக்குறுதிப்படி, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு, 370 நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற பயன்கள் கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரமும் உயரும்.

இந்தியா, 359 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சி அடைய, முதல் கட்ட நடவடிக்கையாக, வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. எப்போது இணைப்பு என்பதை, அந்தந்த வங்கி நிர்வாகங்களே முடிவு செய்யும். நாடு முழுவதும், ஒரே வரியான, ஜி.எஸ்.டி.,யை தொடர்ச்சி 2ம் பக்கம்அமல்படுத்தியதால், சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது. மோட்டார் வாகன துறையின், மந்தநிலைக்கான காரணம் குறித்து, துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு காரணங்கள் இருப்பதாக, அவர்களே தெரிவித்துள்ளனர். அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது. வாகன உற்பத்தி துறையில், வேலை இழப்பு பிரச்னையை சரி செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, 'முத்தலாக்' தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. 'நாட்டின் உள்கட்டமைப்புக்காக, 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விரைவாக முடிக்க வேண்டிய திட்டங்களுக்கு, முன்னுரிமை அளித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் குறைந்த செலவிலான வீட்டுவசதி திட்டத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1.95 கோடி வீடுகள் கட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022-க்குள், அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்.

'ஜல் ஜீவன்' என்ற, குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 2024க்குள், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். நாட்டில் தேவையில்லாத, 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக, மாதம், 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், பயனாளிகள் எண்ணிக்கை, 6.37 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில், ஏற்றம், இறக்கம் ஏற்படுவது, வழக்கமான ஒன்று. அடுத்த காலாண்டில், வளர்ச்சியை அதிகரிக்க, முழு கவனம் செலுத்தப்படும்.இந்திய ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு நிதி பெறுவதால், எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ரிசர்வ் வங்கியின் வல்லுனர் குழு, பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதை, முடிவு செய்தது. சிக்கலான காலகட்டங்களில், ரிசர்வ் வங்கி நிதியை, அரசு பயன்படுத்துவதில் தவறு இல்லை.

தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கம், முற்றிலும் இறக்குமதி செய்யப்படுகிறது; இதுவும் விலை உயர்வுக்கு, முக்கிய காரணம். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை போன்றவற்றின் அடிப்படையிலும், தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில், ஆபரணத்திற்காக மட்டுமின்றி, சேமிப்பு மற்றும் முதலீடுக்காகவும், தங்கம் வாங்கப்படுகிறது.

சென்னை - ரஷ்யா இடையே, நேரடி கப்பல் போக்குவரத்து துவங்குவதால், சென்னை துறைமுகத்தில் இறக்குமதி அதிகரித்து, பொருளாதாரம் பல மடங்கு வளரும். இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, மத்திய அரசின், 100 நாள் சாதனை மலரை, அமைச்சர் வெளியிட்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X