தலாய்லாமாவுக்கு ஜே.எம்.பி., குறி வைப்பது ஏன்?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

தலாய்லாமாவுக்கு ஜே.எம்.பி., குறி வைப்பது ஏன்?

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (3)
Share
dalai lama,தலாய்லாமா,ஜே.எம்.பி., குறி,ஏன்?

வங்கதேசத்தில் செயல்பட்டு வந்த, பயங்கரவாத இயக்கமான, ஜே.எம்.பி., என்றழைக்கப்படும், 'ஜமாத் -- உல் - முஜாகிதீன்' 2005ல், அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட போதிலும், பல்வேறு பெயர்களுடன் ரகசியமாக செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டின் எல்லை மாநிலங்களான, மேற்குவங்கம், அசாம் மற்றும் திரிபுராவில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இவ்வமைப்பினர் ஊடுருவியுள்ளனர். இந்த அமைப்பின் பின்புலத்தை ஆராய்ந்த மத்திய அரசின் உள்துறை. ஜே.எம்.பி.,க்கு தடை விதித்தது. இந்தியாவில், புத்த மதத்தினரின் புனித தலமாக விளங்கும் பீஹார் மாநிலம், புத்தகயாவில், 2013ல் சங்கிலித் தொடராக, ஒன்பது இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், பலர் காயமடைந்தனர். புலனாய்வுத் துறையின் விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது, வங்க தேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஜே.எம்.பி., தான் என, கண்டறியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், குற்றவாளிகள் சிலர், இன்னமும் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் முக்கிய நபராக கருதப்படும், ஷேக் அசுதுல்லா, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளால், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டான்.தலாய்லாமாவுக்கு குறிகடந்த, 2017, ஆகஸ்ட்டில், அண்டை நாடான, மியான்மரில் ரொஹிங்யா பயங்கரவாதிகள், அந்தநாட்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தி, பலரை கொன்றனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் வெடித்த வன்முறைகளில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாகவே, ஜே.எம்.பி.,யின் பார்வை, புத்த மதத்தினர் மீது திரும்பியது. ஜே.எம்.பி.,யும், அதன் இந்திய ரகசிய அமைப்பும், ஹிமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் தங்கியிருக்கும் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் உயிருக்கு குறி வைத்துள்ளன.

பீஹாரில் உள்ள புத்தகயா மீது மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜே.எம்.பி., மீதான கண்காணிப்பு, மேற்கு வங்கத்தில் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதை அடுத்து, அவர்கள் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக, தமிழகத்துக்கு தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோவை, திருப்பூர்கோவையில் உள்ள நகைப் பட்டறைகள், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், மேற்கு வங்கத்தினர் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் வங்க தேசத்தவர்களும் ஊடுருவி, உள்ளூர் மக்களைப் போல ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

'வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், போலீஸ் வேட்டை தீவிரமாகும்போது, தப்பி தமிழகம் வரும் பயங்கரவாதிகள், கோவை, திருப்பூரில் பதுங்கி பணியாற்றுகின்றனர். 'அங்கு நிலைமை சீரானவுடன் திரும்ப சென்றுவிடுவதும் ரகசியமாக நடக்கிறது' எனக் கூறும் உளவுத்துறையினர், அவர்களை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை, திருப்பூரில் தங்கி வேலை செய்யும் மேற்கு வங்க நபர்களில், வங்க தேசத்தவரை மட்டும் அடையாளம் காண்பதில் சிக்கல்கள் உள்ளன. 'இங்கேயே தங்கி, வாக்காளர் அடையாள அட்டை கூட பெற்று விட்டனர்; இருப்பினும், சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X