பலம் பெருகும்; பல சவால்களை சந்திக்க முடியும்!: நிர்மலா சீதாராமன்

Updated : செப் 13, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
பலம், பெருகும்,நிர்மலா, ரிசர்வ் வங்கி, சவால்

'ரிசர்வ் வங்கி, 1.76 லட்சம் கோடி ரூபாயை, ஏன் அரசுக்கு வழங்குகிறது; வங்கிகள் இணைப்பு அவசியமா?' என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், சென்னையில், நேற்று(செப்.,11) நமது நாளிதழுக்கு, சிறப்பு பேட்டி அளித்தார்.


அதன் விபரம்:

மத்திய அரசு, 1.76 லட்சம் கோடி ரூபாயை, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற உள்ளது. இந்தப் பணம், மத்திய அரசுக்கு, ஏன் தேவைப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், உபரி பணம், மத்திய அரசுக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வளவு பணம் வேண்டும் என்று அரசு கேட்டு, அவர்கள் கொடுப்பதில்லை. இதற்கு, ஒரு வழிமுறை உள்ளது. ரிசர்வ் வங்கிக்கு, எந்தவிதமான, 'ரிஸ்க்' உள்ளது; அதை சமாளிக்க, தேவையான நிதி ஆதாரம் எவ்வளவு என்பதை தீர்மானிப்பர். அதன் பின், குறிப்பிட்ட பிரிவுகளில், எவ்வளவு உபரி தொகை இருக்கிறது என்பதை முடிவு செய்வர்.

அந்த உபரியில் இருந்து, அரசுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதை, முடிவு செய்வர். ஒவ்வொரு ஆண்டும், உபரியின் அளவுக்கு ஏற்ப, மத்திய அரசுக்கு கொடுக்கக் கூடிய தொகை மாறுபடும். இதைத் தீர்மானிக்க, ஒரு குழு உள்ளது. அவர்கள், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த மாதிரி முடிவை எடுப்பர். இந்த ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நிதி கொடுக்கப்பட உள்ளது. இது, பிரதமர் கூறியோ, ரிசர்வ் வங்கியில் இருந்து, மொத்தமாக வழித்து எடுப்பதற்காகவோ செய்யப்பட்டது அல்ல. இது, ரிசர்வ் வங்கியில் நடக்கும், வழக்கமான நடைமுறை.

இது, பிமல் ஜலான் கமிட்டி முடிவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசுக்கு, இந்தத் தொகை ஏன் தேவை; இதை, வாங்காமலேயே இருக்கலாமே?

அந்த உபரித் தொகையை, அரசு எப்படி பயன்படுத்தப் போகிறது என்பது, அதன் தனிப்பட்ட தீர்மானம். அந்தத் தொகை, அங்கே இருப்பதை விட, வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழிக்கப்படுவது முக்கியம். அதுவும், நம் நாட்டுப் பணம் தான். இன்றைக்கு இல்லையென்றாலும், என்றைக்கேனும், நாட்டின் உள்கட்டுமானத்துக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் வந்து சேரும்.

ரிசர்வ் வங்கியின், மூத்த கவர்னர்கள், தொடர்ந்து ராஜினாமா செய்கின்றனரே; அதற்கு, 'அழுத்தம்' தான் காரணமா?

எந்தவிதமான அழுத்தமும் இல்லை. இதற்கு முன், என்ன நடந்தது என்பது, எனக்கு தெரியாது. இம்முறை, 'அழுத்தம்' இருந்திருந்தால், அதைப் பற்றி பேசக்கூடிய, தன்னம்பிக்கையுள்ள வல்லுனர்கள், அந்தக் கமிட்டியில் இருந்தனர். அரசிடமிருந்து சின்ன அழுத்தம் இருந்திருந்தால் கூட, அவர்கள் வெளிப்படையாக, 'அரசு அணுகுமுறையை எதிர்க்கிறோம்' என்று, சொல்லியிருப்பர். அதனால், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைத்து, அவர்கள் மீது அழுத்தம் செலுத்தினோம் என்று சொல்வதில், அர்த்தமில்லை. ஏனெனில், அங்கிருப்போர் எல்லாரும், மிகவும் தரம் வாய்ந்த, துறை சார்ந்த வல்லுனர்கள்.

நுாறு நாள் வேலைத் திட்டம் என்பது, உற்பத்தியற்ற செலவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் அரசு தொடர்ச்சியாக, நிதி ஒதுக்கீடு செய்து வருகிறதே, ஏன்?

அந்த திட்டம், முன்பு முறையாக செயல்படுத்தாததால், உற்பத்தியற்ற செலவு என்ற, விமர்சனத்தை பெற்றுள்ளது. வேலை தேடி வருவோருக்கு, வேலை கொடுத்து, அவர்கள் வழியே சொத்துக்களை உருவாக்க வேண்டும் என்பது தான், அதன் நோக்கம்.அது, குளம், குட்டைகளை வெட்டுவதாக, கட்டடங்களை எழுப்புவதாக, வாய்க்கால்களை விரிவுபடுத்துவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது, நம் நாட்டின் சொத்தாக மாற வேண்டும் என்பது தான் அடிப்படை. உள்ளூர் அளவில், அது பயனளிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அந்த திட்டத்துக்கு, தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

சமீபத்தில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட, கூடுதல் வரியை நீக்கினீர்கள். ஆனாலும், அவர்கள், தங்கள் முதலீட்டை எடுத்துக் கொண்டு, நம் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்கிறதே?

முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, இப்படி சிக்கல் இருப்பது தெரிய வந்தது. அதற்கேற்ப, அந்த முடிவை எடுத்தோம். அதாவது, பட்ஜெட்டுக்கு முந்தைய நிலையே தொடரும் என அறிவித்தோம்.ஆனாலும், அவர்கள் எடுத்து செல்கின்றனர் என்றால், எந்தப் பிரிவினர் எடுத்து செல்கின்றனர் என்று பார்க்க வேண்டும். அது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களா; அன்னிய நேரடி முதலீட்டாளர்களா; பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும், அன்னிய நிறுவனங்களா அல்லது முதிர்வடைந்த தொகையை எடுத்து செல்கின்றனரா என்று, அலசி ஆராய வேண்டும்.

கடந்த பல மாதங்களாக, அன்னிய நேரடி முதலீடுகள், நன்கு உயர்ந்திருக்கின்றன. அவர்கள், முதலீட்டை வெளியே எடுத்து செல்கின்றனர் என்று மட்டும் பேசினால், நாம் சரியான தகவல்கள் அல்லது புரிதலின் அடிப்படையில் பேசவில்லை என்றே, அர்த்தம்.

அமெரிக்காவே பாதுகாப்பு வாதம் பேசும் நிலையில், நம் ஏற்றுமதிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், நம் அரசு, ஏதேனும் புதிய துறையில், முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறதா?

ஏற்றுமதிக்கான வாய்ப்புள்ள துறைகளில் கூட, இனிமேல் ஏற்றுமதிகள் பெருகாது என்று கருதுவது, சரியான அணுகுமுறை அல்ல. இப்போது, டாலருக்கு நிகரான, நம் ரூபாயின் மதிப்பு, ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால், நம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், கூடுதலாகவே இருக்கும். மேலும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள, வர்த்தகப் போரினால், நமக்கு, ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சீனா ஏற்றுமதி செய்த, பலவகையான பொருட்களை, நாம் ஏற்றுமதி செய்ய முடியும்.

கடந்த, இரண்டு ஆண்டுகளாக, நம்முடைய விவசாயத் துறையில், உபரி உற்பத்தி ஏற்பட்டுள்ளது. பல பொருட்களில் உபரி உற்பத்தி இருக்கிறது. இவற்றை ஏற்றுமதி செய்ய, வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு தேவையான ஊக்கத்தை தரும்போது, ஏற்றுமதிகளின் அளவு பெருகும்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை, முக்கிய விஷயமாக சொல்லி வருகிறீர்கள். இந்தியா இருக்கும் நிலையில், வளர்ச்சியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டுமா?

கடந்த, 2014ல், மோடி அரசு அமைந்தபோது, உணவுப் பணவீக்கம், 10 சதவீதமாக இருந்தது. அடிப்படை பணவீக்கம், 8 சதவீதம். அதற்கு முந்தைய, ஐந்து ஆண்டுகளும், இதே அளவில் பணவீக்கம் இருந்து வந்தது. அதனால் தான், முந்தைய அரசில், விலைவாசி கடுமையாக உயர்ந்தது. துவரம் பருப்பு, 210 ரூபாய், உளுந்து, 160 ரூபாய் வரை உயர்ந்தது. நாட்டுக்கு தேவையான பருப்பு வகைகள், உற்பத்தி ஆகாததால், இறக்குமதி செய்தோம். வியாபாரிகள் சொல்கிற விலையை, நாம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தான், பணவீக்கத்தை் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையை யோசிக்க ஆரம்பித்தோம்.

உதாரணமாக, மழைவளம் உள்ள பகுதிகளில், விவசாயிகளை, நிறைய பருப்பு உற்பத்தி செய்ய சொன்னோம்; அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தோம். நல்ல விளைச்சல் கிடைத்தது. பருப்புகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.எங்கிருந்தெல்லாம் பணவீக்கம் ஏற்படுமோ, அந்த துறைகளில் கவனம் செலுத்தி, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினோம். இப்படி செய்ததால், பணவீக்கம் கட்டுக்குள் வந்தது. பணவீக்கம், 4 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று தான், எந்த அரசும் முயற்சி செய்யும். நமக்கோ, ஐந்து ஆண்டுகளாக, பணவீக்கம், 3 சதவீதத்திற்குள் உள்ளது.

அதனால் தான், இப்போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டாமே என, சொல்கிறீர்கள். பணவீக்கம் குறையக் குறைய, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்பது, அடிப்படை பொருளாதாரக் கொள்கை. இப்போது, வேலைவாய்ப்பை உயர்த்துவதற்காக, பணவீக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை, ஏன் தளர்த்தக் கூடாது என்ற, கேள்வி எழுப்பப்படுகிறது. நிச்சயமாக செய்ய வேண்டியது தான்.

ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கைக் குழு தான், பணவீக்கத்தைக் கண்காணித்து வருகிறது. நாம் மக்களுடைய நுகர்வு உயர்வதற்காக, செலவுகளை அதிகரிக்க அதிகரிக்க, பணவீக்கத்தின் அளவு படிப்படியாக மேலே உயரும். செலவு அதிகரிக்கும்போது, பணப்புழக்கம் அதிகமாகும்போது, பணவீக்கமும் உயரும். அதனால், வேலைவாய்ப்புகளிலும், சமூகத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம். அதேசமயம், பணவீக்கம், 4 சதவீதத்தை தாண்ட விடக் கூடாது என, கவனத்தோடு இருக்கிறோம்.

துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை திறக்கப்படா விட்டால், தாமிரம் போன்ற அடிப்படை பொருளுக்கு, சிரமப்பட வேண்டியிருக்கும். அதை திறக்க, மத்திய அரசு, என்ன திட்டம் வைத்திருக்கிறது?

மாநில அரசு தான், இந்த பிரச்னையில், ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது. தாமிரத்தை, தற்போது வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால், நிறைய அன்னிய செலாவணி, வெளிநாடுகளுக்கு போகிறது.

துறைமுகங்கள் மற்றும் சாலை திட்டம் தொடர்பாக, 'சாகர்மாலா, பாரத்மாலா' என்றெல்லாம் சொன்னீர்கள். தமிழகத்தில், எந்த திட்டமும் துவக்கப்படவில்லையே?

இனி, ரஷ்யாவில் உள்ள துறைமுக நகரமான, விளாடிவோஸ்டோக்கில் இருந்து, நாட்டுக்கு வந்து இறங்கப் போகிற, ஒவ்வொரு பொருளும், சென்னைக்கு தான் வரப் போகுது. அதனால், சென்னை துறைமுகத்துக்கு, 'சாகர்மாலா' நிச்சயம் வரும்.

தமிழகத்தில், ராணுவ தளவாட தொழில் தடம் அமைப்பது குறித்து சொன்னீர்கள். அதில், ஏதேனும் முன்னேற்றம் உண்டா?

நிச்சயம் உள்ளது. இந்தமுறை பட்ஜெட் தயாரிக்கும்போது, பாதுகாப்புத் துறையில் இருந்து வந்து, கோரிக்கை வைத்தனர். 'சென்னை, சேலம், கோவை, திருச்சி உட்பட, ஆறு இடங்களில் முனையங்கள் உருவாக்கப் போகிறோம்' என்றனர். அந்தப் பகுதிகளைச் சுற்றி, பாதுகாப்புத் துறைக்கு தேவைப்படும், தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராணுவத் துறையில் இருந்து, பொருட்கள் வாங்குவதற்கான, 'டெண்டர்' வெளியிடப்படும் என்றீர்கள்; அவை வெளிவந்தனவா?

இந்த மையங்களில் வேலைகள் ஆரம்பித்த பின் தான், பொருட்கள் உற்பத்தி தொடங்கும். அப்புறம் தான், டெண்டர் வெளியிட்டு, பொருட்களை வாங்க முடியும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பணம் உள்ள வங்கிகளில் இருந்து, இன்னொரு வங்கிக்கு பணத்தை பெற்றுக்கொள்ள, 'இன்டர் பேங்க் லெண்டிங் ரேட்' இருக்கும்போது, பொது துறை வங்கிகள் இணைப்பு தேவையா?

'இன்டர் பேங்க் லெண்டிங் ரேட்' வழியே செய்யலாம். ஆனால், வங்கிகளுடைய அளவும், திறனும் முக்கியம். இன்றைக்கு, நாட்டில் பெருகியிருக்கும் வர்த்தகத்துக்கோ, உள்ளூர் தேவைகளுக்கோ, வங்கிகளும், அதன் அளவும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. வங்கிகள், பல்வேறு இடங்களில் பிரிந்து கிடக்காமல், ஒன்றாக சேரும்போது கிடைக்கும் பலம், மிகவும் பெரியது. பல சவால்களை சந்திப்பதற்கான வலு, இணைப்பால் வங்கிகளுக்கு கிடைக்கும்.

தற்போது, 27 பொதுத் துறை வங்கிகளை, 12 வங்கிகளாக ஒருங்கிணைத்துள்ளீர்கள். இதில், ஒரு வங்கி நலிவடைந்தாலும், அது, மொத்த பொருளாதாரத்தையும் பாதிப்படைய வைத்து விடாதா?

அது ஏற்படாமல் இருப்பதற்காக தான், அவற்றை தரம் உயர்த்துவதற்கான, நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வங்கி இயக்குனர்களின், சுதந்திரத்தை மேம்படுத்தியுள்ளோம். எங்கெல்லாம் முதலீடு செய்யலாம் என்பதை, முடிவு செய்வதற்கு, தேவையான தகுதிகளோடு இருக்கும், துறைசார் வல்லுனர்களை, வெளியில் இருந்து அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு தேவைப்படும், சந்தை தொடர்பான தகவல்களை கொடுக்க உள்ளோம். வங்கிகள் நலிவடையக் கூடாது என்பதற்காக, இவற்றை செய்கிறோம்.

பொதுத்துறை வங்கிகளுக்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய், மறுமுதலீட்டுத் தொகை கொடுக்கப் போகிறீர்கள். கடன் கொடுத்தே தீர வேண்டும் என்று, வங்கிகளை வற்புறுத்துவதால், மீண்டும் வாராக் கடன் பெருகி விடாதா?

வாராக் கடன் ஆகிவிடாமல் இருக்க தான், வங்கிகளை தரம் உயர்த்தும் முயற்சிகளை எடுத்துள்ளோம். எங்கே வங்கிகளுக்கு, கடன் கொடுக்க முடியாத சூழல் இருக்கிறதோ, அங்கே வங்கி அல்லாத, நிதி நிறுவனங்களோடு இணைந்து, கடன் கொடுக்கலாம். நன்கு இயங்கும், தரமான முதல், 10 வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், 'எங்களிடமே பணம் இருக்கிறது; நாங்களே கடன் கொடுத்துக் கொள்கிறோம்' என கூறினால், இரண்டாம் நிலையில் இருக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களோடு இணைந்து, கடன் கொடுக்கலாம். இப்படி செய்தால், எங்கே கடன் வாங்குவதற்கு, மக்கள் தயாராக இருக்கின்றனரோ, அங்கே பணம் போய் சேரும். அந்த எண்ணத்தோடு தான், 55 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுக்கப் போகிறோம்.

உங்கள் பார்வையில், எப்போது, நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8 சதவீதத்தை தொடும்?

எந்தக் காலாண்டில், இது நடக்கும் என்று, சொல்ல முடியாது. இப்போது, 5 சதவீதம் இருக்கிறது என்றால், அடுத்த காலாண்டிலேயே, அதில் முன்னேற்றம் தெரிய வேண்டும் என்று தான், கவனம் செலுத்தி வருகிறோம். அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமல்ல; பிரதமரே இதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும், என்னிடம் பேசும்போது, 'பல துறையினரை சந்தித்து வருகிறீர்களே... அவர்கள் என்ன சொல்கின்றனர்? அவர்களுடைய ஆலோசனைகள் என்னென்ன? அதற்கேற்ப, நாம் தீர்வுகளை வழங்குவோம்' என்கிறார்.

நேரடி வரி விதிப்பு கமிட்டி பரிந்துரைகள், எப்போது அமலுக்கு வரும்?
விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
12-செப்-201918:31:00 IST Report Abuse
R chandar Reforms should be done in direct and indirect taxation , licencing for start up of industry should be done at one shot investment in shares and bank deposit should be encouraged and should be given more tax relief, money should be comes in to bank from public for that they have to liberalize and exempt tax on earning from banks deposit and shares. This should be seriously looked in to and announced immediately to ease out the money flow for promote industry, and reing of closed industry should be allowed with merging with new company by relaxing in tax relief,. Government should make a way to earn money through shares and debentures from profits of company rather putting and imposing tax on them
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
12-செப்-201916:03:30 IST Report Abuse
Ambika. K எல்லாம் சரி அம்மணி இங்கு Bangalore இல் 12 லக்ஷம் தொழிலாளர்கள் வேலை போச்சு உடனடியாக சரி செய்யுங்கள்
Rate this:
Cancel
12-செப்-201914:16:51 IST Report Abuse
ஆப்பு தொழில் வளர்ச்சி 12.5 சதவீதமா வளரும்னு சொன்னவரே இந்த அம்மையார்தான். இப்போ 5 சதவீதத்துலே கொண்டாந்து நிறுத்தியிருக்காரு.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201915:49:42 IST Report Abuse
Nallavan Nallavanஅறிவாளியே ...... தொழில் வளர்ச்சி விகிதம் (தொழில் முன்னேற்றம், முதலீட்டின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது) வேறு ............ உள்நாட்டு உற்பத்தி (தனி நபர் வருமானம், வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது) வேறு ............... அறிவாலயத்துல இப்படித்தான் கேட்க சொன்னார்களா ??...
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
12-செப்-201923:13:04 IST Report Abuse
K.Sugavanamஅறிவார்ந்த அறிவூட்டல்..பலே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X