பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; உள்ளாட்சி அதிகாரிகள் வேடிக்கை| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; உள்ளாட்சி அதிகாரிகள் வேடிக்கை

Added : செப் 12, 2019 | கருத்துகள் (2)
பிளாஸ்டிக், பொருட்கள், பயன்பாடு, உள்ளாட்சி, அதிகாரிகள் வேடிக்கை

தமிழகத்தில், தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய, உள்ளாட்சித் துறைஅதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், அவற்றின் பயன்பாடு, மீண்டும் அதிகரித்துள்ளது.


கிடுக்கிப்பிடி:

தமிழகத்தில், இந்தாண்டு, ஜன., 1 முதல், ஒருமுறை பயன்படுத்தி, துாக்கி வீசக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி பயன்படுத்துவோருக்கு, 100 முதல், 1 லட்சம் ரூபாய் வரை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், அபராதம் விதித்து வருகின்றன. ஆரம்பத்தில், கிடுக்கிப்பிடி காட்டிய, உள்ளாட்சித் துறை அதிகாரிகள், தற்போது, மெத்தனமாக செயல்படுகின்றனர்.

இதனால், தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதோடு, வெளிமாநிலங்களில் இருந்தும், அதிகளவில், தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. இதன் காரணமாக, எல்லா இடங்களிலும், அவை தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு, மக்களிடையே, பெரியளவில் மாற்றம் ஏற்படாதது தான் காரணம்என, வியாபாரிகள் கூறுகின்றனர்.


முறைகேடு:

'பொருட்கள் வாங்க மக்கள், தாங்களாகவே, துணிப் பைகளை எடுத்து வருவதில்லை. மாறாக, கடைக்கு சென்று, அங்கு தான், பைகளை கேட்கின்றனர். இதனால், வியாபாரம் கருதி, விதியை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது' என, கூறுகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது, மக்கள், தாங்களாகவே பாத்திரங்கள் மற்றும் துணிப் பைகளை எடுத்து வந்ததை பார்க்க முடிந்தது.அதிகாரிகள், கமிஷனுக்காக, தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை முறைகேடாக தயாரிக்கவும், விற்கவும் அனுமதிக்கின்றனர். இதனால் தான், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும், அக்., 2 முதல், 50, 'மைக்ரான்' அளவுக்கு குறைவான, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்பின், பிளாஸ்டிக் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X