அன்பே ஆன்மிகம் - எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி

Added : செப் 13, 2019
Share
Advertisement
அன்பே ஆன்மிகம் - எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி

தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 59 புத்தகங்கள் எழுதியவர் வரலொட்டி ரெங்கசாமி. மதுரையின் 'எழுத்துலக முகமாக' இருக்கும் இவரது எழுத்துப்பயணம் 1997 ல் துவங்கியது. முதலில் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள் என துவங்கிய எழுத்துப்பணி பின்னர் சமூக நாவல், தன்னம்பிக்கை புத்தகங்கள் என விரிந்தது. இப்போது இவர் ஆன்மிக எழுத்தாளர் என்றே பெரிதும் அறியப்படுகிறார். சனிக்கிழமை தோறும் வெளிவரும் தினமலர் ஆன்மிக மலர் புத்தகத்தில், 'பச்சை புடவைக்காரி' என்ற தொடரை 52 வாரங்கள் எழுதினார். வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்ற அத்தொடரை தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் புத்தகமாக வெளியிட்டது. இந்த புத்தகமும் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த எழுத்து தந்த உற்சாகத்தில் 'அன்பே ஆன்மிகம்' என்ற தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரிசையாக புத்தகங்கள் எழுத உள்ளார். இந்த வரிசையில் முதல் புத்தகம் 'தாயென வந்தவள்' சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் புத்தகத்திருவிழாவில் வாசகர்களை ஈர்த்துள்ளது.

அன்பே ஆன்மிகம் உருவானது குறித்து வரலொட்டி ரெங்கசாமி கூறியதாவது:பச்சைப்புடவைக்காரி எழுதுவதற்கு முன்பு நான் ஆன்மிக புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அவை இந்த புத்தகம் போன்று மக்களை சென்றடையவில்லை. பச்சைப்புடவைக்காரியில் சாதாரண மக்களான கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்வின் கஷ்டங்களை மீனாட்சி அம்மனோடு பேசுவது போல எழுதினேன். அதில் எங்கும் மீனாட்சி அம்மன் என்று குறிப்பிடாமல் 'பச்சைப்புடவைக்காரி' என்றே எழுதியிருந்தேன். மீனாட்சி அம்மனுக்கு பச்சைப்புடவைக்காரி என்று பெயர் இல்லை தான்; ஆனால் பச்சை நிறத்தவள் அவள். கிராமங்களில் அம்மனை புடவைக்காரி(சீலக்காரி) என்பதால் அப்படி சேர்த்தேன்.

அந்த தொடரும், பின் வந்த புத்தகமும் 'பச்சைப்புடவைக்காரி புகழ்' என்று எனக்கு அடைமொழி தந்து விட்டது. இந்த உத்வேகத்தில், 'மீண்டும் பச்சைப்புடவைக்காரி' என்ற தொடரை தினமலர் ஆன்மிக மலர் புத்தகத்தில் விரைவில் எழுத உள்ளேன்.

என் எழுத்து மரபு சார்ந்த ஆன்மிகத்தில் இருந்து வேறுபட்டது. புராணங்களில் இருந்து எழுதுவதை விட சராசரி மனிதனின் வாழ்வியல் பிரச்னைகளை ஆன்மிகம் சார்ந்து பார்க்கிறேன். அன்பு வடிவானவன் இறைவன். ஆன்மிகம் என்பது பூஜையில் மட்டுமல்ல; வேறுபாடு காட்டாமல் மக்களிடம் அன்பு காட்டுவதில் உள்ளது. இந்த கருத்துக்களை ஆன்மிக வடிவில் மக்களிடம் எப்படி சேர்ப்பது என்று நானும், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஆர். லட்சுமிபதியும் நீண்ட நாட்கள் விவாதித்தோம். அதன் விளைவு தான் 'அன்பே ஆன்மிகம்' நுால் வரிசை.

முதல் நுாலாக 'தாயென வந்தவள்' வெளியாகி விட்டது. இதில் தாயாக இருக்கிறாள் மீனாட்சி. இரண்டாவது புத்தகம் 'வாராய் என் தோழி' வரப்போகிறது. இதில் தோழியாகிறாள் மீனாட்சி!கதைகளில் மீனாட்சி அம்மன் கதாபாத்திரம் இல்லை. ஆனால் அம்மனோ என நினைக்க தோன்றும் கதாபாத்திரம் உண்டு. நல்ல மனிதர்கள் வடிவில் கடவுள் நமக்கு காட்சி தருகிறார். கஷ்ட நேரத்தில் உதவுபவர்கள் தானே கடவுள்!

'மனித முயற்சியால் தான் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது' என நினைப்பது தான் மூடநம்பிக்கை. இறைவன் அருளால் தான் எல்லாம் நடக்கிறது. பயனை எதிர்பார்த்து இறைவனிடம் பக்தி காட்டுவது தவறு. நமது வாழ்வின் கருவியாக இறைவனை பயன்படுத்தக்கூடாது. நாம் இறைவனின் கருவியாக இயங்க வேண்டும். ஆன்மிகத்தின் அடிப்படை தன்னலம் பார்க்காமல் பிறரிடம் அன்பு காட்டுவதே. இதனை அடிப்படையாக கொண்டே அன்பே ஆன்மிகம் வரிசையில் புத்தகங்கள் வெளிவரப்போகிறது, என்றார்.இன்னும் பேச varalotti@gmail.com

புத்தகம் தேவைக்கு :
1800 425 7700 (Toll Free)மதுரை தமுக்கம் புத்தக கண்காட்சி அரங்கு 55பி, 55 சி.,யில் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X