லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார்

Added : செப் 14, 2019

துாத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறையில் நேற்று புகார் அளித்தனர்.

துாத்துக்குடியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கு நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் திரளாக வந்தனர். அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டி.எஸ்.பி. யிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தனர். அந்த மனுவில் தமிழக அரசால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையானது துாத்துக்குடியில் உள்ள அரசு அதிகாரிகள் மத ஆலையங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்களை ஊழல்மயப்படுத்தும் வேலையை செய்துவருகிறது. கடந்த ஜூலை 24ம் தேதி இன்ஸ்பெக்டர் ஒருவரை இரவு விருந்துக்கு அழைத்துபேரம் பேசியுள்ளது.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் எஸ்.பி. விளக்கம் கேட்டுள்ளார். அதேபோல் துாத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 274 குடும்பங்களின் குடிநீர் இணைப்பிற்கான வைப்பு தொகையாக 33 லட்சம் ரூபாய் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தகவல் ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. அரசால் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதியுதவி வழங்குவதை லஞ்சம் வழங்குவதாகவே பார்க்க வேண்டும். எனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் நிர்வாகிகள் வேதாந்தா ஆலை மூலம் பலன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை இல்லையெனில் போராட்டம்: லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி .யிடம் மனுகொடுத்த பின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம் நீர் காற்று கடல் என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலை தற்போது மக்களிடையே சாதி ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.தமிழக அரசின் கொள்கைகளை எதிர்த்து செயல்படும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை ஊழல் நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.

ஆலையை மூடிய பின்பும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் பணத்தின் மூலம் மக்களிடையே சாதி ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையி்ன் இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்படவில்லை எனில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் மிகப்பெரிய மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X