பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீருடன் கழிவுநீர் புகுந்த பகுதிகளில் சுகாதாரத்துறை நடவடிக்கை

Added : செப் 14, 2019
Advertisement

மகுடஞ்சாவடி: மழைநீருடன், கழிவுநீர் புகுந்த பகுதிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, உரிய நடவடிக்கை எடுத்தனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், நேற்று முன்தினம், இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையிலுள்ள ஏரி மதகு உடைந்து, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில், மழை நீருடன், கழிவுநீர் கலந்து புகுந்ததால், மக்கள் விடிய, விடிய பெரும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து, வருவாய், தீயணைப்பு, போலீஸ் துறையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலை, சுகாதாரத்துறையினர் வீடுதோறும் சென்று, குடிநீர் தொட்டிகள், மழைநீர், கழிவுநீர் தேங்கிய குதிகளில் கிருமி நாசினியை தெளித்தனர். தொடர்ந்து, காய்ச்சிய குடிநீரை பருக அறிவுறுத்தி, கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. பின், 54 பேரை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மதியம், வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி, மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


பெருமாகவுண்டம்பட்டி மக்கள் கூறியதாவது: ஏரியிலிருந்து, மதகு வழியாக உள்ள ஓடையை, சிலர் ஆக்கிரமித்ததாலும், தண்ணீர் வெளியேற வழியின்றி, ஊருக்குள் புகுந்தது. 2015, 2016ல், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தும், ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மதகை சரிசெய்யாததால், நாங்கள் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார். மாலையில், மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய, எம்.பி., பார்த்திபன் கூறுகையில், ''வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரை உயரத்தை அதிகப்படுத்த, வாய்க்காலில் அடைப்பு ஏற்படாதபடி, சிமென்ட் தளம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். ஏரியை பராமரிக்கும் பணியை, துரிதமாக மேற்கொள்ள, கலெக்டரிடம் வலிறுத்தப்படும்,'' என்றார்.

ஆத்தூரில் மழை: ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து, கனமழை பெய்தது. இரவு, 10:00 மணிக்கு மேலும் நீடித்ததால், சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவில் சுவர் இடிந்தது; ஒரு குடும்பம் தப்பியது: இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் எதிரே, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதன் சுற்றுச்சுவர் பின்புறம், பூ கட்டும் தொழிலாளி பழனிசாமி, 38, குடும்பத்துடன் வசிக்கிறார். அங்கு, மூன்று நாளாக பெய்த மழையால், கோவில் சுற்றுச்சுவர், நேற்று காலை இடிந்து, பழனிசாமி வீட்டு சுவர் மீது விழுந்தது. அந்த சுவரும் இடிந்து விழுந்தது. அப்போது, பழனிசாமி, அவரது மனைவி மேகலா, 35, மகள்கள் நித்யா, 13, ரூபிகா, 11, ஆகியோர், கட்டில் மீது தூங்கிக்கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவில் நிலத்தில், திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக, அதன் அஸ்திவாரத்தை தோண்டி, மண்ணை, சுவரையொட்டி அதிகளவில் கொட்டியிருந்தனர். அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சுவர் இடிந்ததாக, மக்களில் ஒருதரப்பினர் குற்றம்சாட்டினர்.

விசைப்படகு போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம்: பூலாம்பட்டியிலிருந்து, நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல, காவிரியாற்றின் குறுக்கே, விசைப்படகு போக்குவரத்து சேவை வசதி உள்ளது. அதன்மூலம், அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், மக்கள் என, தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பயனடைவர். கடந்த, 7ல், காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், அச்சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகிவந்தனர். காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு, நேற்று குறைக்கப்பட்டது. இதனால், ஆறு நாளுக்கு பின், விசைப்படகு போக்குவரத்து சேவை தொடங்கியதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X