இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்| Dinamalar

'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்'

Updated : செப் 16, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (72)
 'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்'

புதுடில்லி : ''இந்தியாவை ஒருங்கிணைக்க, ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும், 'ஹிந்தி தினம்' நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், தனி முக்கியத்துவம் உள்ளது. எனினும், சர்வதேச அளவில், இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி தான் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இன்றைய நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும், ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும், ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்.ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, தாய்மொழி பயன்படுத்துவதை, நாம் அதிகப்படுத்த வேண்டும்; அதேநேரத்தில், ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும்.

'ஒரு நாடு; ஒரே மொழி' என்ற, மஹாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவை நிறைவேற்றுவதில் நாம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அமித் ஷா கூறியிருந்தார்.ஹிந்தி தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமித் ஷா பேசுகையில், ''வடகிழக்கு மாநிலங்களில், அனைத்து குழந்தைகளுக்கும், ஹிந்தி கற்றுத் தரப்படும்,'' என்றார்.அமித் ஷாவின், 'ஒரு நாடு; ஒரே மொழி' கருத்துக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின், 'ஒரு நாடு, ஒரே மொழி' திட்டம், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சி. இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே, இப்படி கருத்து வெளியிட்டிருப்பது, வேதனைக்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கு உரியது. பிரதமர் மோடி, தன்னுடைய நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

இல்லையெனில், தி.மு.க., இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். இது, இந்தியா; 'ஹிந்தி'யா அல்ல.பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: 'இந்தியாவின் ஒற்றை மொழியாக, ஹிந்தி இருக்க வேண்டும்' என்ற, அமித் ஷாவின் கருத்து தவறானது. பிற மொழிகள் பேசும் மக்கள் மீது, ஹிந்தியை திணிக்கக் கூடாது.தாய்மொழியே பெரிது''நாம் பல மொழிகளை கற்றாலும், அனைவருக்கும், அவரவர் தாய் மொழிதான் பெரிது,'' என, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு, டுவிட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஹிந்தி பேசும் மக்களுக்கு, என் வாழ்த்துகள்; நாம் அனைத்து கலாசாரங்களையும், மொழிகளையும், சமமாக மதிக்க வேண்டும். பல மொழிகளை நாம் கற்கலாம்; ஆனால், நம் தாய்மொழியை ஒருபோதும் மறக்கக் கூடாது. தாய்மொழி தான், அனைவருக்கும் பெரிது,'' என, கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X