அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தது முதுகு தான்: போஸ்டர் விவகாரத்தில் எடுக்குமா அரசு நடவடிக்கை?

Updated : செப் 16, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (16)
Advertisement
அடுத்தது முதுகு தான்: போஸ்டர் விவகாரத்தில் எடுக்குமா அரசு நடவடிக்கை?

சென்னை : 'பேனர்' கலாசாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலான போஸ்டர் கலாசாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வீடு, வாசல், கடை, சுற்றுச்சுவர், கட்டடம் என ஒரு இடம் விடாமல் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து பொதுமக்களின் முதுகில் தான் இனி ஒட்ட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. எனவே 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிப்பது போல கண்ட இடங்களில் போஸ்டர் ஒட்டுவோருக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி அரசு எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மென் பொறியாளர் சுபஸ்ரீ 27, பலியானார். அரசியல் கட்சியினரால் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உயிர்பலியை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 'மனித உயிர்கள் அதிகாரிகளுக்கு அவ்வளவு கேவலமாகி விட்டதா' என கேள்வி எழுப்பியது.

சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசுக்கும் கண்டனம் தெரிவித்தது. இதனால் விழிப்படைந்த அ.தி.மு.க. - தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 'எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்களை வைக்கக் கூடாது' என கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் இந்த அறிவிப்பாலும் உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பாலும் இனி பேனர் கலாசாரம் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உயிர் பலி வாங்குவதாகவும் உள்ளன என்றால் போஸ்டர் கலாசாரமும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களுக்கு வழி வகுத்து விடுகிறது. நகரின் அழகை சீரழித்து வருகிறது. மோசமான இந்த போஸ்டர் கலாசாரத்திற்கும் விடிவு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


கிடுக்கிப்பிடி வருமா


போஸ்டர் கலாசாரத்தை தடுக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினரே போட்டிபோட்டு போஸ்டர், பேனர் வைப்பதை ஆட்சியாளர்களும் ரசிப்பதால் இந்த பிரச்னை தொடர்கிறது. பொதுமக்களுக்கு இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக புகார் செய்தால் தற்போதைய சட்டத்தின்படி போலீசாரால் 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்த அபராதம் பெரிதல்ல என்பதால் யாரும் கவலைப்படுவதில்லை.

இரு சக்கர வாகன ஓட்டிகளும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் 100 ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் அனைத்தும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அதுபோல் பொதுமக்களுக்கு இடையூறாக போஸ்டர் ஒட்டினால் 100 ரூபாய் என்ற அபராத தொகையை ஒரு போஸ்டருக்கு 1,000 ரூபாய்; பேனருக்கு 5,000 ரூபாய் என அதிரடியாக உயர்த்தினால் போஸ்டர் பேனர் கலாசாரம் ஒழியும்; போக்குவரத்து சிக்கலும் தீரும்; விபத்துக்களும் குறையும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக செயல்பட்ட தமிழக முதல்வர் பழனிசாமி அதே பாணியில் போஸ்டர் பேனர் கலாசாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


'சென்னை சிங்காரமாகும்'


சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து சாலைகளிலும் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இருப்பதால் எந்த அரசியல் கட்சினரும் சாலையில் கொடி தோரணம் பேனர் வைக்க முடியாது. மீறி அமைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதுடன் சம்பந்தப்பட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் இந்த தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் விலக்கி கொள்ளும் பட்சத்தில் 'சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 விதி 326ன்' விதியின்படி அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெறாமல் போஸ்டர் பேனர் வைத்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராம்; ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அனுமதி எண் இல்லாமல் பேனர் போஸ்டர் அச்சடிக்கும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும். இதுதவிர சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டி விளம்பர பலகை வைத்தால் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும், என்றார்.


'கிரேட்' கர்நாடகா!


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போஸ்டர் ஒட்ட மாநகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு போஸ்டர் ஒட்ட வரி வசூலிக்கப்படுகிறது. வேறு எங்கும் ஒட்டக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பின்பற்றி சென்னை மாநகராட்சியும் மெரினா கடற்கரை, பூங்கா என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டும் போஸ்டர் ஒட்ட அனுமதிக்கலாம். அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தி கட்டணமும் வசூலிக்கலாம். இதனால் இஷ்டத்திற்கு போஸ்டர் ஒட்டுவது தடுக்கப்படும்.


'எம்.ஜி.ஆர்.,' போஸ்டருக்கு வரி


தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர்., 1972ல் வெளியேறினார். அவரது நடிப்பில் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் 1973ல் வெளியானது. அப்போது எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து 30 அங்குலம் அகலம் 40 அங்குலம் நீளம் உடைய 'சிங்கிள் பிட்' சினிமா போஸ்டருக்கு மாநகராட்சி 50 காசு முதல் 90 காசு வரை விளம்பர வரி விதித்தது. இதழ்களின் விளம்பரத்திற்கு 15 காசு முதல் 30 காசு வரி விதிக்கப்பட்டது.

இதனால் போஸ்டர் ஒட்டும் முன் எத்தனை பிட் போஸ்டர்களாக இருந்தாலும் அவை அனைத்தையும் மாநகராட்சிக்கு எடுத்து சென்று வரி செலுத்த வேண்டும். அவற்றில் மாநகராட்சி சார்பில் 'சீல்' வைத்து தரப்படும். சீல் இல்லாத போஸ்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது சுறுசுறுப்புடன் செயல்பட்டது போல மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புக்கள் அனைத்தும் நடவடிக்கை எடுத்தால் போஸ்டர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; உள்ளாட்சிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.
'இடையூறு இல்லாத இடங்களில் பேனர்' வைக்க அனுமதி'
உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி மக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் 'பேனர்' வைக்க அனுமதிக்கப்படும். அதற்கான இடங்கள் வரையறை செய்து அறிவிக்கப்படும்.அதை மீறி பொது இடத்தில் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.பேனர் விவகாரத்தில் சினிமாத்துறையும் கட்டுப்படுத்தப்படும்.
ராஜூ, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
15-செப்-201921:00:39 IST Report Abuse
Viswanathan இரு பிரதான கட்சிகளை தடை செய்தாலே இந்த அசிங்க கலாச்சாரம் ஒழியும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-செப்-201918:28:58 IST Report Abuse
தமிழ் மைந்தன் அதான் இந்த கருணாநிதியும் எம்.ஜி.ஆடும் வந்த பின் தமிழ்நாட்டில் எல்லா சட்டமும் செத்துவிட்டது......இவர்களுக்கு முழு நேர உதவி இட ஒதுக்கீடு அதிகாரிகள்.......
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
15-செப்-201917:29:33 IST Report Abuse
அம்பி ஐயர் இப்போவெல்லாம் போஸ்டர் மேல சாணி உருண்டைகளை யாரும் அடிப்பதில்லை.... அது தான் இன்னும் அவர்களுக்குக் கொண்டாட்டமாய்ப் போய் விட்டது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X