தி.மு.க., இளைஞரணிக்கு எங்கிருந்து வருகிறது பணம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணிக்கு எங்கிருந்து வருகிறது பணம்?

Updated : செப் 16, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (56)
இளைஞரணி, உதயநிதி, திமுக, தூர்வாறும் பணி, குளங்கள்

சென்னை : தி.மு.க., இளைஞர் அணிச் செயலர், உதயநிதி தலைமையில் நடந்து வரும், நீர்நிலை பராமரிப்பு பணிகளுக்கு, எங்கிருந்து பணம் வருகிறது என்ற கேள்வி, தி.மு.க.,வில் எழுந்துள்ளது.

கடந்த, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி, தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அப்போது அவர், தமிழகம் முழுவதும், 'நமக்கு நாமே' நடைபயணத்தை துவக்கினார். தற்போது, இளைஞரணி செயலராக, அவரது மகன், உதயநிதி நியமிக்கப்பட்டதும், அவர் தலைமையில், நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளில், இளைஞரணியினர் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில், இப்பணிகளை பார்வையிடுவதற்காக, முதல்கட்ட சுற்றுப் பயணத்தை, உதயநிதி துவக்கினார். மதுரை, திருவாரூர், திருக்குவளையில் உள்ள குளங்களை, பொது மக்கள் பயன்பாட்டிற்காக, துார் வாரும் பணிகளை, இளைஞரணியினர் முடித்துள்ளனர். துார் வாரப்பட்ட குளத்தில் விரிக்கப்பட்ட, சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று, உதயநிதி பார்வையிட்டார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.

அதில், 'குடியாட்சி சிந்தனை துளியும் இல்லாத, முடியாட்சி நினைப்பில் மிதக்கும் இவர்களா... மக்கள் நலன் கருதி, நல்லாட்சி கொடுப்பர்; வேடிக்கை மனிதர்கள், கொத்தடிமை உடன்பிறப்புகள்' என, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வெளியூர்களில், உதயநிதியை வரவேற்கும் பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்ட விளம்பரங்களில், ஸ்டாலின் படத்தை விட, உதயநிதி படத்தை பெரிதாக போட்டுள்ளதும், கட்சியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

மூத்த மாவட்ட செயலர்கள், 'மாஜி' அமைச்சர்களின் படங்களும், பெயர்களும், இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதனால், அவர்களும், இளைஞர் அணியினர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கிடையில், உதயநிதியின் துார் வாரும் பணிகளுக்கு, எங்கிருந்து பணம் வருகிறது என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கும், 'மாஜி'க்களுக்கும் சந்தேகம் வந்துள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வெளி மாவட்டங்களுக்கு, உதயநிதி செல்கிறார் என்றால், அவரது வரவேற்புக்கு மட்டும், லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எந்த வருமானமும் இல்லாத, இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள், செலவு செய்ய முடியாமல் அலறுகின்றனர். இந்த நிலைமையில், அரசுக்கு போட்டியாக, குளம், ஏரிகளை துார் வாரும் பணிக்கு, அவர்களால் செலவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குளம், ஏரி துார் வாரும் பணிகளுக்கு, கட்சி தலைமை பணம் கொடுக்கிறதா அல்லது உதயநிதியின் சொந்த பணமா என, மூத்த மாவட்ட செயலர்கள், விவாதிக்கத் துவங்கி உள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X