அண்மையில், என் வீட்டிற்கு வந்த உறவினரின், 20 வயது மகன், கிளம்பும் முன், மொபைல் போனை எடுத்து பார்த்து விட்டு கிளம்பினார். மொபைல் போன் என்பது, அனைவருக்கும் இப்போது, ஆறாம் விரலாக, இன்னொரு உறுப்பாக மாறி விட்டது என்பதால், அந்த இளைஞரின் செயல், எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.ஆனால் அவர், வீட்டிற்கு போக வேண்டிய பாதையில் போகாமல், எதிர் திசையில், தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினார். வீட்டுக்குப் போகாமல், வெளியே எங்காவது போகிறாரா என்ற எண்ணத்தில், 'என்னப்பா... இப்படி போறே...' என, கேட்டேன்.அப்போது தான், எங்கெங்கு போலீசார் நின்று, 'ஹெல்மெட்' போடாமல் செல்பவர்களை பிடிக்கின்றனர் என்ற தகவலை, நண்பர்களுக்குள் பரிமாறிக் கொள்ள, மொபைல் போன், 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'குரூப்' துவக்கியுள்ளனர் என்பதை அறிந்தேன்.அதில் வந்த தகவலின்படி தான், நண்பரின் மகன், வழக்கமாக போகும் பாதையில், வாகனங்களை மறித்து, போலீசார் ஆய்வு செய்து கொண்டிருப்பதை அறிந்து, மாற்றுப் பாதையில் சொல்ல முயன்றதன் மர்மம் விளங்கியது.
அது போல, கடந்த வாரம் நடந்த நிகழ்வு ஒன்றும் ஞாபகத்திற்கு வருகிறது... இரு சக்கர வாகனத்தில், தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் எதிர்பாராத வகையில், பெண் ஒருவர், சட்டென சாலைக்கு வர, 'பிரேக்' பிடிக்க வாய்ப்பில்லாமல், சாலையில் விழுந்து விட்டேன்.அடியொன்றும் காயம் அதிகமில்லாததால், எழுந்து, ஆடையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டு, அலுவலகம் வந்து விட்டேன். மதிய உணவு இடைவேளையின் போது, ஹெல்மெட்டை தற்செயலாக பார்த்தேன்; அதிர்ச்சி ஏற்பட்டது.ஹெல்மெட்டின் பக்கவாட்டில், கூரான பொருள் ஏதோ குத்தியதற்கான அடையாளம் இருந்தது; அதில் பூசப்பட்டிருந்த, 'பெயின்ட்' சில, செ.மீ., உதிர்ந்து போயிருந்தது. சாலையில் நீட்டிக் கொண்டிருந்த கல்லின் கூர்முனையோ அல்லது இரும்பு கம்பியின் முனையோ, ஹெல்மெட்டை தாக்கியிருக்கலாம் என்பதை அறிந்தேன்.கீழே விழுந்ததில், தலையில் அடிபட்ட போதிலும், தலைக்கவசம் அணிந்து இருந்ததால், எந்த பாதிப்பும் இன்றி, எழுந்து செல்ல முடிந்தது. ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால், இந்த கட்டுரையை எழுத முடிந்திருக்காது.ஏனென்றால், எண் சாண் உடம்பிற்கு, சிரசே பிரதானம். ஒருவர் உடலில், எந்த பாகம் பாதிக்கப்பட்டாலும், சில காலம் உயிர் வாழ முடியும். ஆனால், தலை இல்லாமல், உயிர் வாழ முடியாது.பரபரப்பில்லாத ஒரு சாலையில் நடந்த, அந்த சிறிய விபத்தே, இத்தகைய விளைவை தருமானால், வாகன பரபரப்பு அதிகமுள்ள நகரங்களில், வாகன ஓட்டிகள், எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும்...சில, ஆயிரமாக இருந்த, இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை, லட்சத்தை தாண்டி விட்டது. சில, 100 ரூபாய்க்குள் விலை இருக்கும், தலைக்கவசத்தை வாங்காத மன நிலையை, எப்படி எழுதுவது என, தெரியவில்லை.
வாழ்க்கையின் தேவைக்காகவும், அவசியத்துக்காகவும், இன்றைய நாள்களில் பயணம் என்பது, தவிர்க்க இயலாதது தான். நடக்க ஆரம்பித்த மனிதன், இப்போது, பறக்க ஆரம்பித்து இருக்கிறான். அவனின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் உச்சமாக, இன்றளவும் உலகம் கொண்டாடுவது, சக்கரத்தைத் தான். அந்த சக்கரம் தான், பலர் உயிரை பறிக்கவும் செய்கிறது!போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு, கடும் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும், மோட்டார் வாகன விதிகள், கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும், கெடுபிடியாக பின்பற்றப் படுகின்றன. அதற்கு ஆதரவாக எழும் குரல்கள் கொஞ்சமாகவே உள்ளன; எதிர்ப்பு குரல்கள் தான், அதிகமாக உள்ளன.இணையதளங்களில் அதிகம் பரவும், 'மீம்ஸ்'கள் தலைக்கவசமோ அல்லது காப்பீடோ இல்லாத வாகனங்களை ஆய்வு செய்யும், போலீசாரை பற்றியதாக தான் இருக்கிறது. இதனால், போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் போலீசார், பல தரப்பினரின் அதிருப்திகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இது, சரியானதல்ல!
இயல்பாகவே, அதிக வேகத்துக்கு ஏற்றதாக இல்லாத, நம் நாட்டு சாலைகளில், இருசக்கர வாகனத்தை பறக்க வைக்கும் முயற்சிகளில், விலை மதிப்பில்லா எத்தனையோ உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தனி மனிதன், வாகனங்களை வைத்துக் கொள்வதற்கும், ஓட்டுனர் உரிமம் பெறவும், கடுமையான விதிகள் அனுசரிக்கப்படுகின்றன.மத்திய ஆசியாவின், ஜோர்டான் போன்ற நாடுகளின் சாலைகளில், இருசக்கர வாகனங்கள் கண்ணில் படுவதே இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் தான், தனி மனிதனின் வாகன ஆசைகளுக்கு, பெரிதாக தடை ஏதும் இல்லை. ஆட்களுக்கு இணையான எண்ணிக்கையில், இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.சாலையோரங்களில் கூட, மனிதர்கள், கால்நடைகள் நடந்து செல்லக் கூட முடியாத அளவிற்கு, இருசக்கர வாகனங்கள் பெருத்து விட்டன.படித்தவர், படிக்காதவர் என்றில்லாமல், யாருக்கு வேண்டுமானாலும், இரு சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன. உரிமம் பெறுவதற்கும், மிக எளிமையான விதிகளே உள்ளன. இத்தனை வசதிகளை செய்திருக்கும் அரசு, மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அவர்களின் உயிருக்கான பாதுகாப்பான பயணம் மட்டுமே; வேறு ஒன்றுமில்லை.ஏனென்றால், இந்த நாட்டில் நடக்கும் வாகன விபத்துகளில் பெரும்பான்மையானவை, தலையில் அடிபட்டு இறப்பதாகத் தான் உள்ளன.அதிக விலை கொடுத்து, யானை வாங்கி விட்டு, சிறிய விலையில், அங்குசம் வாங்க யோசிக்கும் நபர்களாக, ஹெல்மெட் வாங்காத பல, இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளனர்.அதுபோல, வாங்கிய ஹெல்மெட்டுகளையும், வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது வைத்து விட்டு, போலீசாரை பார்க்கும் போது மட்டும், தலையில் மாட்டிக் கொள்ளும், 'அதி புத்திசாலி'களை தினமும் காண முடிகிறது.அத்தகையோர், ஹெல்மெட்டை தலையில் அணியாதவர்களை விட, மட்டமானவர்களாகத் தான் தெரிகின்றனர். ஹெல்மெட் என்பது, தலைக்கு தானே தவிர, பெட்ரோல் டேங்கிற்கு கவசமோ அல்லது, 'ஹேண்டில் பாரில்' தொங்க விடும், அழகு தோரணமோ அல்ல!ஹெல்மெட் அணியாததற்கு அவர்கள் சொல்லும் பதில், 'ஹெல்மெட் போட்டால், தலை முடி கலைகிறது; முடி கொட்டிப் போகிறது' என்பதாக இருக்கிறது. 'முடி கொட்டிப் போனால், வளர்த்து விடலாம். உயிர் போனால், என்ன செய்வீர்கள்...' என்ற கேள்விக்கு, என்ன பதில் வைத்துள்ளனரோ தெரியவில்லை.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களே... உங்களை கவனித்துக் கொண்டே இருப்பது, போலீசாரின் வேலையல்ல. இருசக்கர வாகனம் ஓட்டும் போது, தலைக்கு ஹெல்மெட் போடாமல், போலீசாரிடம் இருந்து தப்பிக்க, பயங்கரம் குற்றம் செய்த குற்றவாளி போல, இண்டு, சந்துகளில் நுழைந்து, சுற்றிப் போவதில், என்ன ஆனந்தம் இருக்கிறது?போக்குவரத்து போலீசார் உங்களை தடுத்து நிறுத்தும் போது, ஹெல்மெட் அணிந்தபடி, சான்றுகளை கம்பீரமாக அவர்களிடம் காட்டுங்கள். அதனால் கிடைக்கும் ஆனந்த அனுபவத்தை, அனுபவித்து பாருங்கள்.நகரங்களின் பிரதான சாலைகளில், இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி, பந்தயம் நடத்துவதும், சாகசத்துக்கு பயன்படுத்துவதும், பலருக்கும் துன்பத்தை அளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் மட்டுமின்றி, அப்பாவிகளும் விபத்தில் சிக்கி, பாதிக்கப்படுகின்றனர்.'அடி உதவுவது போல, அண்ணன், தம்பி உதவ மாட்டார்' என்பர்.
அது, உண்மை தான். சாதாரணமாக, ௧௦௦ ரூபாயாக அபராதத் தொகை இருந்த போது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தலையில், ஹெல்மெட்டை அதிகமாக காண முடியவில்லை.இப்போது, அபராதத் தொகை, 1,000 ரூபாய்க்கு மேல் ஆன பிறகு, ஹெல்மெட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு, தங்கள் உயிரைப் பற்றிய பயத்தை விட, செலுத்த வேண்டிய அபராத தொகையைப் பற்றிய பயம் தான் காரணம்.அண்டை மாநிலமான கர்நாடகாவின், பெங்களூரு நகரில், இருசக்கர வாகன ஓட்டிகள் எப்போதும், ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதை, இயல்பாகவே கடைபிடிக்கின்றனர். பின் இருக்கையில் அமர்வோரும், ஹெல்மெட் அணியும், நாகரிக பழக்கம் உள்ளது.ஆனால், 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து, முன் தோன்றிய மூத்த குடி' என, நம்மை நாமே பாராட்டும் தமிழக மாநிலத்தவர், ஹெல்மெட்டை மனதார அணிவதில்லை.விபத்துகளில் சிக்கி, உங்களை மண் மூடாமல் இருக்க வேண்டுமெனில், தலைக்கவசம் அணிவதே, நிகழ்காலத்தின் நிர்பந்தம்.இருசக்கர வாகன உயரம் கூட இல்லாத சிறார்களிடம், வாகனங்களை ஓட்டக் கொடுப்பதும், அவர்கள் ஓட்டுவதை ரசிப்பதும், நாகரிகத்தின் வளர்ச்சியல்ல... பெற்றோரே, பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!சாலை போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களை, மத்திய அரசு உயர்த்தி இருப்பதை, வரவேற்க வேண்டுமே தவிர, விமர்சிக்க வேண்டியதில்லை. அரசின் வாகன விதிகளை, மிகச் சரியாக கடைபிடிக்காமல், தன் உயிரையும் காத்துக் கொள்ள தவறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராதம், குறைந்த தண்டனை தான்.
சில தினங்களுக்கு முன், மத்திய, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்கரி, 'அபராதங்களை யாரும் செலுத்தாத நிலை வர வேண்டும் என்பதே என் ஆசை; அபராதம் அதிகமாக இருக்கிறது என கருதும் மாநிலங்கள், தொகையை சற்று குறைத்துக் கொள்ளலாம்' என்றார்.அமைச்சர் கட்கரியின் ஆசை போலவே, அபராதம் மட்டுமல்லாது, விபத்துகளே இல்லாத நாட்கள் வர வேண்டும் என்பதே, என்னைப் போன்றோரின் விருப்பம். நம்புவோம்... தலைக்கவசத்தை உயிரை காப்பாற்ற, அனைவரும் அணியும் நிலை விரைவில் வந்து விடும் என்று!
தொடர்புக்கு:இ - மெயில்: kumar.selva28769@gmail.comமொபைல் எண்: 90800 06180அழகர்சமூக ஆர்வலர்