புதுடில்லி : தன் பணித் திறன் குறித்த தவறான அறிக்கையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு வழங்கிய, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வன சேவை அதிகாரி, சஞ்சிவ் சதுர்வேதி, பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார்.
இந்திய வன சேவை அதிகாரியான, சஞ்சிவ் சதுர்வேதி, 44, பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியதால், பணியில் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
வழக்கு:
கடந்த, 2012 - 16 காலத்தின்போது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினார். அங்கு நடந்த ஊழலை வெளிப்படுத்தியதால், அவருக்கு எதிராக காய் நகர்த்தல் துவங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும், அதிகாரிகளின் பணித்திறன் குறித்த அறிக்கை வெளியிடப்படும். இதன்படி, 2015 - 16 ஆண்டுக்கான அறிக்கையில், தன் பணி குறித்த அறிக்கையில் எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டிருந்ததை எதிர்த்து, தீர்ப்பாயத்தில், சஞ்சிவ் சதுர்வேதி வழக்கு தொடர்ந்தார்.
உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள, சி.ஏ.டி., எனப்படும் மத்திய நிர்வாக தீர்ப்பாய கிளையில், இவ்வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, டில்லியில் உள்ள, தலைமை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. நைனிடால் கிளையில், சஞ்சிவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்து. இதை எதிர்த்து, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில், சதுர்வேதி வழக்கு தொடர்ந்தார்.
கண்டனம்:
திட்டமிட்டு, பழிவாங்கும் நோக்கத்தோடு, சதுர்வேதி குறித்து தவறான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை, மத்திய அரசும், எய்ம்ஸ் மருத்துவமனையும் நிறைவேற்றவில்லை. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சதுர்வேதி தொடர்ந்தார்.
அப்போது, மன்னிப்பு கேட்ட மத்திய அரசு, இழப்பீட்டு தொகையை வழங்குவதாக கூறியது. அதன்படி, அதிகாரி சதுர்வேதிக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மத்திய அரசு சமீபத்தில் அனுப்பியது.
அபராதம்:
அதை, பிரதமரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு, சதுர்வேதி அனுப்பியுள்ளார். இதற்கு முன், ஹரியானா வனத் துறையில் நடந்த ஊழலை வெளிப்படுத்தியதற்காக, காங்., முதல்வர், புபிந்தர் சிங் ஹுடா அரசு அளித்த நெருக்கடிகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மாநில அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த, 2011ல் ஹரியானா அரசு வழங்கிய, 10 ஆயிரம் ரூபாயையும், பிரதமர் நிவாரண நிதிக்கு சதுர்வேதி வழங்கியிருந்தார். மேலும், பிலிப்பைன்ஸ் நாடு, 2015ல் அளித்த, ரமோன் மகசேசே விருதுடன் வழங்கப்பட்ட ரொக்கத்தையும், பிரதமர் நிவாரண நிதிக்கு அவர் அளித்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE