பெங்களூரு : பிறந்த நாளை, குடும்பத்தினருடன் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட போலீசாருக்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், பாஸ்கர் ராவ், இனிப்பான செய்தி தெரிவித்துள்ளார். போலீசாரின் பிறந்த நாளுக்கு, கட்டாயமாக விடுமுறை அளிக்கும்படி, உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு உட்பட, கர்நாடகா மாநிலம் முழுவதும், போலீசார், இரவு பகல் பாராமல், பணியில் ஈடுபடுகின்றனர். அரசின் மற்ற துறைகளின் ஊழியர்கள் போல, போலீஸ் துறை சார்ந்தவர்களுக்கு, விடுமுறை சலுகைகள் கிடைப்பது இல்லை.
பண்டிகை உட்பட மற்ற சிறப்பு நாட்களில், அரசு ஊழியர்கள் விடுமுறையை அனுபவிக்கின்றனர். ஆனால், அன்றும் போலீசார் பணியாற்ற வேண்டிஉள்ளது. குறைந்தபட்சம், தங்களின் பிறந்த நாளன்றாவது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிக்கும் வாய்ப்பும், போலீசாருக்கு கிடைப்பதில்லை.
இந்நிலையில், போலீஸ் துறையினருக்கு, அவர்களின் பிறந்த நாளன்று, கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டுமென, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், பாஸ்கர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு என, அனைவருக்கும் பொருந்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அதிகாரிகள் உட்பட, போலீசாரின் பிறந்த நாளன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து, பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பிறந்த நாளன்று அவர்களுக்கு, அந்தந்த காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகள் அல்லது பொறுப்பில் உள்ள அதிகாரிகள், நேரடியாக வாழ்த்து அட்டை வழங்கி வாழ்த்து கூறுவர்.
'மன நிம்மதி கிடைக்கும்'
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், பாஸ்கர் ராவ் கூறியதாவது:கடும் நெருக்கடியில், ஓய்வின்றி பணியாற்றும் போலீசாருக்கு விடுமுறை கிடைப்பதே இல்லை. பண்டிகை நாட்களிலும், குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. அனைத்து பண்டிகைகளுக்கும், விடுமுறை அளிப்பது சிரமம். எனவே, போலீசாரின் பிறந்த நாளுக்கு விடுமுறை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். போலீசார், தங்கள் குடும்பத்தோடு, ஓய்வாக பிறந்த நாளை கொண்டாடுவதால், அவர்களுக்கு மன நிம்மதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE