விரைவில்! இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

Updated : செப் 18, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (25)
Advertisement
காஷ்மீர் விவகாரம்:சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி,: 'காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், இயல்பு நிலை முழுமையாக திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை, விரைவாக எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தேவையின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கலாம்' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகளால், மாநிலத்தில் பதற்றம் ஏற்படாமல் தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.கட்டுப்பாடுகளை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ. நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.


வழக்கு'இன்டர்நெட், செல்போன்' சேவைகள் முடக்கப்பட்டதை எதிர்த்து, 'காஷ்மீர் டைம்ஸ்' என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் அனுராதா பாசின் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமர்வு கூறியதாவது:காஷ்மீரில், இன்றும் நிலைமை அப்படியே உள்ளதா? இது உள்ளூர் பிரச்னை; இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும்.ஜம்மு - காஷ்மீரில் முழுமையான இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில நிர்வாகமும் எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, நலனை கருத்தில் கொண்டு, தேவையின் அடிப்படையில், படிப்படியாக இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதை நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கவில்லை. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளோம்.இவ்வாறு, அமர்வு கூறியது.


நம்பிக்கைமுன்னதாக, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் இருந்து மற்ற பத்திரிகைகள் அனைத்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில நிர்வாகமும் எடுத்து வருகின்றன. அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.மாநிலத்தில் மூன்று முனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. ஒரு பக்கம், பிரிவினைவாதிகள், மறுபக்கம், அண்டை நாட்டு பயங்கரவாதிகள். இவர்களை தவிர, வெளியில் இருந்து வரும் உதவிகளுடன், உள்ளூர் பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த, 1990ல் இருந்து, இந்தாண்டு, ஆக., 5 வரை, மாநிலத்தில் நடந்த, 71,038 பயங்கரவாத சம்பவங்களில், 41,866 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர, 5,292 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர். ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், ஒரு குண்டுகள் கூட பாயவில்லை.


சிகிச்சைகாஷ்மீரில் மருத்துவ வசதி அளிக்கப்படவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், ஆக., 5 முதல், செப்., 15 வரை, 10.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். காஷ்மீரில், 105 காவல் நிலையங்களில், 93 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, 88 சதவீத இடங்களில், கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் லடாக்கில், 100 சதவீதம் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.படிப்படியாக, மாநிலம் முழுவதும் அமைதி திரும்பவும், இயல்பு நிலையை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.இந்த வழக்குகளில், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என, கேட்டுக் கொள்கிறோம். அது, நமது நாட்டுக்கு வெளியே, மற்றவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அளித்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


வைகோ வழக்கில், 'நோட்டீஸ்'


தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், மாநில நிர்வாகத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, வரும், 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, பரூக் அப்துல்லா, 81, மிகவும் கடுமையான, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின்படி, எவ்வித விசாரணையும் இல்லாமல், ஒருவரை, இரண்டு ஆண்டுகள் வரை, சிறையில் வைக்க முடியும்.இந்த சட்டம், பரூக் அப்துல்லாவின் தந்தையான, ஷேக் அப்துல்லா, மாநில முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. மாநிலத்தில் இருந்து மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க, 1978ல், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், கல்வீசி தாக்குதல் நடத்துவோர் ஆகியோர் மீது, இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கிய அரசியல் தலைவர் மீது, இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே, முதல் முறை.


ஆசாத் காஷ்மீர் செல்லலாம்


தன் சொந்த மாநிலமான ஜம்மு - காஷ்மீருக்கு செல்வதற்கு, அதன் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, குலாம் நபி ஆசாதுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.'மாநிலத்துக்கு செல்வதற்கு மூன்று முறை முயன்றும், அனுமதிக்க மாநில நிர்வாகம் மறுத்துவிட்டது. சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, ஆசாத் சார்பில் வாதிடப்பட்டது.அதை ஏற்றுக் கொண்ட, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, 'ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்த்நாக் மாவட்டங்களுக்கு சென்று, குலாம் நபி ஆசாத் மக்களை சந்திக்கலாம். ஆனால், அரசியல் கூட்டம் எதையும் நடத்தக் கூடாது' என, உத்தரவில் கூறியுள்ளது.


தாரிகாமிக்கு அனுமதி


டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், முகமது யூசுப் தாரிகாமி, ஜம்மு - காஷ்மீருக்கு திரும்பிச் செல்வதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவரை சந்திக்க, கட்சியின் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரிக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி சந்தித்த, யெச்சூரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், தாரிகாமிக்கு, டில்லியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தியிருந்தார்.அதன்படி, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த மாதம், 9ம் தேதி, தாரிகாமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.'டாக்டர்கள் அனுமதி அளித்தால், அவர், தன் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லலாம்; இதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.


'காஷ்மீருக்கு செல்வோம்'ஜம்மு - காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, குழந்தைகள் உரிமைகளுக்காக போராடி வரும், சமூக ஆர்வலர்கள், ஏனாக்சி கங்குலி, பேராசிரியர் சாந்தா சின்ஹா மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. 'தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியவில்லை' என, அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது:இது மிக மிக முக்கியமான பிரச்னை. உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என, மனுதாரர்கள் கூறியுள்ளனர். உண்மையில் என்ன பிரச்னை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தேவைப்பட்டால், நான் உயர் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


மனு ஏற்புஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கும் ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.இந்தப் பிரச்னை தொடர்பாக, தாக்கல் செய்த சில மனுக்களை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அக்., முதல் வாரத்தில் இருந்து அந்த அமர்வு, இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.'அந்த மனுக்களுடன் இணைத்து, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் மனுவும் விசாரிக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது. அதே நேரத்தில், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களை விசாரணைக்கு ஏற்க, அமர்வு மறுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
18-செப்-201901:41:59 IST Report Abuse
Raj இது என்ன குளிர் சாதன பெட்டியா..வேணும்னா உடனே "இயல்பு நிலை" கொண்டு வருவதற்கு..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-செப்-201919:14:33 IST Report Abuse
Pugazh V வேறொரு செய்தியில் காஷ்மீர் ல தோட்டா வெடிக்கவே இல்லை என்று அ__ ஷ ஸ்டேட்மென்ட் வுடறார். இங்கே உச்ச நீதிமன்றம் "விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ஆர்டர் போடுகச. அப்ப...அ__ ஷ வுட்டது அண்டப்புளுகு தானே?
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
17-செப்-201916:36:11 IST Report Abuse
Ravi உச்ச நீதி மன்றம் இதில் தலை இட கூடாது , இது நாட்டு பாதுகாப்பு சம்பந்த பட்டது , நீதிபதி ஆனாலும் அவரும் ஒரு குடிமகன் . மீறி தலையிட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X