கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவின் முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜீவ் குமார் எங்கு இருக்கிறார் என விளக்கம் கேட்டு, மாநில தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலருக்கு, சி.பி.ஐ., கடிதம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இடைக்கால தடைஇம்மாநிலத்தைச் சேர்ந்த சாரதா நிதி நிறுவனம், 2014ல், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 2,500 கோடி ரூபாய் அளவுக்கு, மக்கள் பணத்தை மோசடி செய்தது.இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக, கோல்கட்டா போலீஸ் உயர் அதிகாரி, ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.பின், இந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அதிகாரி ராஜீவ் குமார், கோல்கட்டா கமிஷனராக நியமிக்கப்பட்டு, பின் வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் கமிஷனர், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள், அவரது வீட்டுக்கு சென்றனர். இது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ராஜீவ் குமாரை கைது செய்ய, இடைக்கால தடை விதித்து, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்மன்
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு, ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என, சி.பி.ஐ., அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி, ராஜீவ் குமார் தரப்பில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கோல்கட்டா சி.பி.ஐ., அலுவலகத்தில், ராஜீவ் குமார் ஆஜராக, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அவரது 'மொபைல் போனை' தொடர்பு கொண்ட போது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.இதையடுத்து, கோல்கட்டாவில் இருந்து, அவர் தப்பிவிடாமல் இருக்க, விமான நிலையங்களில், பலத்த கண்காணிப்பு போடப்பட்டது.
இந்நிலையில், குற்றவியல் பிரிவு, ஏ.டி.ஜி.பி.,யாக பதவி வகித்து வரும் ராஜீவ் குமார், ஒரு மாத விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.'ராஜீவ் குமார் எங்கு இருக்கிறார்; அவருக்கு எந்த அடிப்படையில், ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்பட்டது.'அவர் எப்போது பணிக்கு திரும்புவார்' என, விளக்கம் கேட்டு, மாநில தலைமை செயலர் மலாய் டே மற்றும் உள்துறை செயலர், ஆலாபன் பந்தோபாத்யாய் ஆகியோருக்கு, சி.பி.ஐ., கடிதம் அளித்தது. நேற்று காலை, தலைமை செயலகத்துக்கு வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த கடிதத்தை அளித்தனர். இதே போன்று ஒரு கடிதம், மாநில டி.ஜி.பி., வீரேந்திராவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் கமிஷனர் ராஜீவ் குமார், சி.பி.ஐ.,க்கு, 'இ - மெயில்' மூலம், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கோரிக்கை
அதில், சில தனிப்பட்ட காரணங்களுக்காக, இம்மாதம், 25 வரை, விடுப்பில் உள்ளதாகவும், விசாரணைக்கு ஆஜராக ஒரு மாதம் அவகாசம் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.இதற்கிடையில், ராஜீவ் குமார் தரப்பில், முன் ஜாமின் கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.மேலும், ராஜீவ் குமாருக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்குமாறு, சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE