''என்னதான், கோர்ட் உத்தரவு போட்டாலும், இவங்கள திருத்தவே முடியாது. ஓ.கே., நான் கம்ப்ளைன்ட் பண்றேன்,'' என, மொபைல் போனில் பேசியபடியே, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா.., ரொம்ப டென்ஷனா பேசிட்டே வர்றீங்க,'' என்று மெதுவாக கேட்டாள்.
''அதை அப்புறம் சொல்றேன். உனக்கு உடம்பு பரவாயில்லையா''
''ம்... ம்... பரவாயில்லைங்க்கா. இப்ப சொல்லுங்க,''
''அட... எங்கேயும் பேனர் வைக்கக்கூடாதுன்னு, ஐகோர்ட் கடுமையான உத்தரவு போட்டும், விஜயகாந்த் கட்சிக்காரங்க, சகட்டுமேனிக்கு வைச்சு தள்ளிட்டாங்க. போலீசாரும், ஒன்பது கேஸ் போட்டாங்களாம். இருந்தாலும், பேனர் வச்சு, பொதுமக்களுக்கு பெரிய இடைஞ்சல் பண்ணிட்டாங்க மித்து,''
''ஒருவேளை இங்கேயும் ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தாத்தான், துாக்கம் கலையுமோ?'' ஆதங்கப்பட்டாள் சித்ரா, ''அக்கா, ஊரக வளர்ச்சித்துறை பற்றி ஏற்கனவே ஒரு மேட்டர் பேசினோேம? இன்னும் அந்த அதிகாரி அப்படித்தான் பண்றாராம். ரிசர்வ்' சைட் இல்லாத இடம், வழித்தடம் இல்லாத இடத்துக்கு 'அப்ரூவல்' கொடுக்கணும்னு, பி.டி.ஓ.,க்களை மிரட்றாராம்,''
''ஒரு சிலர் முடியாதுன்னு சொன்னாலும், துணை முதல்வர் மகனுக்கு வேண்டியவங்க, மினிஸ்டருக்கு சொந்தக்காரங்கன்னு, பொய் சொல்றாராம். அதனால, இதுபத்தி மாவட்ட அதிகாரியிடம் புகார் கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,''
''இன்னும் பெரிசா பிரச்னை வந்தாதான், பெரிய அதிகாரிக்கு தெரியும்போல,'' என்ற மித்ரா,
''அதிகாரிங்களும் கூட்டு சேர்ந்து 'பிசினஸ்' பண்ண ஆரம்பிச்சுட் டாங்க'' என, புதிர் போட்டாள்.
''இந்த கூத்து எங்கீங்க்கா?''
''ரிஜிஸ்டர் ஆபீசில், பத்திரப்பதிவு செய்ய, மொபைல் போன், ஆதார்னு எல்லா விவரத்தையும் வாங்கிக்கறாங்க. கிரயம் முடிச்சவங்களுக்கு, புரோக்கர்கள் போன் பண்ணி, 'சப்-ரிஜிஸ்டர் ஐயாதான் நம்பர் கொடுத்தாரு. பட்டா மாறுதல், சப்-டிவிஷன், இப்படி எல்லாத்தையும் ஒரு வாரத்துக்குள் நாங்களே செஞ்சு கொடுக்கறோம்,''
''வெளி மார்க்கெட்டை விட, கம்மியாவே முடிச்சு தர்றோம் சார். தேவைனா, கூப்பிடுங்கன்னு,' சொல்றாங்களாம். இப்படியே, பலரிடம், 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை கறந்திடறாங்களாம்,''
''ஆமாங்க்கா... கிரயம் பண்றவங்களோட 'டீடெய்ல்' எப்படி, புரோக்கருக்கு கிடைக்குது?''
''அட... ரிஜிஸ்டர் ஆபீசுக்குள் இருக்கிற சில கறுப்பு ஆடுகள்தான் இந்த மாதிரி வேலை செய்யறாங்களாம். புரோக்கர்களிடம் இருக்கிற 'நட்பின்' காரணமாக நல்லா சம்பாதிக்கிறாங்களாம். ஏற்கனவே, விஜிலென்ஸ் ரெய்டு வந்தும் கூட, இன்னும் இவங்க திருந்தின மாதிரி தெரியலை,''
''எல்லா ஆபீசிலும், அதிகாரிங்க, 'தில்லாலங்கடி' அதிகமாயிட்டே போகுது. இங்க பாருங்க, 'கோழிப்பண்ணை ஊரிலுள்ள நுாத்துக்கும் அதிகமான லேடீஸ் மெம்பரா உள்ள சொைஸட்டில, யூனிபார்ம் தைச்சு கொடுக்கற கூலியில, சிக்கன நடவடிக்கைன்னு சொல்லி, பல ஆயிரம் ரூபாயை பிடிச்சு வைச்சிருக்காங்க,''
''ஏதாவது அவசரம்னா வாங்கிக்கோங்கன்னு, அதிகாரிங்க சொல்லிட்டு, இப்ப கேட்டதற்கு, 'அதெல்லாம் கணக்கு முடிச்ச பின்னாடிதான் தருவோம்னு, முரண்டு பிடிக்கிறாங்களாம். இதனால, என்ன பண்றதுன்னு தெரியாம, லேடீஸ் கஷ்டப்படறாங்களாம். அந்த பணமெல்லாம் மேல்மட்ட 'லெவல்' அதிகாரிக்கு போயிடுச்சுன்னு ஒரு பேச்சு உலா வருதாம்க்கா,''
''இதே மாதிரி ஒரு கோடி ரூபா, 'டிபாசிட்'ட எடுத்து, 'ரோலிங்' விட்டு அதிகாரிங்க வேட்டையில, பட்டைய கிளப்பிட்டாங்களாம்,''
''ஏங்க்கா... கையில காசிருந்தா, 'ரோலிங்' விடறது வழக்கம் தானே...' என்றாள் மித்ரா.
''உன்னோட காசா இருந்தா சரி, கவர்மென்ட் காச எடுத்து, 'ரோலிங்' விடறது சரியா மித்து? கால்நடைத்துறை திட்டத்துக்காக, ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கி, வங்கிக்கு வந்திருக்கு. திட்டம் துவங்க, ஒன்றரை மாசத்துக்கு மேலாகும்னு, பண பரிவர்த் தனை செய்ய ஆபீஸர்ஸ் அலுவலர்கள் எடுத்து, கூட்டா சேர்ந்து, 'ரோலிங்' விட்டிருக்காங்க''
''மினிஸ்டரோட ஆய்வு கூட்டத்துல தான், இந்த விஷயம் வெளியே தெரிஞ்சிருக்கு. 'தாட்கோ' கடனுதவி வழங்கும் திட்டத்துல வெளியே பணம் கொடுக்கணும். அதுக்குள்ள, 'ரோலிங்'ல போன பணத்த பிடிச்சிடணும்னு திட்டம் போட்டிருக்காங்க,''
''அதில ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு, பணம் கொடுத்திருக்காங்க; இப்ப, சரியான நேரத்துக்குள்ள திரும்ப வாங்க முடியாம 'திருதிரு'ன்னு முழிக்கிறாங்களாம். இனி, எப்படி பயனாளிகளுக்கு வழங்க முடியும்னு, புதுசா வந்த அதிகாரி, குழம்பி தவிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.
அதற்குள் மித்ராவின் தாயார், கஞ்சியும், டீயும் கொண்டு வந்தார். அதைப்பார்த்த சித்ரா, ''கஞ்சி குடிக்கிற அளவுக்கு சீரியஸ் ஆயிடுச்சா?'' என சிரித்தவாறு, டீ டம்ளரை எடுத்தாள்.
''அக்கா... லிங்கேஸ்வரர் ஊரில், ரோடு போடற பிரச்னை இன்னும் ஒரு முடிவுக்கு வரலையாம்,'' என்றவாறு, கஞ்சியை பருகினாள்.
''அதென்னடி பிரச்னை?''
''அக்கா... டவுனிலிருந்து 'செம்மண்' பேர் கொண்ட கிராம ரோடு விரிவாக்கப் பணியில், தனிப்பட்ட இருவரது 'ஈகோ' பிரச்னையால், இழுபறி நீடிக்கிறது. இதைப்பத்தி, தாலுகா ஆபீசில் நடந்த பேச்சு வார்த்தையில், 'ஒரு சிலர் முகமூடி அணிந்து பேசுகின்றனராம். ஊருக்குள் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் பேசி, நல்ல பெயர் எடுக்க முற்படுகின்றனர். இந்த நிலைபாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்' என, அதிகாரி ஒருவர் ஓபனா பேசினாராம்,''
''இது இப்படியிருக்க, அதே பகுதியில், ஆக்கிரமிப்பை அளவிட சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், ஒரு சிலருக்கு ஆதர வாக, 'டைம்' கொடுத்து வருவது, பல 'யூகங்களுக்கு' வழி வகுத்துள்ளது,'' என்ற மித்ரா, ''அக்கா... சீட்டாட்ட கிளப் ஓவரா நடக்குதாம்,'' என, சிட்டி பக்கம் பேச்சை மாற்றினாள்.
''ஆமாண்டி மித்து. நீ சொல்றது கரெக்ட்தான். சிட்டி கமிஷனர் ஆபீஸ் பக்கத்தில், சூதாட்ட கிளப் மீண்டும் செயல்படுது. மொத்தம் நாலு பேரு பார்ட்னராம். சாயங்காலம் ஆரம்பிச்சு, மறுநாள் காலையில் வரைக்கும் நடக்குது. லட்சக்கணக்கில் கொட்டுற கிளப்பில், '....பாளையம்' ஸ்டேஷனில் ஆரம்பித்து 'ைஹ அபிஷயல்ஸ்' 'லகரங்களில்'தான் 'டீலிங்' நடக்குது,''
''இப்படி பக்கத்திலயே, கமிஷனர் ஆபீஸ் இருந்தும் இப்படி நடக்கறது, பெரிய அதிகாரிக்கு தெரியுமாங்க்கா,''
''அது எனக்கு தெரியலைடி. இதைவிட இன்னொரு கூத்து சொல்றேன் கேளு. காங்கயம் சப்-டிவிஷனில், உள்ள எஸ்.ஐ., ஒருத்தர், வழக்கு தொடர்பாக விசாரிக்க ஒரு வீட்டுக்கு போனாராம். அங்கிருந்து கிளம்பும்போது, தளதளன்னு வளர்ந்துக்கிற சேவலை துாக்கிட்டு வந்துட்டாராம்,''''இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டுக்காரர், மேலதிகாரிகிட்ட புலம்பியிருக்காரு. உடனே, சம்பந்தப்பட்டவரை கூப்பிட்டு, 'டோஸ்' விட்டதால், திருப்பி கொடுத்தாராம்,'' என சிரித்த சித்ரா, ஒலித்த மொபைல் போனை, ''முருகேஷ் அங்கிள், நாளை அப்பா வருவார்,'' என கூறி போனை அணைத்தாள்.
''கையில எது கிடைச்சாலும் சுருட்டறதே வேலையா போச்சுங்க. இதேமாதிரி சேவல் மேட்டர் நான் ஒண்ணு சொல்றேன்,''
''மூலனுாரில் சமீபத்தில் நடந்த சேவல் கட்டில், பலரும் பணத்தை வைச்சு விளையாடினர். அதில, 'பொருள் ஆட்சி செய்யும்' ஊரை சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிக்கு தெரிந்த நபர் ஒருவர், லட்சங்களை கட்டி ஏமாந்துட்டாராம். இதனால, அவர் பிரச்னை செய்ய, தகராறு முத்திடுச்சு,''
''இதைப்பத்தி தகவல் கெடைச்ச உடன், எஸ்.பி., தன்னோட டீமை அனுப்பி வச்சுருக்காங்க. ஆனா, அவங்க போறதுக்குள்ள, கும்பல் 'எஸ்கேப்' ஆயிடுச்சாம். பல மாசமா சேவல் கட்டு நடக்கறதை மறைச்ச 'விசுவாச' போலீசார், 'டீம்' வருவதையும் சொல்லி, எட்டப்பன் வேலையை நல்லாவே பார்த்திருக்காங்களாம்,'' என, மித்ரா கூறி முடித்தாள்.
''ஓ.கே., டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன். 'டேக் கேர்,'' என்ற சித்ரா, ஹெல்மெட் அணிந்து கொண்டே, வண்டியே நோக்கி சென்றாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE