கேவாடியா, ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சரியான முடிவு எடுப்பதற்கு நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு பார்வையே உதவியது'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலத்தில் நர்மதை நதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை முதல் முறையாக முழு கொள்ளளவை
எட்டியது.
அதையொட்டி நேற்று நடந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சிலையான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையையும் அவர் பார்வையிட்டார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு
பார்வையே எங்களுக்கு துாண்டுதலாக அமைந்திருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது பல சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அப்போது ஐதராபாத் சமஸ்தானம் இணைய மறுத்தது.
ஐதராபாத் நிஜாமுடன் படேல் பேச்சு நடத்தினார். ஆனால் ஐதராபாத்தை தனி நாடாக நிஜாம்
அறிவித்தார். கடந்த 1948ல் படேல் அதிரடியான
நடவடிக்கை எடுத்தார். ராணுவ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நமது நாட்டுடன் இணைக்கப்பட்டது.
அவருடைய அந்த தொலைநோக்கு பார்வையே தற்போது எங்களுக்கு துாண்டுதலாக இருந்தது. ஜம்மு - காஷ்மீர் தற்போது நாட்டுடன்
முழுமையாக இணைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான சுதந்திர தேவி சிலையை நாள்தோறும்
10 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர்.
ஆனால் திறந்து வைக்கப்பட்டு 11 மாதங்களேயான படேல் சிலையை நாள்தோறும் 8,500 பேர் பார்வையிடுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அடையும்.
சர்தார் சரோவர் அணை குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் என நான்கு மாநில மக்களுக்கு உதவுகிறது. இந்த அணை அமைப்பதற்கு உதவிய லட்சக்கணக்கானோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2017ல் தான் 455 அடி உயரத்துக்கு
தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வளர்ச்சி திட்டங்களுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதுதான் நமது கலாசாரம். இயற்கை நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கொடை. அதை பராமரிப்பது நமது கடமை.
இவ்வாறு அவர் பேசி னார்.
படேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்டவற்றையும் மோடி திறந்து வைத்தார். ஹெலிகாப்டரில் இருந்து படேல் சிலை குறித்து தான் எடுத்த 'வீடியோ'வை சமூக வலைதளத்தில் மோடி வெளியிட்டார்.
பா.ஜ.வைச் சேர்ந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகளில்
பங்கேற்றனர்.