சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு : காத்திருக்கும் சவால்களும், சாதகங்களும்

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019
Share
Advertisement
பொதுத் துறை வங்கிகள். சவால்களும், சாதகங்களும்

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு, எதிர்பார்த்தது போலவே, நாடு முழுவதும் சூடான விவாதத்தை கிளப்பியிருக்கிறது.அளவில் பெரிய, ஆற்றல் மிக்க வங்கிகளை உருவாக்கும் நோக்கத்துடன், 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, நான்கு பெரிய வங்கிகள் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது துணிச்சலான, தேவையான நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனினும், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கம் தரப்பில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திட்டமிட்டபடி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா இணைய உள்ளன. இது, நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியை உருவாக்கும். சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைய உள்ளது.


வலியுறுத்தல்

அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன், கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி இணைகின்றன. இதன் மூலம், 2017ல், 27 ஆக இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை, 12 ஆக குறையும்.இந்த இணைப்பு நடவடிக்கைக்கான காரணங்கள், இணைப்பால் ஏற்படக்கூடிய பலன்கள், இதில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்ப்புக்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.

வங்கி இணைப்பு, புதிய கருத்தாக்கம் அல்ல. கடந்த, 1997 முதல், 1999 வரை, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், 700 வங்கிகள் இப்படி இணைக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.இந்தியாவில் எடுத்துக் கொண்டால், 1991க்குப் பின், 30 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்மை காலத்தில், மூன்று முக்கிய இணைப்புகள் நிகழ்ந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, பரோடா வங்கியுடன், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இணைக்கப்பட்டன. அதற்கு முன், தனியார் துறையில் கோடக் வங்கி, இங்க் வைஸ்யா வங்கிஉடன் இணைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல், 1991ல், 'நரசிம்மன் குழு' பொதுத் துறை வங்கிகளை இணைத்து, பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளது. நீண்ட காலமாகவே, இந்த பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 10 வங்கிகள் இணைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, வங்கிகள் இணைப்பு, நான்கு விதமாக நிகழ்கின்றன. பெரிய அளவிலான செயல்பாடு, அதிக செயல்திறன், நிதிக்கான செலவு குறைவது மற்றும் 'ரிஸ்க்' பரவலாக்கம் ஆகியவை வாயிலாக செலவுகளை குறைக்க உதவுவது, முதல் வகை.

பெரிய அளவிலான செயல்பாடு மற்றும் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் வாயிலாக, வருவாய் பெருக்கத்திற்கான வாய்ப்பு, இரண்டாவது வகை. பொருளாதார சூழல்கள் காரணமாகவும் இணைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். இவை தவிர, நிர்வாகப் பலன்கள், கையகப்படுத்துதல் போன்றவற்றுக்காகவும் இணைப்புகள் நிகழ்கின்றன.

இந்தியாவை பொருத்தவரை, ஆற்றல் மிக்க பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கத்துடன், வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளன. சர்வதேச அளவில் செயல்படவும், இது வழிவகுக்கும் என, கருதப்படுகிறது.


அவசியம்

வங்கிகள் இணைப்பால், அவற்றின் கடன் வழங்கும் ஆற்றல் அதிகரிக்கும்; தேசிய மற்றும் சர்வதேச அளவில், அதன் வீச்சு அதிகரிக்கும்; செயல்திறன் உயரும் என, அரசு தரப்பில் கருதப்படுகிறது. 'பெரிய வங்கிகள் தான் நாட்டின் தேவை' என, ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். வலுவான பெரிய வங்கிகள் தேவை என்பதை பொருளாதார வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.சர்வதேச அளவிலான வங்கிகளுடன் ஒப்பிடும் போது, இந்திய வங்கிகள், சிறிய வங்கிகளாகவே இருக்கின்றன. எனவே, பெரிய வங்கிகளை உருவாக்குவது அவசியமாகிறது.இதனால், வங்கிகளின் போட்டித் தன்மை மேம்படும் வாய்ப்புள்ளது. 'கோர் பேங்கிங் சிஸ்டம்' எனப்படும், மைய வங்கி அமைப்பின் கீழ் செயல்படுவதும், பலன் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில், வங்கிகளின் செயல்பாட்டை வைத்து பார்க்கையில், இந்தியாவிலும் பெரிய வங்கிகள் செயல்பட்டாக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.தற்போதைய சூழலில், சர்வதேச அளவிலான பெரிய வங்கிகள் பட்டியலில், இந்தியாவின் இடம் மோசமானதாகவே இருக்கிறது. உலகின், 100 பெரிய வங்கிகள் பட்டியலில், இந்தியாவின் ஸ்டேட் வங்கி மட்டுமே இடம்பெற்றுள்ளது.


கடும் எதிர்ப்பு

இந்தப் பட்டியலில், சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.முதல், 10 இடங்கள் பட்டியலில், நான்கு சீன வங்கிகள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் கூட, இந்திய வங்கிகளை முந்தியுள்ளன.சீன பொருளாதார வளர்ச்சிக்கு, அந்நாட்டின் பெரிய வங்கிகளே முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. சீனாவில் உள்ளது போல, குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சியை மையமாக கொண்ட, நான்கு அல்லது ஐந்து பெரிய வங்கிகள் முறையை இந்தியாவும் பின்பற்றலாம் எனக் கூறப்படுகிறது.

சீனாவின் விவசாய வங்கி, உலகின் மூன்றாவது பெரிய வங்கியாக திகழ்கிறது. இது, விவசாய துறையில் கவனம் செலுத்தி வருகிறது.வலுவான பெரிய வங்கிகள் தேவை எனும் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், இது போன்ற காரணங்களை முன்வைக்கும் நிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் தரப்பில், இணைப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.இணைப்பு நடவடிக்கையானது, ஆட்குறைப்பு மற்றும் கிளைகள் மூடலுக்கு வழிவகுக்கும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இணைப்பு நடவடிக்கையால், எந்த வேலையிழப்பும் ஏற்படாது என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இத்தகைய எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க, இணைப்பு நடவடிக்கையில், சவால்களும் இல்லாமல் இல்லை; கேள்விகளும் இல்லாமல் இல்லை.வங்கிகள் இணைப்பு என்பது, அறிவித்தவுடன் நிகழ்ந்துவிடக் கூடிய மாயம் அல்ல. இதற்கு காலம் ஆகும். வங்கிகளின் செயல்பாடுகள் இணைக்கப்படுவது ஒருபுறமிருக்க, அவற்றின் தொழில்நுட்ப வசதிகள் ஒருங்கிணைக்கப்படுவது, பெரிய சவாலாக இருக்கும்.


ஒருங்கிணைப்பு

இணைப்புக்கு முன், இணையதள வங்கி சேவை மற்றும் மொபைல்' வங்கி சேவைக்கு, வேறு வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும். இனி, இவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை.உண்மையில், தொழில்நுட்ப வசதிகள் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட, 24 மாதங்கள் முதல், 36 மாதங்கள் வரை ஆகலாம் என்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

அதே போல, வாராக்கடன் நிர்வாகமும் சவாலாக இருக்கும். வாராக்கடன் வசூலில், வங்கிகள் மாறுபட்ட வழிமுறையை பின்பற்றி வந்திருக்கலாம். இணைப்பிற்கு பின், இவை ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காண்பதில், நடைமுறை சிக்கல் ஏற்படலாம்.மேலும், வங்கிகள் தனிப்பட்ட செயல்பாட்டு கலாசாரங்களை கொண்டிருக்கலாம். இவை முரண்பாடுகள் இல்லாமல் இணைக்கப்பட்டு, செயல்திறன் மிக்க தன்மை உருவாக்கப்பட வேண்டும். மனிதவளத்தை கையாள்வதும், நுட்பமான சவாலாக இருக்கும்.

இது போன்ற நடைமுறை சவால்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த இணைப்பு நடவடிக்கையின் நோக்கம் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இணைப்பு அவசியம் என்றாலும், இவை மோசமான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒரு கருத்து இருக்கிறது.


லாப, நஷ்ட அறிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியால், அரசு, அவசரகதியில் மேற்கொண்ட நடவடிக்கை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இணைப்பு, பலவீனமான லாப, நஷ்ட அறிக்கை கொண்ட வங்கியை உருவாக்கலாம் என்ற விமர்சனம் இருக்கிறது.கடந்த காலங்களில், வங்கிகள் இணைப்பு எதிர்பார்த்த பலன் அளித்துள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது. எனினும், இது ஆழமான ஆய்வுக்கு உரியது. பொதுவில் பார்க்கும் போது, வங்கிகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அவை பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கவும், அளவில் பெரிய, வலுவான வங்கிகள் அவசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இவை, நடைமுறையில் எந்தவிதமான பலனை அளிக்கின்றன என்பது, இணைப்பு செயல்படுத்தப்படும் விதத்தில் உள்ளது.


வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுமா?

வங்கிகள் இணைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இவை, வாடிக்கையாளர் சேவையில், எந்த அளவு தாக்கம் செலுத்தும் என்பதே, பொதுமக்கள் மனதில் உள்ள முக்கிய கேள்வி. இணைப்பு வாடிக்கையாளர் சேவை மீது தாக்கம் செலுத்தும்; ஆனால், பாதிப்பை ஏற்படுத்தாது; எனவே, அச்சம் கொள்ள தேவையில்லை என்பதே இதற்கான பதில். வங்கிகள் இணைப்பு தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

*இணைப்பில், ஒரு வங்கி பிரதான வங்கியாக கருதப்படும். மற்ற வங்கி அல்லது வங்கிகள் இணைக்கப்படும் வங்கியாக கருதப்படும். பொதுவாக, பிரதான வங்கி வாடிக்கையாளர்களுக்கு, பெரிய அளவில் தாக்கம் இருக்காது. இணைக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு, சிறிய அளவில் தாக்கம் இருக்கும்

* வங்கிகளில் போட்டிருக்கும் பணம் பற்றி கவலைப்பட வேண்டாம். பொதுத் துறை வங்கிகளில், வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாகவே இருக்கும் இணைக்கப்படும் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு, புதிய கணக்கு எண், அடையாள எண் தரலாம். எனினும் இது உடனடியாக நிகழாது

* இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அவை இணைக்கப்பட்டு, ஒரே புதிய கணக்கு வழங்கப்படும் பில் செலுத்துவது, கடன் தவணை மற்றும் முதலீடுகளுக்கு, தானியங்கி பணம் செலுத்தும் கட்டளை கொடுத்துள்ளவர்கள், அதற்கான வங்கி, ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டை மாற்றும் அவசியம் ஏற்படலாம்

* புதிய, ஐ.எப்.எஸ்.சி., குறியீடு பெற்ற வாடிக்கையாளர்கள், அதை மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களிடம், 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். வருமான வரித்துறை, காப்பீடு நிறுவனங்கள் போன்றவற்றில் இதை மேற்கொள்ள வேண்டிஇருக்கும்

*இணைப்புக்கு பின், புதிய காசோலை புத்தகம் வழங்கப்படலாம்
* புதிய வங்கி தகவல் தெரிவிக்கும் வரை, தற்போதைய, 'ஏ.டி.எம்., கார்டு'கள் பயன்படும்  வைப்பு நிதி மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் உடனடியாக மாற்றம் இருக்காது. ஆனால், கணக்கு புதுப்பிக்கப்படும் போது, புதிய வங்கியின் வட்டி விகிதம் அமலுக்கு வரும் 
*இணைப்புக்கு பின், ஆவணங்களை பராமரிக்கும் காகித வேலைகள் அதிகரிக்கலாம்
* வங்கிகள் மூலம் பெற்ற காப்பீடு பாலிசிகளை, பிரதான வங்கி ஒப்பந்தம் செய்துள்ள காப்பீடு நிறுவனத்திற்கு மாற்றும் நிலை வரலாம்
* இணைக்கப்படும் வங்கிகளின் இணையதளங்கள், மொபைல் வங்கி சேவை, தொடர்ந்து சில காலம் செயல்படும் என்றாலும், இவை ஒருங்கிணைக்கப்படும்.

ரா.நரசிம்மன், கட்டுரையாளர்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X