ராஞ்சி, "வடகிழக்கு மாநிலமான அசாமில் நடத்தப்பட்டது போல தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்" என மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. தலைவருமான அமித் ஷா கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுபோல நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில்
இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்க முடியுமா? அவ்வாறு இருக்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் மற்ற நாட்டவர்கள் நம்முடைய நாட்டில் தங்குவதற்கு மட்டும் எப்படி அனுமதிக்க முடியும்.
அதனால் குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்பதில்
உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர்
பேசினார்.
இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று நடந்த பா.ஜ. கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அது நம் நாட்டின் ஒரு பகுதி என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை காங். முன்னாள் தலைவர் ராகுலும் அவருடைய கட்சியும் விளக்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பா.ஜ. தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. வங்கதேச விடுதலைப் போரில் வென்ற உடன் அப்போது பிரதமராக இருந்த காங்.கின் இந்திராவுக்கு பா.ஜ.வைச் சேர்ந்த வாஜ்பாய் வாழ்த்து தெரிவித்தார்.
ஐ.நா.வில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் நாட்டின் சார்பில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயியை அப்போது பிரதமராக இருந்த காங்.கின் பி.வி. நரசிம்ம ராவ் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அவர்
பேசினார்.