சென்னை, :புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கட்டணம் மற்றும் விதிமீறல்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில மாநிலங்களில் வாகனத்தின் விலையை விட அதிக அபராதத் தொகை விதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.இந்நிலையில் புதியமோட்டார் வாகன சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் அபராத தொகை மற்றும் கட்டணத் தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் என்ற அமைப்பு நேற்று நாடு தழுவிய லாரிகள் 'ஸ்டிரைக்' நடத்தியது.இதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 4.65 லட்சம் லாரிகளில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் 100 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு 1 கோடி ரூபாய் வாடகை வருவாயிலும் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன செயலர் தன்ராஜ் கூறியதாவது:-அடையாள வேலைநிறுத்தத்தில் 4 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் என்றாலும் நலிவடைந்துள்ள லாரி தொழிலை மீட்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.தமிழகத்தைப் பொறுத்தவரை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நான்கு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். ஆலோசனைக்குப் பின்பும் இப்போதைய நிலையே தொடர வேண்டும். இல்லாவிட்டால் லாரிகளை எடைக்கு விற்பதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE