சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

போக்கு காட்டும் பொல்லாத கூட்டம்!

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 போக்கு காட்டும் பொல்லாத கூட்டம்!


சமீபத்தில் வெளியான, 'தர்ம பிரபு' என்ற படத்தில் வரும் வசனம் இது...எமதர்மன்: அரசியல்வாதிகள் நம்மால் அறிவிக்கப்படாத நம் பிரதிநிதிகள்; 'சுனாமி' மற்றும் பூகம்பம் போல், மனித உயிர்களை கொத்து கொத்தாக எடுப்பவர்கள்; என் வேலையை சுலபமாக்குபவர்கள்!
சித்திரகுப்தன்: ஆனாலும் பிரபு, அரசியல்வாதிகளால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது என்பது...எமதர்மன்: யாரடா அப்பாவி மக்கள்; கேவலம்... பணத்திற்காக தங்களது ஓட்டுகளை விற்கிறார்களே... இவர்களா அப்பாவி மக்கள்; இவர்கள், அறிவில்லாதவர்கள்; இவர்களே குற்றவாளிகள். எதையும் அறிந்து, தெரிந்து, புரிந்து செயல்படாத இவர்களாலேயே, தப்பான மனிதர்கள் அரசியலில் இருக்கின்றனர்.படத்தில், எமதர்மன் சொன்னது நுாற்றுக்கு நுாறு உண்மை. அதனால் தான், அத்தனை அரசியல்வாதிகளும் செய்து வந்த குற்றத்தை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, 'பேனர்' ஜெயகோபாலும் செய்தார்; சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானார். 'நாம செஞ்சதைத் தானே ஜெயகோபாலும் செய்திருக்கிறார்' எனும் குற்ற உணர்வு, தலைமைக்கு இருப்பதால் தான், மறைவான இடத்தில் ஜெயகோபால், 'பாதுகாப்பாக' இருக்கிறார்.

விடாது ஆன்மா!
எல்லா தந்தைக்குமே பெண் குழந்தை என்பது, இன்னொரு தாய். எல்லா பெண் குழந்தைக்கும் தந்தை என்பவர், முதல் குழந்தை. துர்மரணம் எய்திய சுபஸ்ரீயின் குடும்பத்திலும், இந்த உணர்வு தான் இருந்திருக்கும். இன்று, அந்த அப்பா, அழுது துடிக்கிறார். அந்த தகப்பனைப் பார்த்து, சுபஸ்ரீயின் ஆன்மாவும் நிச்சயம் துடித்தபடி தான் இருக்கும். துக்கத்திலும், அதை விடவும் உக்கிரமான கோபத்திலும்!'மனித சக்திக்கு அப்பாற்பட்டு சில சக்திகள் இவ்வுலகில் இருக்கின்றன' என்பது உண்மை என்றால், துர்மரணத்தை சந்தித்த மனிதர்களின் ஆன்மாவும் அந்த சக்திகளில் ஒன்று என்பது உண்மை என்றால், சட்டத்திற்கு போக்கு காட்டும் பொல்லாத கூட்டத்தை, சுபஸ்ரீயின் ஆன்மா நிச்சயம் தண்டிக்கும்.காரணம், அந்த ஆன்மாவின் நியாயமான கேள்விகளுக்கு எவரிடமும் பதில் கிடையாது; நம்மிடமும் தான்!* அதெப்படி... அரசே மது விற்பனை செய்யுமாம்; ஆனால், அதை குடித்து குற்றம் செய்தால் அல்லது அதை குடித்ததால், குற்றம் செய்தால், குடித்தவனுக்கு மட்டும் தான் தண்டனையாம்; அவனுக்கு ஊற்றிக் கொடுத்த அரசுக்கு கிடையாதாம்.'டாஸ்மாக்' விஷயத்தில் இப்படி ஒரு சட்டம்; 'பேனர்' விஷயத்தில் அச்சடிக்க சொன்னவனின் கைதுக்கு முன், அச்சகத்திற்கு, 'சீல்!'* ரத்த சகதியில் என்னைப் பார்த்த பின்பும், 'முறையான அனுமதி இன்றி, இனி, பேனர் வைக்க கூடாது' என்று அறிக்கை விடும் அரசியல்வாதிகளே... ஒருவேளை, எனக்கு மரணம் நிகழாமல் இருந்திருந்தால், இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பீர்களா; பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பீர்களா?சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பேனர், அனுமதி பெற்றதா, இல்லையா என்பதை, நீங்கள் தெரிந்து கொள்ள, உங்களுக்கு ஓர் உயிர் வேண்டும்; அப்படித்தானே?* அப்படி என்ன, விளம்பர போதை உங்களுக்கு... காது குத்துக்கும், கல்யாணத்திற்கும், கருமாதிக்கும் பேனர் வைத்து, என்ன புகழை சம்பாதித்தீர்கள்; நீங்கள் வைக்கும் பேனரில் உள்ள உங்கள் படங்கள், மக்களிடம் எவ்வளவு வசை வாங்குகின்றன என்பது, உங்களுக்குத் தெரியுமா?உங்கள் பதவி, அதிகாரம் என்பதெல்லாம், மக்கள் உங்களுக்கு தந்த பொறுப்பு, பிச்சை என்பதை, ஏன் உணர மறுக்குறீர்கள்?* நான் பலியான நாளில், அந்த வழியில் எனக்கு முன் எந்த ஒரு, அரசு வாகனமும் செல்லவில்லையா; எந்த ஒரு, காவல் துறை அதிகாரியும் செல்லவில்லையா; இல்லை... கண்டிப்பாக எல்லா வாகனமும் கடந்திருக்கும். ஆனால், மக்கள் பணத்தில் ஊதியம் வாங்கும் யாருக்கும் அக்கறை இல்லை.அப்படி இருந்திருந்தால், பேனர்கள் வைத்த மறு நிமிடமே, அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கும்; நானும் உயிரோடு இருந்திருப்பேன்; சரி தானே?* நீதிபதிகள் கோபம் கொண்டவுடன், 'சுபஸ்ரீ மரணத்திற்கு நிவாரணம் வழங்குகிறோம்' என, அரசு தரப்பில் சொல்கிறீர்களே... இனி, உங்கள் வீட்டில் ஏதேனும் பணத்தேவை என்றால், உங்கள் உறவுகளில் ஒன்றை, அரசின் ஓட்டை பேருந்திற்கோ, சரியாக மூடப்படாத அரசு மின் பெட்டியின் மின்சாரத்திற்கோ,உயிரறுக்கும், 'மாஞ்சா' நுாலிற்கோ பலி கொடுத்து, 'நிவாரணம்' எனும் பெயரில், மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொள்வீர்களா?* மக்கள் பணத்தில் ஊதியம் வாங்கும் உங்களில், யாருக்காவது குற்ற உணர்வு இருந்திருந்தால், ஒருவராவது என் துர்மரணத்திற்கு பொறுப்பேற்று, பணியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். யாராவது அப்படி செய்தீர்களா; செய்ய மாட்டீர்கள்!காரணம், உங்கள் அலட்சியத்தால் மக்கள் உயிர் போனால், 'விபத்து' என்றே அதை அடையாளப்படுத்த பழகி விட்டீர்களே தவிர, 'அது, நாம் செய்த கொலை' என, நீங்கள் உணரவில்லை.* ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் முகத்தில், 'கர்சீப்' கட்டி வந்து உட்கார்ந்த நடிகர் கூட்டம், என் மரணத்திற்காக வெகுண்டெழுந்து, 'வீடியோ' வெளியிடும் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் யாரும் அப்படிச் செய்யவில்லை.அரசியல்வாதிகளைப் போலவே, 'மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைக்காதீர்கள்' என, அறிக்கை தான் வெளியிட்டனர். ஆமாம்... குடும்பத்தை விட நடிகன் பெரிது என, நினைக்கும் முட்டாள் ரசிகன், திரையரங்க வளாகத்திற்குள் பேனர் வைத்து, பால் ஊற்றவில்லை எனில், எப்படி பிழைப்பு நடத்துவது?* மூளையை அழுக அனுமதித்து விட்ட மக்களே... ஒரு அரசு ஊழியருக்கு பிரச்னை என்றால், அவர் சார்ந்துள்ள சங்கம், அவருக்கு பின் நிற்கிறது. ஒரு அரசியல்வாதிக்கு பிரச்னை என்றால், அவர் சார்ந்துள்ள கட்சி, பின்னால் நிற்கிறது. ஆனால், மக்களில் ஒருவனுக்கு பிரச்னை என்றால்...அசுர பலம் கொண்ட மக்கள் கூட்டம், என்றாவது ஒன்று சேர்ந்திருக்கிறதா; சேர மாட்டீர்கள். மேற்சொன்னவர்களின் அராஜகத்திற்கு உங்களின் இந்த பலவீனமே அடிப்படை!* நான் உயிரோடு இருந்த கடைசி நாட்களில், எனக்கு வந்த, 'வாட்ஸ் ஆப்' செய்தி அடிப்படையில் கேட்கிறேன். யோசித்து பாருங்கள் மக்களே... வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தப் போகின்றனர் என்றால், 'எங்களுக்கு சேவை செய்ய ஊதியம் வாங்கும் நீங்கள், எங்கள் அனுமதியின்றி, வங்கிச் சேவையை எப்படி நிறுத்தலாம்' என கேட்டு, நாம் ஒன்று கூட வேண்டும்.அதை விடுத்து, 'நான்கு நாட்கள் வங்கி ஊழியர்கள் போராட போகின்றனராம்; தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்...' என, 'வாட்ஸ் ஆப்'பில் குறுஞ்செய்தி அனுப்புகிறோம்; இது, அவமானம் இல்லையா?* 'சுத்தி நின்று வேடிக்கை பார்த்துட்டு, மொபைல்ல போட்டோ எடுத்துட்டு இருந்தாங்களே தவிர, பொண்ணை துாக்க, மூன்று பேரைத் தவிர யாரும் வரலைங்க...' என, கண்ணீர் உதிரச் சொல்கிறார், என்னை ரத்தமும், சதையுமாக, சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர்.சரி தானே... ஓடிச் சென்று உதவ, ரத்தச் சகதியில் கிடந்தது, உங்கள் வீட்டுப் பெண்ணா; இல்லை... உங்களை பெரும் மயக்கத்தில் வைத்திருக்கும் நடிகர், நடிகையா; எங்கே தொலைத்தீர்கள் மனிதத்தை?* இல்ல திருமணத்திற்கு பேனர் வைத்த ஜெயகோபால், தலைமறைவாகி விட்டாராம்; அவரைப் பிடிக்க தனிப்படையாம்... யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்? முதல்வரும், துணை முதல்வரும், 'சரணடைந்து விடு ஜெயகோபால்' என, சொன்னால் போதுமே!இல்லை... 'ஜெயகோபால் மாலைக்குள் கைது செய்யப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டால் போதுமே. ஆனால், சொல்ல மாட்டார்கள். எப்படிச் சொல்வர்; லாரிக்கு அடியில் சிதைந்து கிடந்த என் மேல் கிடந்தது, அவர்கள் கட்சி, 'பேனர்' அல்லவா!அம்மா - அப்பா - நான். இப்படி சந்தோஷமாய் வாழ்ந்து வந்த என் கூட்டை கலைத்தவர்களே... உறுதியாகச் சொல்கிறேன். உங்கள் அதிகாரப்பிடியில் சிக்கியிருக்கும் சட்டம், உங்களை தண்டிக்காமல் விட்டாலும், உங்கள் மனசாட்சி, உங்களை உறுத்தாவிட்டாலும், நான் தண்டிப்பேன்.கடமையை மறந்த உங்கள் அத்தனை பேரையும் தண்டிப்பேன்; என் கனவுகளை சிதைத்த உங்களையும், உங்களை கண்டித்து திருத்தாத, உங்கள் குடும்பத்தினரையும் நிச்சயம் தண்டிப்பேன்; இது சத்தியம்!தெய்வம் எப்படியோ; இந்த சுபஸ்ரீ நின்று கொல்வேன்!('ஆன்மா பழி வாங்குவதற்கு, இது என்ன சினிமாவா...' என்கிறதா உங்கள் நெஞ்சம்; ஏன் கூடாது, சினிமா காட்டும் அக்கிரமங்கள் நிஜத்தில் அரங்கேறும் போது, இது ஏன் நடக்காது; நடக்கும்; நடக்க வேண்டும்; இதுவே, சுபஸ்ரீயின் மரணத்திற்கு, கண்ணீர் சிந்திய அத்தனை உயிர்களின் விருப்பம்.)- வாஞ்சிநாதன்vanjinath40@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
05-அக்-201917:24:01 IST Report Abuse
kandhan. அருமையான பதிவு தினமலருக்கு வாழ்த்துக்கள் கந்தன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X