பயணிகளின் சேவகன்... இன்று (செப்.20) ரயில்வே பாதுகாப்பு படை தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளின் 'சேவகன்'... இன்று (செப்.20) 'ரயில்வே பாதுகாப்பு படை' தினம்

Added : செப் 20, 2019 | கருத்துகள் (1)
Share
பயணிகளின் 'சேவகன்'...  இன்று (செப்.20) 'ரயில்வே பாதுகாப்பு படை' தினம்

இந்திய ரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் இப்படை இயங்குகிறது. மத்திய ஆயுதகாவல் படைகளுள் ஒன்று இது. இதன் தலைமையகம் டில்லி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு இவர்கள் கையில்தான்.

செக்யூரிட்டி படைஇந்த படை 1957 ல் 'செக்யூரிட்டி படை' யாக உருவாக்கப்பட்டது. ஆயுதங்கள் இல்லாததால் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதனால் 1985 செப்.20 முதல் 'செக்யூரிட்டி படை', 'ரயில்வே பாதுகாப்பு படை' யாக மாற்றப்பட்டது. இதையடுத்து முக்கிய அதிகாரங்கள், துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. இந்த படைக்கு ரயில்வே தேர்வு வாரியம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்பட்டோருக்கு உ.பி.,யில் உள்ள லக்னோ ரயில்வே பாதுகாப்பு படை பள்ளியில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த படையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்.20 ல் ரயில்வே பாதுகாப்பு படை தினம் கொண்டாடப்படுகிறது.


படையினரின் பணிகள்:


ரயில் பயணிகள், அவர்களின் உடைமைகளை பாதுகாத்தல், நாசவேலைகள், சதிகாரர்களை கண்காணித்தல், தேவையற்ற நபர்கள் ரயிலில் ஏறுவதை தடுத்தல், ரயில் விபத்துகளை கண்காணித்தல், ஸ்டேஷன் இல்லாத இடங்களில் ரயில் நின்றால் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களின் பணி 8 மணி நேரம். ஆனால் முக்கிய தினங்கள், தேர்தல், பண்டிகை காலங்களில் 24 மணி நேரம் கூட நீடிக்கும்.

பாதுகாப்புக்கு பணிக்குச் செல்லும் போலீசார் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக பிளாட்பாரத்திற்கு சென்று விட வேண்டும். ரயில் ஸ்டேஷனுக்குள் வரும் போதும், செல்லும் போதும் இந்த படையினர் பிளாட் பாரத்தில் கட்டாயம் நிற்க வேண்டும். ரயிலில் பாதுகாப்பிற்கு செல்லும் போலீசார் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி, வயர்லஸ் போன், டார்ச்லைட், முக்கிய குற்றவாளிகளின் புகைப்படம், பாதுகாப்பு பணி கையேடு, பயணிகளுக்கான ஆலோசனை கையேடு, எப்.ஐ.ஆர்., நோட் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.


பயணிகளுக்கு விழிப்புணர்வு


ரயில் மற்றும் பயணிகளை பாதுகாப்பதோடு இவர்கள் பணி முடிந்து விடுவதில்லை. பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஜன்னல் அருகில் நகைகள் வெளியே தெரியும்படி அமர்ந்து பயணிக்க கூடாது. ரயிலிலோ, பிளாட் பாரத்திலோ கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொடக்கூடாது. ரயிலில் அடையாளம் தெரியாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. பயணத்தின் போது மது அருந்துதல், புகைபிடிப்பது கூடாது.

ரயில் தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகளை வைக்க கூடாது. ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிக்க கூடாது. ரயிலில் தொங்கியபடி, ரயில் முன்பு நின்று செல்பி எடுப்பது கூடாது என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவர்கள்தான். ஸ்டேஷன்களில் துாய்மைப்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது போன்றவற்றையும் மேற்கொள்கின்றனர். இவர்களை தொடர்பு கொள்ள மற்றும் அவசர உதவிக்கு 182 யை அழைக்கலாம்.


போலீசாருக்கு சவால்


ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு திருட்டில் ஈடுபடும் வடமாநில கொள்ளையரை பிடிப்பதே சவாலான காரியமாக உள்ளது. ரயில் திருட்டில் பெரும்பாலும் வடமாநில கொள்ளையர்களே ஈடுபடுகின்றனர். கொள்ளையடித்து விட்டு மூன்று, நான்கு மாதங்களுக்கு தமிழகம் பக்கம் வருவதில்லை. இவர்களை கண்டு பிடிப்பதும் சுலபமில்லை. இதனால் அவர்களை பிடிக்க 10 மாதம் முதல் 7 ஆண்டுகள் கூட ஆகின்றன.

சமீபத்தில் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏழு வடமாநில கொள்ளையர்களை பிடித்தனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரயிலில் சென்ற ஏலக்காய், பயணிகளின் நகைகள், பணம் பறிப்பில் ஈடுப்பட்டனர். இந்த கொள்ளையர்களை பீகார், மேற்கு வங்காளம், உ.பி.,க்கு சென்று கைது செய்தனர். பயணிகளிடமும் விழிப்புணர்வு இல்லாததே ரயில் கொள்ளைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சில சமயங்களில் பயணிகளே அவசர அழைப்புக்கு போன் செய்து தவறான தகவ்களை தருவதும் உண்டு.


அரசு உதவுவது இல்லைநாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இதனால் குற்றங்களை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடி செல்லும் போலீசாருக்கு மத்திய அரசிடம் இருந்து உதவியோ, பாதுகாப்போ கிடைப்பதில்லை. அந்த போலீசார் தங்கள் உயிருக்கு பயந்து வெறும் கையுடன் திரும்பும் நிலை பிற மாநிலங்களில் நிலவுகிறது. ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குற்றவாளிகளை தேடிச் செல்லும் போது.. உணவு, தண்ணீர், மொழி பிரச்னைகள் உள்ளன.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் எல்லைக்குள் ரோந்து செல்ல ஜீப், கார், டூவீலர் உள்ளிட்ட வாகன வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்பட வில்லை. ஒவ்வொரு பாதுகாப்பு படைக்கும் குறைந்தது 100 முதல் 250 கி.மீ.,க்கு எல்லைகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்ல அவசர காலத்தில் கூட ரயிலில் தான் பயணிக்க வேண்டியுள்ளது. மிகவும் அவசரம் என்றால் சொந்த செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட தொகையை தாண்டி விட்டால் அந்த பணமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, போலீசாருக்கு கிடைப்பதில்லை. ரயில் குற்றங்களை தடுக்க காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அந்தந்த மாநில மொழி பேசுபவர்களை அந்த மாநிலத்திலேயே பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X