புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜி.கே.ரெட்டிக்கு அரசு சார்பில் 2 வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கடந்த 4 மாதங்களாக டில்லி ஆந்திரா பவனில் தங்கி இருந்தே தனது அலுவல்களை கவனித்து வருகிறார்.

ஜி.கே.ரெட்டிக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளில் மாஜி எம்.பி.,க்கள் தங்கி உள்ளனர். புதிய அரசு, ஆட்சி அமைத்து 4 மாதங்கள் ஆன பிறகும் அவர்கள் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் இருந்து வருகின்றனர். பொதுவாக லோக்சபா கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் எம்.பி.,க்கள் அவர்களின் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதி. 16வது லோக்சபா மே 25 அன்று கலைக்கப்பட்ட நிலையில், அனைத்து அரசு பங்களாக்களும் ஜூன் 25 அன்று காலி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புதிய லோக்சபா பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆன பிறகும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பலர் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அமைச்சகத்தில் இணையமைச்சராக இருக்கும் ஜிகே ரெட்டிக்கு முதலில் ஒதுக்கப்பட்ட வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வசித்து வருவதால், வேறு இடத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, புதிய வீடு ஒதுக்கப்பட்டது. பா.ஜ., தலைமை இயக்கத்திற்கு எதிராக அமைந்துள்ள இந்த வீட்டில் வசித்து வரும் ராதா மோகன் சிங் ,வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளதால் ஜி.கே.ரெட்டி, தற்போது வரை ஆந்திர பவனிலேயே வசித்து வருகிறார்.
மாஜி எம்.பி.,க்கள் தங்களின் அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என கடந்த மாதமே அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு முடிவடைவதற்கு முன்பே மாஜி எம்.பி.,க்களின் வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இருந்தும் மாஜிக்கள் இதவரை வீடுகளை காலி செய்தபாடில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE