'மாஜி' மேயருக்கு, 'பளார்' கணவர் மீது பா.ஜ., நடவடிக்கை

Added : செப் 20, 2019
Advertisement

புதுடில்லி, கட்சி அலுவலகத்தில், பலர் முன்னிலையில், முன்னாள் மேயரான மனைவியை அடித்த கணவரை, கட்சியிலிருந்து, பா.ஜ., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மெஹ்ரூலி மாவட்ட, பா.ஜ., தலைவராக இருப்பவர், ஆசாத் சிங். இவரது மனைவி சரிதா சவுத்ரி.தெற்கு டில்லி மாநகராட்சியின், முன்னாள் மேயரான சரிதா சவுத்ரியும், பா.ஜ.,வில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, விவாகரத்து கோரி, ஆசாத் சிங், வழக்கு தொடர்ந்து உள்ளார்.

டில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை, டில்லி, பா.ஜ., துவக்கியுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க, டில்லி மாநில, பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.டில்லி, பா.ஜ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் மனோஜ் திவாரி, ஆசாத் சிங், சரிதா சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது, ஆசாத் சிங்குக்கும், சரிதா சவுத்ரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆசாத் சிங், சரிதா சவுத்ரியை அடித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரிதா சவுத்ரியை ஆசாத் சிங் அடித்த காட்சியின், 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, ஆசாத் சிங்கை கட்சி பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும், 'பா.ஜ., தலைமை, சஸ்பெண்ட் செய்துள்ளது.

இது பற்றி, டில்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், ''பெண்களை அவமானப்படுத்தும் எந்த சம்பவத்தையும், ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் பற்றி விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். இது பற்றி போலீசார் கூறுகையில், 'ஆசாத் சிங் மீது, இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால், இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரிப்போம்' என்றனர்.ஆசாத் சிங் கூறுகையில், ''சரிதா சவுத்ரி தான், தரக்குறைவாக பேசி, என்னை முதலில் தாக்கினார். என்னை தற்காத்துக் கொள்ளவே, அவரை பிடித்து தள்ளினேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X