அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலட்சியத்தால் மரணம், கொலைக்கு சமம்: கமல்

Added : செப் 20, 2019
Share
Advertisement
 அலட்சியத்தால் மரணம், கொலைக்கு சமம்: கமல்

சென்னை, :''அலட்சியத்தால் ஏற்படும் மரணத்தை, கொலை குற்றமாக கருத வேண்டும்,'' என, நடிகர், கமல் கூறினார். அண்டை நாடான வங்க தேசத்தில் இருந்து வந்த மாணவர்கள், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை, நேற்று, சென்னையில் உள்ள, அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.அப்போது, கமல் அளித்த பேட்டி:வங்கதேசத்தின், ஜங்கல்மெகல் என்ற பகுதியிலிருந்து மாணவர்கள்,என்னை பார்க்க வந்துள்ளனர். கிராமத்தில் இருந்து, ஆறு ஆண்டுகளாக வர முடியாத சூழலில், இவர்கள் இருந்தனர். சமூக ஆர்வலர்களால், இவர்கள் வெளியே அழைத்து வரப்பட்டுள்ளனர். என்னை சந்திக்க அவர்கள் ஆர்வமாக இருந்தனர்; நானும் ஆவலாக இருந்ததால், சந்திப்பு நடந்துள்ளது. இவர்களுடன்இணைந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கிறேன்.இயற்கையால் எல்ேலாருக்கும் மரணம் உண்டு. ஆனால், இங்கு அலட்சியத்தால் மரணம் நிகழ்கிறது. அதை கொலை குற்றமாகவே கருத வேண்டும். இந்த அரசில், கயவர்கள் தப்பிக்கும் நிலை உள்ளது.என் கட்சி மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட பேனர்களை, உரிய அனுமதி பெற்று, பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என, ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். நடிகர் விஜய் கூறியுள்ள கருத்தில், மறைமுகம் இருப்பதாக தெரியவில்லை; நேரடியாகவே சொல்லியுள்ளார். ஆனால், யாரையும் அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை.இவ்வாறு, கமல் கூறினார்.இதற்கிடையில், டுவிட்டரில், கமல் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் எது தெரியுமா... வாழ வேண்டிய பெண்ணின் மரண செய்தியை, பெற்றோர் கேட்பது. சுபஸ்ரீ மரணம் அப்படிப்பட்டது தான். தன் பெண்ணின் ரத்தம், சாலையில் சிந்தியிருப்பதை பார்க்கும் போது, பெற்றோருக்கு மட்டுமல்ல, அனைவரது மனதிலும் திகிலும், மரண வலியும் கண்டிப்பாக வரும்.பெண்களை பெற்றவன் என்ற முறையில், எனக்கும் அப்படித் தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகு, சுபஸ்ரீக்கள் அரசின் அலட்சியத்தால் கொல்லப்படுகின்றனர். கொஞ்சமாவது அறிவு வேண்டாமா... எங்கு பேனர்வைப்பது, வைக்கக் கூடாது என, தெரிய வேண்டாமா... இவர்களை போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காடு அரசியல்வாதிகளாலும், இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படப் போகிறதோ. எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால், 'நாக்கை அறுப்பேன்' என, மிரட்டுவதும் தான், இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்களின் மீது, எனக்கு மயிரிழை அளவு கூட, மரியாதையும், பயமும் கிடையாது.ஒரு வேளை உங்களுக்கு பயம் இருந்தால், என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக, அந்த தவறுகளை தட்டிக் கேட்டு, தீர்வும் தேடித் தரும். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம்; புதிய தலைமுறையை உருவாக்குவோம்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X