அடுத்தது இளைஞர் அணி மாநாடு முப்பெரும் விழா உற்சாகத்தில் விஜயகாந்த்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தது இளைஞர் அணி மாநாடு முப்பெரும் விழா உற்சாகத்தில் விஜயகாந்த்

Added : செப் 21, 2019
அடுத்தது இளைஞர் அணி மாநாடு முப்பெரும் விழா உற்சாகத்தில் விஜயகாந்த்

முப்பெரும் விழாவை தொடர்ந்து, கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில், இளைஞரணி மாநாடு நடத்துவது குறித்து, விஜயகாந்த் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், அமெரிக்காவில் எடுத்த சிகிச்சைக்கு பின், உடல்நலம் தேறி வருகிறார். பேசுவதிலும், நடப்பதிலும், அவருக்கு பிரச்னை உள்ளது. அதற்காக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. உடல்நலம் தேறி வருவதால், கட்சி பணியில், மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில், அவர் இறங்கியுள்ளார். இதன் ஒருபகுதியாக, திருப்பூரில், சமீபத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
நீண்ட நாட்களுக்கு பின், இந்த கூட்டத்தில், விஜயகாந்த் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்பார்த்து, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், திருப்பூரில் திரண்டனர். அதே நாளில், சென்னையில், ம.தி.மு.க.,வும், திருவண்ணாமலையில், தி.மு.க.,வும், முப்பெரும் விழாவை நடத்தின. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்த கூட்டங்களில் மணிக்கணக்கில் பேசினாலும், அது எடுபடவில்லை.திருப்பூரில், தட்டு தடுமாறி விஜயகாந்த், இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
அடுத்த முறை, ஒரு மணி நேரம் பேசுவதாகஅறிவித்தார். அப்போது, விஜயகாந்த், 'ஒரு நாள், எனக்காக விடியும்; அப்போது, மக்களை தங்கத் தட்டில் வைத்து தாலாட்டுவேன்' என்றார்.விஜயகாந்தின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் பரவியது. தோல்விகளால் துவண்டு கிடந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியது. கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த நிர்வாகிகளையும், விஜயகாந்த் பேச்சு சூடேற்றி உள்ளது. மேலும், தி.மு.க., - ம.தி.மு.க., கூட்டங்களை மிஞ்சும் அளவிற்கு, திருப்பூரில் கூட்டம் சேர்ந்ததாக, விஜயகாந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொண்டர்களை, இதே உற்சாகத்தில் வைக்க, விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.
இதற்காக, இளைஞரணி மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனையில், அவர் இறங்கியுள்ளார். விரைவில், இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.இதே போன்று, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை, சென்னைக்கு அழைத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கவும், விஜயகாந்த் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. - நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X